
தமிழ் சினிமாவில் புதிய கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே தொடங்கியுள்ளது. பிரம்மாண்ட திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் கவனம் பெற்ற தயாரிப்பாளர் ராகுலின் Romeo Pictures நிறுவனம், Aviate Pictures கோகுல் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.
‘ரைட்டர்’ படத்தை இயக்கியதுடன், ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இந்த புதிய திரைப்படத்தை இயக்குகிறார்.
இளைய திலகம் பிரபு மற்றும் விஜய் வர்மா இப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் Romeo Pictures ராகுலும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார்.
டார்க் ஹியூமர் ஜானரில் வித்தியாசமான கதைக்களத்துடன் இப்படம் உருவாகிறது. திரில்லர் மற்றும் காமெடி அம்சங்களை கலந்து ரசிகர்களுக்கு புதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் படமாக இது இருக்கும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே தொடங்கியது. முதல் நாள் படப்பிடிப்பை மேலும் சிறப்பாக்கும் வகையில் நடிகர் விக்ரம் பிரபு மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் படப்பிடிப்புத் தளத்திற்கு நேரில் வருகை தந்தனர்.
படக்குழுவினரை சந்தித்த இருவரும் புதிய திரைப்படம் வெற்றி பெற தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். விக்ரம் பிரபு மற்றும் ஆதிக் ரவிச்சந்திரனின் வருகை படக்குழுவினருக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்த திரைப்படத்தில் முத்துக்குமார், ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன், தீனா, அருண் மாதேஸ்வரன், கவிதா பாரதி மற்றும் அவினாஷ் ரகுதேவன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவை மேற்கொள்ள, பிரசன்னா G.K படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
P.C. ஸ்டன்ட்ஸ் படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறது. பாடல்களை யுகபாரதி எழுதுகிறார். நவ்ஷாத் அகமது ஆடை வடிவமைப்பையும், சக்தி வெங்கட்ராஜ் M கலை இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர்.
அனுபவம் வாய்ந்த நடிகர் பிரபுவுடன் இளம் தலைமுறை நடிகர்கள் இணைந்து நடிப்பதும், ‘ரைட்டர்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்குவதும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
அதிலும் யுவன் சங்கர் ராஜாவின் இசை, டார்க் ஹியூமர் கதைக்களம், திரில்லர் மற்றும் காமெடி கலந்த திரைக்கதை என பல அம்சங்களுடன் படம் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. படத்தின் தலைப்பு மற்றும் அடுத்தடுத்த முக்கிய அப்டேட்களை தயாரிப்பு நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளது.





