தமிழ்நாடு

யார் அந்த ராக்கெட் ராஜா?

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள்
அறிந்த பெயர் ராக்கெட் ராஜா. நாடார் மக்கள் சக்தி என்ற இயக்கத்தை நிறுவி
நடத்தி வரும் ராக்கெட் ராஜா தென் மாவட்டங்களில் தனக்கென ஒரு கூட்டத்தை
வைத்துள்ளார். வெங்கடேச பண்ணையார் மறைவிற்கு பிறகு தூத்துக்குடி மாவட்ட
தி.மு.க.செயலாளர் என்.பெரியசாமி தலைமையில் தூத்துக்குடி
முத்தையாபுரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் மாற்று சமூகத்தினை சேர்ந்த
சிலரை பலி வாங்குவேன் என பகிரங்கமாக பேசியதால் பிரபலமானவர்.

தேவர்சமூகத்தின் கட்டத்துரை, தேவேந்திர சமூகத்தின் பசுபதி பாண்டியன், அவரது மனைவி ஜெசிந்தாபாண்டியன் ஆகியோர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். பல நாட்களாக தலைமறைவு வாழ்க்கை வாழ்பவர். ராக்கெட் ராஜா, சுபாஷ் பண்ணையார் என்று ஒரு தரப்பும், சுரேஷ் தேவர் என்று இன்னொரு குரூப்பும், மறைந்த பசுபதி பாண்டியன் குரூப்பும் அடுத்தடுத்து தாக்குதலுக்கு திட்டமிட்டு வந்துள்ளனர்.

ராக்கெட் ராஜாவின் சொந்த ஊர் திசையன்விளை அருகில் உள்ள ஆனைகுடி. அவருடைய தந்தை ஜெகதீசன் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. ஏழு சகோதரர்கள். நான்கு சகோதரிகள். இரு சகோதரர்கள் வழக்கறிஞர்கள். அதில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். கராத்தே செல்வினை கொலை செய்த கட்டத்துரையை கொலை செய்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான ராக்கெட் ராஜா அந்த வழக்கிலிருந்து விடுதலையானார். நாகர்கோவில் சிறையில் கைதி லிங்கம் கழுத்தறுத்து கொல்லப்பட்ட பின்னர் வெங்கடேசப் பண்ணையாரின் தளபதியாய் இயங்கியவர்.

வெங்கடேசபண்ணையார், ஆசைத்தம்பி, கபிலன் என்று அடுத்தடுத்து ரவுடிகள் பலர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் சுபாஷ் பண்ணையாருடன் இணைந்து இயங்கினார் ராக்கெட் ராஜா.

சாட்சி சொல்லக்கூட ஆள் இல்லாத காரணத்தாலும், காவல்துறையில் உள்ளவர்கள் உதவியாலும், ஒருசில பத்திரிகை அதிபர்கள் துணையோடும், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தியதால், ராக்கெட் ராஜா மீது இருந்த அத்தனை வழக்குகளும் தள்ளுபடியாகிவிட்டன.

திசையன்விளை ஆனைகுடி கிராமத்தில் உள்ள ராக்கெட்ராஜாவின் வீட்டில் 24-2-2009 அன்று சோதனை போட்ட காவல்துறை, அங்கு ஒரு பம்ப் ஆக்சன் ரைபிள், (இதன் குண்டு, ஒரு பேட்டரி செல் சைஸ் இருக்குமாம். சுட்டால் சேதாரம் அதிகம்) ஏ.கே.47 துப்பாக்கிக்கு உரிய காலி தோட்டாக்கள் 4 மற்றும் 59-ரவுண்டு தோட்டாக்கள், ஒரு கோடாரி ஆகியவற்றை கைப்பற்றினர். அங்கிருந்த ராக்கெட் ராஜா அண்ணன் கண்ணன் என்பவரும் கைது செய்யப்பட்டார். அரசியல் நெருக்கடி காரணமாக அந்த வழக்கை கிடப்பில் போட்டது காவல்துறை.

மேடையில் சபதம் போட்டு இளைஞர்களை சூடேற்றுவது இவரது ஸ்டைல். அதிவேகமாக கார் ஓட்டுவதினால் ‘ராக்கெட்’ ராஜா என்ற பெயர் ஏற்பட்டுள்ளதாம். ‘நாடார் மக்கள் சக்தி இயக்கம்’ என்ற ஓர் அமைப்பை, கராத்தே செல்வின் நினைவு நாளன்று, வள்ளியூரில் மிகப் பெரிய கூட்டம் கூட்டி, தொடங்கி வைத்தார். சிறுத்தை படத்தில் ராக்கெட் ராஜா கதாபாத்திரத்தை கண்டித்து நடிகர் கார்த்திக் வீட்டை முற்றுகையிட்ட ராக்கெட்டின் ஆதரவாளர்கள் கார்த்தி மன்னிப்பு கேட்ட பிறகுதான் படத்தை வெளியிட அனுமதித்தனர்.

