Spotlightசினிமா

“அடிபட்டு ரத்தம் கொட்டினாலும் நடித்தார் சூரி”… ‘மண்டாடி’ விழாவில் படக்குழுவின் நெகிழ்ச்சியான பாராட்டு!

நடுக்கடலை மையமாகக் கொண்டு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தின் நிகழ்ச்சியில், நடிகர் சூரியின் அசாதாரண உழைப்பு, படக்குழு எதிர்கொண்ட கடினமான படப்பிடிப்பு சூழல் மற்றும் படத்தின் தொழில்நுட்ப பிரம்மாண்டம் குறித்து பலரும் நெகிழ்ச்சியுடன் பேசினர்.

இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடலை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவான இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் உண்மையான கடல் பகுதிகளிலேயே படமாக்கப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவ் பேசுகையில், கடலில் ஒளிப்பதிவு செய்வது சாதாரண விஷயம் அல்ல என்றும், பல படங்களில் சில காட்சிகளை மட்டும் கடலில் படமாக்கிவிட்டு பின்னர் கிரீன் மேட் மற்றும் CGI தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது வழக்கம் என்றும் குறிப்பிட்டார்.

ஆனால் ‘மண்டாடி’ படக்குழு பெரும்பாலான காட்சிகளை உண்மையான கடல் சூழலிலேயே படமாக்கியதை பார்த்தபோது தயாரிப்பாளரின் சினிமா மீதான ஆர்வம் புரிந்ததாக அவர் தெரிவித்தார். மேலும் சூரி இந்தப் படத்திற்குப் பிறகு மிகப்பெரிய இடத்தை அடைவார் என்றும், சத்யராஜின் கெட்அப்பை பார்த்து ஆச்சரியமடைந்ததாகவும் கூறினார்.

சண்டை இயக்குநர் மகேஷ் மேத்யூ பேசும்போது, சூரி இந்தப் படத்திற்காக வெறித்தனமாக உழைத்திருப்பதாக பாராட்டினார். நடிகர் சத்யராஜ் உண்மையான மீனவர் தோற்றத்தில் வந்ததை பார்த்தபோது படக்குழுவினர் மெய்மறந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

நடிகர் மிதுன் ஜெய் ஷங்கர் பேசுகையில், படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் மிகவும் கடினமான சூழலில் படமாக்கப்பட்டதாக தெரிவித்தார். அந்த நேரத்தில் சூரிக்கு பலத்த அடிபட்டதாகவும், மற்ற நடிகர்களுக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறினார்.

அனைவரும் சோர்வடைந்திருந்த நேரத்திலும் சூரி மட்டும் சோர்வடையாமல் தொடர்ந்து செயல்பட்டதை பார்த்து தங்களுக்கும் சக்தி கிடைத்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

நடிகர் பாலசரவணன் பேசுகையில், “மண்டாடி மாபெரும் படம்” என்று குறிப்பிட்டார். பட்ஜெட் அல்லது பிரம்மாண்டம் காரணமாக அல்லாமல், அதில் பணியாற்றியவர்களின் உழைப்பால் இந்த படம் பெரிய படமாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சூரியின் கடின உழைப்பை பாராட்டிய அவர், “அடிபட்டு ரத்தம் கொட்டினாலும் மருந்து கூட போடாமல் தொடர்ந்து நடித்தார்” என கூறினார். கடலில் பயன்படுத்தப்பட்ட படகு, கேமரா மற்றும் லைட்டிங் அமைப்புகளை மீண்டும் அமைக்க அதிக நேரம் ஆகும் என்பதால், ஓய்வு எடுக்காமல் சூரி படப்பிடிப்பை தொடர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

நடிகை மஹிமா பேசுகையில், ஆரம்பத்தில் வெறும் 35 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டிருந்ததாகவும், பின்னர் இயக்குநரின் பார்வை காரணமாக படம் மிகப்பெரிய பிரம்மாண்ட படைப்பாக மாறியதாகவும் கூறினார்.

நடுக்கடலில் தினமும் சுமார் 14 மணி நேரம் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக கூறிய அவர், ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிரின் உழைப்பை பாராட்டினார். கடலின் ஆழத்தையும் அதன் இயல்பான சூழலையும் தத்ரூபமாக கேமராவில் பதிவு செய்திருப்பது பெரிய சாதனை என்றும் தெரிவித்தார்.

மேலும் சூரியின் உடல் மாற்றம் மற்றும் உழைப்பையும் மஹிமா பாராட்டினார். எவ்வளவு சோர்வாக இருந்தாலும், சிறிய காயங்கள் ஏற்பட்டாலும் எந்த ஷாட்டிலும் சமரசம் செய்யாமல் அவர் நடித்ததாக தெரிவித்தார்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பேசுகையில், இயக்குநர் மதிமாறனுடன் ‘உதயம் என்.எச்4’ காலத்திலிருந்தே நட்பு இருப்பதாகவும், அவருடைய இரவு பகல் பாராத கடின உழைப்பு அவரை இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக மாற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தயாரிப்பாளர் எல்ரெட் குமார் எந்த சவாலான காட்சியையும் பெரிய அளவில் செயல்படுத்தியதாகவும், இப்படத்தை யாரும் எதிர்பார்க்காத பெரிய பொருட்செலவில் உருவாக்கியுள்ளதாகவும் அவர் பாராட்டினார்.

