
லண்டனில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் பணியாற்றி வருகிறார் மாயா (ஸ்ரேயா சரண்). எதற்கெடுத்தாலும் கோபம், யாராக இருந்தாலும் எடுத்தெறிந்து பேசுவது என ஒரு சண்டக்காரியாகவே வலம் வருகிறார். அதே நேரத்தில் தனது வேலையில் மிகவும் துடிப்பாகவும், கண்டிப்பாகவும் இருந்து வருகிறார்.
இவருக்கு உதவியாளராக வேலைக்கு வந்து சேர்கிறார் விமல். மாயாவின் கோபத்தையும், கண்டிப்பையும் தாங்க முடியாமல் இதற்கு முன்பு அந்த வேலைக்கு வந்தவர்கள் எல்லாம் சில நாட்களிலேயே ‘துண்டைக் காணோம்… துணியைக் காணோம்…’ என்று ஓடியிருக்கிறார்கள்.
ஆனால், விமல் மட்டும் மாயாவின் கோபத்தையும், அவர் கொடுக்கும் தொல்லைகளையும் சமாளித்துக் கொண்டு தொடர்ந்து வேலையில் நீடிக்கிறார்.
இந்த சமயத்தில் லண்டன் சிட்டிசன்ஷிப் வாங்குவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகிறார் மாயா. ஆனால், அவர் எதிர்பார்த்தபடி சிட்டிசன்ஷிப் கிடைக்கவில்லை.
இதனால் வேறு வழியை யோசிக்கும் மாயா, விமலை திருமணம் செய்து கொண்டால் தனக்கு சிட்டிசன்ஷிப் கிடைத்துவிடும் என்ற முடிவுக்கு வருகிறார். இதற்காக விமலிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் வேலை இருக்காது என்றும் தனது பாணியில் மிரட்டுகிறார்.
வேலையை காப்பாற்றிக் கொள்வதற்காக மாயாவின் திருமண திட்டத்திற்கு விமல் சம்மதித்தாரா? உண்மையிலேயே இருவருக்கும் திருமணம் நடந்ததா? என்பதோடு லண்டனில் ஆரம்பிக்கும் இவர்களது ஆட்டம், விமலின் சொந்த ஊருக்குச் சென்ற பிறகு வேறு பரிமாணத்தை எடுக்கிறது.
அங்கு சென்ற பிறகு என்ன நடந்தது? சண்டக்காரியாக இருக்கும் மாயாவால் விமலின் குடும்பத்தில் என்னென்ன பிரச்சனைகள் வருகின்றன? இந்த போலியான திருமண ஆட்டம் இறுதியில் எங்கே சென்று முடிகிறது? என்பதே ‘சண்டக்காரி’ படத்தின் மீதிக்கதை.

விமல் தனக்கே உரித்தான இயல்பான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு தேவையானதை கொடுத்திருக்கிறார். குறிப்பாக ஸ்ரேயாவின் கோபத்தை சமாளித்துக் கொண்டு அவர் மாட்டிக்கொண்டு முழிக்கும் இடங்களில் தனது வழக்கமான காமெடி பாணியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
படத்தின் டைட்டிலுக்கு ஏற்றபடியே சண்டக்காரியாக படம் முழுவதும் வலம் வருகிறார் ஸ்ரேயா சரண். கோபம், அதிகாரம், பிடிவாதம் என முதல் பாதியில் ஒரு விதமான கதாபாத்திரத்தையும், கதை ஊருக்குள் சென்ற பிறகு வேறொரு சூழ்நிலையில் சிக்கிக்கொள்ளும் கதாபாத்திரத்தையும் சரியாக செய்திருக்கிறார்.
விமல் – ஸ்ரேயா இருவருக்குமான காட்சிகள் படத்தின் முக்கியமான பலமாக இருக்கின்றன. இருவருக்கும் இடையே நடக்கும் மோதல்கள் மற்றும் காமெடி காட்சிகள் ஆங்காங்கே சிரிக்க வைக்கின்றன.
புன்னகைப்பூ கீதா, சத்யன், பிரபு, கே.ஆர். விஜயா, ரேகா, உமா பத்மநாபன், கிரேன் மனோகர், மகாநதி சங்கர் உள்ளிட்ட நடிகர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை அளவாக செய்திருக்கிறார்கள்.
இயக்குநர் ஆர். மாதேஷ், லண்டனில் ஆரம்பித்து கிராமத்திற்குள் பயணிக்கும் ஒரு காமெடி கலந்த குடும்பக் கதையை கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
கதையாக பார்க்கும்போது ஜாலியாக நகர்த்துவதற்கான விஷயங்கள் இருந்தாலும், திரைக்கதையில் தேவையான வேகம் இல்லாதது படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது. சில காட்சிகள் நீளமாக செல்வதும், அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை எளிதாக யூகிக்க முடிவதும் ஆங்காங்கே சறுக்கலை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக விமல் – ஸ்ரேயா இடையேயான மோதல்களை இன்னும் சுவாரஸ்யமாகவும், காமெடி காட்சிகளை இன்னும் அழுத்தமாகவும் எழுதியிருந்தால் படம் இன்னும் கலகலப்பாக வந்திருக்கும்.

ஆர்.பி. குருதேவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. லண்டன் பகுதிகளை அழகாக பதிவு செய்திருப்பதோடு, கதை கிராமத்திற்கு மாறிய பிறகு அதற்கேற்ற காட்சியமைப்பையும் கொடுத்திருக்கிறார்.
அம்ரீஷின் இசையும் பின்னணி இசையும் படத்தின் காமெடி மற்றும் குடும்ப சென்டிமென்ட் காட்சிகளுக்கு தேவையான பங்களிப்பை கொடுத்திருக்கிறது.
தினேஷ் பொன்ராஜின் படத்தொகுப்பில் இன்னும் கொஞ்சம் வேகத்தை கூட்டியிருந்தால் திரைக்கதையில் ஏற்படும் தொய்வை குறைத்திருக்கலாம்.
மொத்தத்தில் விமல் – ஸ்ரேயா கூட்டணியை வைத்து ஒரு ஜாலியான காமெடி மற்றும் குடும்ப பொழுதுபோக்கு படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் வேகமும், காமெடியில் கூடுதல் சுவாரஸ்யமும் இருந்திருந்தால் ‘சண்டக்காரி’ இன்னும் ரசிக்க வைத்திருப்பாள்.
மொத்தத்தில் ‘சண்டக்காரி’ – விமல், ஸ்ரேயாவின் மோதல்களால் ஆங்காங்கே சிரிக்க வைக்கும் குடும்ப காமெடி திரைப்படம்.
இயக்கம்: ஆர். மாதேஷ்
தயாரிப்பு: புன்னகைப்பூ கீதா
தயாரிப்பு நிறுவனம்: Boss Production Corporation
ஒளிப்பதிவு: ஆர்.பி. குருதேவ்
இசை: அம்ரீஷ்
படத்தொகுப்பு: தினேஷ் பொன்ராஜ்
கலை: ஐயப்பன்
சண்டைப் பயிற்சி: கனல் கண்ணன்
நடிப்பு: விமல், ஸ்ரேயா சரண், புன்னகைப்பூ கீதா, சத்யன், பிரபு, கே.ஆர். விஜயா, ரேகா, தேவ் கில், உமா பத்மநாபன், கிரேன் மனோகர், மகாநதி சங்கர்





