
அறிமுக இயக்குனர் கர்ணன் மாரியப்பன் இயக்கத்தில் அசோக், ஷீலா, ஜாகுவார் தங்கம், கோதண்டம் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் 4554.
கதைப்படி,
நாயகன் அசோக், டாக்சி ஓட்டுநராக வருகிறார். சொந்தமாக உழைத்து கார் வாங்குகிறார். முதல் சவாரியாக பொள்ளாச்சியில் இருந்து சென்னை பயணப்படுகிறார்.
தான் காதலித்த பெண்ணான ஷீலாவை திருமணம் செய்யவிருக்கிறார் அசோக். அச்சமயத்தில், அடுத்தநாள் நிச்சயதார்த்தம், அதற்கு அடுத்தநாள் திருமணத்தையும் வைத்துக் கொண்டு முன்தின நாளில் சென்னைக்கு சவாரிக்கு புறப்படுகிறார் அசோக்.
சென்னைக்கு பயணப்படும் அசோக்கிற்கு என்னென்ன நடக்கிறது.? தனது திருமணத்திற்கு அவரால் வர முடிந்ததா.? டிரைவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும் படம் தான் “4554”.
உயிரோட்டமான ஒரு மூலக்கதையை கையில் எடுத்து படமாக்கியிருக்கிறார். எடுத்துச் சென்ற விதத்தில் சற்று சறுக்கியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
திரைக்கதையின் ஓட்டத்தை இன்னும் சற்று சுவாரஸ்யமாகவும் உயிரோட்டமாகவும் கொடுத்திருந்தால் காரோடு நாமும் பயணித்திருக்கலாம்.
ஆனாலும், டிரைவர்களின் இன்னல்களையும், அவர்களின் வாழ்வியலையும் காட்டியதற்காகவே இயக்குனரை வெகுவாக பாராட்டலாம்.
நாயகன் அசோக் இன்னும் சற்று தேர்ச்சியான நடிப்பைக் கொடுத்திருக்கலாம். சினிமாவை சினிமாவாக காட்டாமல் அதை ஒரு வாழ்வியலாக கொடுக்க முயற்சி பண்ணுங்களேன் அசோக் அவர்களே..
நாயகி காட்சிக்கு அழகு சேர்த்திருக்கிறார். ஒளிப்பதிவில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பின்னணி இசை கதையோடு பயணம் என்றாலும், பாடல் வேகத்தடை தான்.
4554 – வேகம் கொடுத்திருக்கலாம்..