நெல்லையில் விசாரணைக் கைதி சிங்காரம் கொலை வழக்கிற்குப் பின்னர் தலைமறைவாக இருந்தவர் சமீபத்தில் வசந்த் அன் கோ உரிமையாளர், திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம், விஜிபி அதிபர் மற்றும் பல தொழிலதிபர்களின் முன்னிலையில் நாடார் மக்கள் சக்தி கட்சி என்ற அமைப்பை சென்னையில் வைத்து தொடங்கினார்.

மும்பையைச் சேர்ந்த மிகப்பெரிய சினிமா ஃபைனான்ஸியர் (சேட்) மகளைக் காதலித்து மணம் முடித்தவர். அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். தென்மாவட்டத்தின் அரசியல் மையம் என்றழைக்கப்படும் வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜனை பகைத்துக் கொண்டதால் தனது ஊர் பக்கம் அவ்வளவாக தலைக் காட்டுவது கிடையாது என்கின்றனர் அவரது கிராமத்தை சேர்ந்தவர்கள்.

அதிமுகவில் சசிகலா நடராஜன் ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர், சசிகலா புஷ்பா எம்பிக்கு ஆதரவாக ராக்கெட் ராஜா ஆதரவாளர்கள் இருந்தனர். சசிகலா புஷ்பா எம்பிக்கு எதிரான வழக்கில் ஆஜராகி வரும் வக்கீல் சுகந்தி ஜெய்சன் வீட்டை சூறையாடியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டது. அதனால் நாடார் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் திருநெல்வேலி தனியார் நட்சத்திர விடுதியில் 16.10.2016 அதிகாலை 2 மணியளவில் கைது செய்யப்பட்டார். அப்போது ராக்கெட் ராஜா தப்பிவிட்டார்.

என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையார் நினைவு நாளில் சுபாஷ் பண்ணையார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் ராக்கெட் ராஜா, ஹரி நாடார் பாதுகாப்புடன் கலந்து கொண்ட சசிகலா புஷ்பா எம்பி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சசிகலா நடராஜன் ஆகியோருக்கு எதிராக கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.

கடந்த 27.2.2018ல் நெல்லையில் பேராசிரியர் செந்தில்குமார் கொலை வழக்கில் ராக்கெட் ராஜா, அவரது சகோதரரும் வழக்கறிஞருமான பாலகணேசன், உறவினரான டாக்டர்.பாலமுருகன் உள்ளிட்டோர் தேடப்படும் குற்றவாளிகளாக இருந்தனர். பல்வேறு வழக்குகள் காரணமாகவும், எதிரிகளுக்குப் பயந்தும்
ராக்கெட் ராஜா, சுபாஷ் பண்ணையார் இருவரும் தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர். இப்போது சென்னை நட்சத்திர விடுதியில் வைத்து ராக்கெட் ராஜாவுடன் நெல்லை வடக்கு பால பாக்கியம் நகரை சேர்ந்த சுந்தர், பிரகாஷ், பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி திருநகரை சேர்ந்த ராஜ்சுந்தர், தூத்துக்குடி நடுபட்டு வடக்கு தெருவைச் சேர்ந்த நந்தகோபால் ஆகியோரும் பிடிபட்டனர். முப்பதுக்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்ட போது, பயங்கர ஆயுதங்களும், அதி நவீன துப்பாக்கி, வெடிகுண்டுகளும் பிடிபட்டுள்ளது.

ராமநாதபுர சேதுபதி மன்னர் வாரிசான கார்த்திக் என்பவரை சிங்கம்பட்டி ஜமீன் தங்கூர் மஹாஜன் தூண்டுதலின் பேரில் கூலிப்படையினர் கடத்தினர். அந்த வழக்கில் சுந்தர், ராஜா சுந்தர், பிரகாஷ் ஆகிய மூவரும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து, தப்பி ராக்கெட் ராஜாவுடன் இருப்பதால், அவருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஜாமீனில் வந்த மூவரும் ராக்கெட் ராஜாவுடன் சேர்ந்து கார்த்திக்கை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே, போலீசார் தேடி வந்த போதே பல இடங்களில் போஸ்டர் ஒட்டி கடந்த ஜனவரி 2ல் சென்னை ஹயாட் நட்சத்திர விடுதியில் ராக்கெட் ராஜா வெகு விமரிசையாக பிறந்தநாள் கொண்டாடினார்.

அதில், தொழிலதிபர்கள், அவர்களின் வாரிசுகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராக்கெட் ராஜாவின் பிறந்தநாளுக்கு ராக்கெட் வடிவில் கேக் வடிவமைக்கப்பட்டு வீர வாள் கொண்டு வெட்டப்பட்டது. அதற்கு அடுத்த மாதம் பிப்ரவரியில் நடைபெற்ற, கொடியங்குளம் பேராசிரியர் செந்தில் குமார் கொலை வழக்கிலும் ராக்கெட் ராஜாவுக்குத் தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. ராக்கெட் ராஜாவுக்கு ஆதரவாக செயல்பட்ட நெல்லையில் இருந்து வெளியாகும் தினசரி பத்திரிகை ஒன்றின் நிர்வாகிகள் பற்றியும் மாலை நேர பத்திரிகை ஒன்றின் நிர்வாகிகள் பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.

ராக்கெட் ராஜா கைதை தொடர்ந்து நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கூடுதல் போலிஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button