சண்டை இயக்குநர் பீட்டர் ஹெய்ன் பேசுகையில், ‘மண்டாடி’ படத்தின் முக்கிய சிறப்பம்சமாக நடுக்கடலில் படமாக்கப்பட்ட படகு துரத்தல் காட்சிகள் இருக்கும் என தெரிவித்தார்.

மோட்டார் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப உதவிகள் இல்லாமல், காற்றின் விசையை மட்டும் பயன்படுத்தி சுமார் 20 கிலோமீட்டர் நடுக்கடலில் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

ஒரு சண்டைக் காட்சியின் போது சூரியின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும், கரைக்கு திரும்பாமல் சக்கர நாற்காலி உதவியுடன் படகில் அமர்ந்து காட்சிகளை முடித்துக் கொடுத்ததாக பீட்டர் ஹெய்ன் தெரிவித்தார்.

இது படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தியதாகவும், சூரியின் அர்ப்பணிப்பு இந்தப் படத்தின் முக்கிய பலமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இயக்குநர் மதிமாறன் பேசுகையில், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஒரு இயக்குநரின் கனவை நம்பி அதை நிறைவேற்றிக் கொடுத்தவர் என்று பாராட்டினார்.

மேலும் சூரியையே படத்தின் உயிர் என்று குறிப்பிட்ட அவர், இந்தப் படத்திற்காக சூரி செய்த தியாகங்கள் மிகப்பெரியது என்றும், ‘மண்டாடி’ சூரியின் சினிமா பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என்றும் தெரிவித்தார்.

மீனவர்களின் பாய்மரப் படகுப் பந்தயத்தை மையமாகக் கொண்ட இப்படம், வெறும் விளையாட்டு கதையாக இல்லாமல் மனித உணர்வுகளையும் பேசும் படமாக இருக்கும் என்று இயக்குநர் தெரிவித்தார்.

ஆர்.ஜே. பாலாஜி பேசுகையில், சூரியின் வளர்ச்சி மற்றும் விடாமுயற்சியை பாராட்டினார். 1999-ஆம் ஆண்டு ‘சங்கமம்’ படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக தொடங்கி, இன்று கதாநாயகனாக உயர்ந்திருப்பது ஒரு மிகப்பெரிய சாதனை என்று தெரிவித்தார்.

ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட், எலக்ட்ரீஷியன், கார்பென்டர், காமெடியன் என பல கட்டங்களை கடந்து வந்த சூரி, விடாமுயற்சியால் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதை நிரூபித்திருப்பதாகவும் ஆர்.ஜே. பாலாஜி கூறினார்.

இயக்குநர் வெற்றிமாறனும் ‘மண்டாடி’ படக்குழுவின் உழைப்பை பாராட்டினார். கடலில் படமாக்குவது எவ்வளவு கடினம் என்பதை அறிந்திருப்பதாகவும், படக்குழு மிகப்பெரிய சவாலை வெற்றிகரமாக கையாள்ந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

சூரி குறித்து பேசிய வெற்றிமாறன், அவர் நீண்ட கால போராட்டத்திற்குப் பிறகு கதாநாயகனாக தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியிருப்பதாகவும், அவரது வளர்ச்சி உண்மையான இன்ஸ்பிரேஷன் என்றும் கூறினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய சூரி, நடுக்கடலில் நடந்த படப்பிடிப்பின் போது தனது காலில் பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிவித்தார்.

நடக்க முடியாத நிலையில் சக்கர நாற்காலியில் வந்தபோதும், படகில் அமர்ந்தபடியே தன்னால் முடிந்த காட்சிகளை நடித்ததாக அவர் கூறினார்.

தன்னை சுற்றி இருந்த படக்குழுவின் ஆதரவையும், குறிப்பாக படகோட்டிகள் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியையும் சூரி நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

மேலும் தனது குடும்பத்தையும் குறிப்பிட்ட சூரி, வாழ்க்கையின் கஷ்டமான காலங்களில் தன்னை தாங்கியது தனது மனைவி, குழந்தைகள் மற்றும் தாய் என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

ஒரு காலத்தில் வீட்டு வாடகை செலுத்த முடியாமல் தவித்த நிலையை நினைவுகூர்ந்த அவரது தாய், இன்று ஊர் முழுவதும் சூரியின் பிறந்தநாள் போஸ்டர்களை பார்த்து மகிழ்ச்சியில் அழுததாகவும் சூரி தெரிவித்தார்.

நடுக்கடலில் உண்மையான சூழலில் படமாக்கப்பட்ட சவாலான காட்சிகள், சூரியின் கடின உழைப்பு, பீட்டர் ஹெய்னின் ஆக்‌ஷன் வடிவமைப்பு, எஸ்.ஆர். கதிரின் ஒளிப்பதிவு மற்றும் எல்ரெட் குமாரின் பிரம்மாண்டமான தயாரிப்பு என பல அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘மண்டாடி’, செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button