Spotlightசினிமாவிமர்சனங்கள்

வல்லவன் வகுத்ததடா விமர்சனம்

போகஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விநாயக் துரை எழுதி இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் வல்லவன் வகுத்ததடா. தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், ரெஜின் ரோஸ், அனன்யா மணி, விக்ரம் ஆதித்யா, சுவாதி மீனாட்சி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அஜய் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, சகிஷ்னா சேவியர் இசையமைத்திருக்கிறார்.

இத்திரைப்படம் “ஹைபர் லிங்க்” வகைமை திரைக்கதை பாணியை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கிறது. அதன்படி படத்தில் முக்கியமான ஐந்து கதைமாந்தர்கள், அவர்களுக்கு வேறு வேறு இலக்குகள், அவர்கள் அனைவரும் ஒருவரையொருவர் சந்திக்கும் போது அவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்ந்து அவை அவர்களின் இலக்குகளை மாற்றிப் போட்டு பெரும் பிரச்சனையில் அவர்களை சிக்க வைக்கிறது. அவர்கள் அந்த சிக்கலில் இருந்து மீண்டு தங்கள் இலக்கை அடைந்தார்களா…?? என்பதை விவரிக்கிறது திரைக்கதை.

இரண்டு திருடர்கள் ஜாலியாக திருடிக் கொண்டு அலையும் அவர்களின் வாழ்க்கை, திருடிய கார் ஒன்றை ஒரு போலீஸ் அதிகாரி மனைவிக்கு விற்கும் போது பிரச்சனையில் சிக்கிக் கொள்ள, அந்த போலீஸ் அதிகாரிக்கு உதவப் போய் அது மேலும் அவர்களை பிரச்சனையில் தள்ளுகிறது.
காதலை பயன்படுத்தி ஆண்களை ஏமாற்றி ஆடம்பரமாக வாழ்ந்து வரும் இளம்பெண், ஒரு ஆக்ஸிடெண்ட் வழக்கில் போலீஸ் அதிகாரியிடம் மாட்ட, அவரின் வாழ்க்கையும் திசைமாறிப் போகிறது.

போலீஸ் அதிகாரியாக இருந்து கொண்டு குற்றம் இழைப்பவர்களிடமும், குற்றம் தொடர்பாக புகாரளிக்க வருபவர்களிடமும் நூதன முறையில் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஜாலியாக வலம் வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடூரமான கந்துவட்டிக்காரனிடம் கடன் வாங்கிக் கொண்டு அதை திரும்ப செலுத்தாமல் சிக்கிக் கொள்ளும் புள்ளியில் அந்த போலீஸ் அதிகாரியின் வாழ்க்கை திசை மாறத் துவங்குகிறது.
தன் குடும்பத்திற்காக கால் டாக்ஸி ஓட்டிப் பிழைக்கும் ஒரு அப்பாவி இளம்பெண், தன் அப்பாவின் உயிரைக் காப்பாற்றவும், தங்கையின் வளைகாப்பை நடத்தவும் மிகப் பெரிய பணத் தேவையில் இருக்கும் போது, ஏற்கனவே அவள் அப்பா வாங்கிய கடனுக்காக அந்த கந்து வட்டிக்காரன் அவள் வீட்டில் வந்து நிற்கும் போது அவளின் வாழ்க்கை திசை மாறிப் போகிறது.

வட்டிக்கு பணம் கொடுத்தோமா.. பணம் திரும்ப செலுத்த முடியாதவர்களின் உடல் உறுப்புகளை விற்று பணம் பார்த்தோமா என்று இருக்கும் கந்துவட்டிக்காரன், காதலைச் சொல்லி ஏமாற்றும் பெண்ணின் வலையில் சிக்கும் போதும், திருப்பிக் கொடுக்காத பணத்திற்காக போலீஸ் இன்ஸ்பெக்டரின் சட்டையைப் பிடித்து அடிக்கும் போதும் அவனின் வாழ்க்கையும் திசை மாறி பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறது.
இப்படி ஐவரின் வாழ்க்கையும் இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொள்ள, அவர்கள் அதிலிருந்து மீண்டு வந்தார்களா..? என்பதே படத்தின் மீதிக் கதை.

