ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை இயக்கிவரும் வேதாந்தா நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டுப் பிரிவு இயக்குநர் கிஷோர் குமார் பேட்டி அளித்துள்ளார்.
அதில், ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைக்கு சட்டப்பூர்வமாக தீர்வுகாண உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்தார். ஆலையிலிருந்து வெளியாகும் மாசு அளவு குறித்து திரட்டப்பட்ட தகவல்கள் மற்றும் தொடர் கண்காணிப்பு ஆகியவை, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்படுவதற்கு பசுமைத் தீர்ப்பாயங்களும், மற்ற நீதிமன்றங்களும் நீண்டகாலத்துக்கு முன்பே சட்டப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் ஆலையின் உரிமம் காலாவதியாவதற்கு முன்பே, அதனை நீட்டிக்கக் கோரி மனு அளித்தும், உரிமம் காலாவதியானபிறகே, கூடுதல் தகவல்களை தமிழக அரசு கேட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். இந்நிலையில் ஆலையை மூடும் பேச்சுக்கே இடமில்லை என்றும் கிஷோர்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.
கிஷோர்குமாரின் இந்த கருத்துக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வேதாந்தா நிறுவன இயக்குநரின் கருத்து, மனித உயிர்களுக்கும், பல்லுயிர் பெருக்கத்துக்கும் எதிரானது என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை, தங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் ஆலை எதிர்ப்பு குழுவினர் கூறுகின்றனர். இந்நிலையில் அரசின் நடவடிக்கையில் யாரும் தலையிட முடியாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.