திருடர்களாக நடித்திருக்கும் தேஜ் சரண்ராஜ் மற்றும் ரெஜின் ரோஸ் இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அவர்களின் ஆரம்பக் காட்சி நம்பகத்தன்மையற்றதாக இருந்தாலும் அடுத்தடுத்து வரும் காட்சிகளில் அவர்களின் நடிப்பு காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது. அதிலும் குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் இருவரின் நடிப்பும் சிறப்பு.
காதலைச் சொல்லி ஏமாற்றும் பெண்ணாக நடித்திருக்கும் அனன்யா தன் பார்வையாலேயே பாதி நடித்துவிடுகிறார். அவரின் அழகிய பெரிய துருதுரு கண்கள் காட்சிக்கு தேவையான உணர்வுகளை எளிதாக கடத்திவிடுகிறது. கந்துவட்டிக்காரன் வீட்டில் போலி நகையை மாற்றி வைக்கும் போதும், கடைசி காட்சியில் Lays சாப்பிட்டபடி ஜாலியாக வீட்டிற்குள் நுழையும் போது அநாயசமாக நடித்திருக்கிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ராஜேஷ் பாலச்சந்திரன் படத்தில் செண்டர் ஆஃப் அட்ராக்ஷனாக மாறி இருக்கிறார். அவரின் கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தனக்கு சாதகமான சூழல் அமையும் போது அவர் சிரிக்கும் கள்ளத்தனமான அந்த சிரிப்பும், தலைமுடியை கோதிக் கொள்ளும் அந்த மேனரிசமும் அந்த கதாபாத்திரத்திற்கு கூடுதலான எதிர்மறைத்தன்மையை கொடுத்து உதவியிருக்கின்றன. ஏளனம், கோபம், சூழ்ச்சி, இயலாமை, திமிர் என அனைத்து விதமான உணர்வுகளையும் சிறப்பாய் வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்.
கந்துவட்டிக்காரனாக நடித்திருக்கும் விக்ரம் ஆதித்யாவிற்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு தான். எல்லா இடத்திலும் தன்னிடம் கடன் வாங்கியவர்களை மிரட்டுவதும், காதலியிடம் கசிந்துருகுவதும் என சொற்ப இடங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு. அதை நிறைவாக செய்திருக்கிறார்.

டாக்ஸி ஓட்டும் இளம்பெண்ணாக நடித்திருக்கும் சுவாதி மீனாட்சிக்கு ஒட்டு மொத்த படத்திலும் சோகமயமான ஒற்றை உணர்வை வெளிப்படுத்த மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை செவ்வனே செய்திருக்கிறார். மொத்த கதாபாத்திரங்களில் இவர் மட்டும் தான் நேர்மறை கதாபாத்திரம். படத்தின் திரைக்கதையே அவரின் இலக்கை அடைவதற்காக எழுதப்பட்டது போல் தெரிகிறது.

படத்திற்கு கார்த்திக் நல்லமுத்துவின் ஒளிப்பதிவும், சகிஷ்னா சேவியரின் இசையும் பெரிதும் கை கொடுத்திருக்கின்றன.
கதையாகப் பார்த்தால் நல்லவன் வெல்வான்; கெட்டவன் வீழ்வான் என்கின்ற பாணியில் அமைந்த கதைதான். அதை கூறியவிதம் தான் ஈர்ப்புடையதாக இருக்கிறது.
ஒவ்வொரு கதாபாத்திரமும் பிற கதாபாத்திரத்தை சந்திக்கும் இடங்களும் அதனால் அவர்களின் தேவைகள் திசைமாறிப் போவதும் மிக அற்புதமாக சுவாரஸ்யமாக திரைக்கதையாக மாறியிருக்கின்றது. யார் யாரை சந்திக்கப் போகிறார்கள், யார் அவர்களுக்குள் முந்திக் கொள்ளப் போகிறார்கள் என்கின்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் பார்வையாளர்களுக்குள் எழுவதே இந்த திரைக்கதை நல்ல திரைக்கதை என்பதற்க்கான சான்று.
கீதா உபச்சாரத்தின் வரிகளை எடுத்துக் கொண்டு அதை ஒவ்வொரு கதைக்கான தலைப்பாக மாற்றியதும், ‘வல்லவன் வகுத்ததடா என்கின்ற பாடல் வரிகளை படத்தின் தலைப்பாக வைத்ததும் கதையோடு பெரிதாக தொடர்புடையதாக தெரியவில்லை. அது போல் நியாயம் ஜெயிக்கும் அநியாயம் தோற்கும் என்பதான சித்தாந்தம் இன்றைய வாழ்க்கை முறைக்கு எந்தவரைக்கும் ஒத்து வருகிறது என்றும் தெரியவில்லை.

ஆயினும் பரபரப்பான திரைக்கதை, அடுத்து யாருக்கு என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத திருப்பங்கள், போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் பாலச்சந்திரனின் நடிப்பு போன்றவை படத்தின் காண்பனுபத்தை சிறப்பாக்குகின்றன.

”வல்லவன் வகுத்ததடா” – சீரிய முயற்சி.

Facebook Comments

Related Articles

Back to top button