Spotlightசினிமா

‘மண்டாடி’ வெற்றி விழா: “சூரியை மக்கள் தங்களில் ஒருவராக கொண்டாடுகிறார்கள்” – வெற்றிமாறன்

சூரி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் ‘மண்டாடி’. இப்படத்தின் வெற்றி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் படக்குழுவினர் கலந்துகொண்ட பிரம்மாண்ட விழா சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இப்படத்தில் சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், மிதுன், ஸ்டன்ட் சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் இ. ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார். டி.ஆர்.கே. கிரண் கலை இயக்கத்தையும், பீட்டர் ஹெய்ன் ஆக்‌ஷன் காட்சிகளையும் கவனித்துள்ளனர்.

‘மண்டாடி’ படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, நடிகர் சூரி, மஹிமா நம்பியார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், ஒரு திரைப்படத்தின் வெற்றியை தீர்மானிப்பதில் மக்களின் ஏற்புதான் முக்கியமானது என்றார்.

“ஒரு படத்தைப் பற்றி பேசும்போது மக்களுடைய ஏற்புதான் முக்கியம். மக்கள் ஒரு படத்தை ஏற்றுக்கொண்டு கொண்டாடும்போது நாமும் அதை ஏற்றுக்கொண்டு கொண்டாட வேண்டும்,” என்று கூறினார்.

இயக்குநர் மதிமாறனின் பயணம் குறித்துப் பேசிய அவர், இவ்வளவு காலமாக எதற்காக போராடினோமோ அந்த இடத்திற்கு தற்போது வந்திருப்பதாகவும், இனி நிதானமாக அடுத்தடுத்த படிகளை எடுத்து வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தயாரிப்பாளர் எல்ரெட் குமாரின் சினிமா மீதான ஆர்வத்தையும் வெற்றிமாறன் பாராட்டினார். ‘விடுதலை 1’ படத்தின் உருவாக்கத்தின்போது அதிக செலவு ஏற்படும் சூழலிலும் தயாரிப்பாளர் முழுமையான ஆதரவை வழங்கியதை நினைவுகூர்ந்தார்.

‘மண்டாடி’ படத்திலும் இயக்குநர் நினைத்த காட்சி சரியாக வர வேண்டும் என்பதற்காக கூடுதல் செலவைப் பற்றி கவலைப்படாமல் மீண்டும் கடலுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்த தயாரிப்பாளர் ஆதரவளித்ததாக அவர் கூறினார்.

சூரியின் திரைப்பயணம் குறித்துப் பேசிய வெற்றிமாறன், அவரது கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் அவரது வளர்ச்சியில் தெளிவாகத் தெரிவதாகக் கூறினார்.

ஒரு படத்தில் சிறிய காட்சியில் தொடங்கிய சூரியின் பயணம் தற்போது இந்த இடத்தை அடைந்திருப்பதாகவும், மக்கள் அவரை தங்களில் ஒருவராகப் பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

“சூரி ஜெயிப்பதை மக்கள் தாங்கள் ஜெயிப்பதாக நினைத்து கொண்டாடுகிறார்கள். அது அவருக்கு மிகப்பெரிய பலம்,” என்று வெற்றிமாறன் கூறினார்.

தயாரிப்பாளர் எல்ரெட் குமார் பேசுகையில், இயக்குநர் மதிமாறன் புகழேந்தியின் ஒழுக்கம் மற்றும் அவரது திட்டமிடலை வெகுவாகப் பாராட்டினார்.

திரைக்கதையில் எழுதப்பட்டதை மட்டுமே படமாக்குவேன் என்றும், தேவையில்லாத காட்சிகளை படமாக்கி பின்னர் எடிட்டிங்கில் நீக்க மாட்டேன் என்றும் மதிமாறன் ஆரம்பத்திலேயே உறுதியளித்ததாக எல்ரெட் குமார் தெரிவித்தார்.

மேலும் பல்வேறு தொழில்நுட்ப சவால்களுக்கு மத்தியிலும் படத்தை திட்டமிட்டபடி முடித்து, மாஸ்டரிங் பணிகளுக்காக கேட்ட காலக்கெடுவுக்கு முன்பாகவே முதல் பிரதியை வழங்கியதாகவும் பாராட்டினார்.

“வெற்றிமாறன் சார் சூரியை கதாநாயகனாக மாற்றினார். மதிமாறன் அவரை மாஸ் ஹீரோவாக மாற்றிவிட்டார்,” என்று எல்ரெட் குமார் கூறினார்.

மேலும், வழக்கமான வணிக சினிமாவுக்கான சில அம்சங்கள் இல்லாமலேயே ‘மண்டாடி’ ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

சூரியின் எளிமை மற்றும் படப்பிடிப்பு தளத்தில் சக கலைஞர்கள், தொழிலாளர்களுடன் அவர் பழகும் விதத்தையும் எல்ரெட் குமார் பாராட்டினார்.

மஹிமா நம்பியார் நடித்த காட்சிகள் திரையரங்குகளில் ரசிகர்களை உணர்ச்சிவசப்படுத்துவதாக எல்ரெட் குமார் கூறினார். பால சரவணனின் டைமிங் காமெடிக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதாக தெரிவித்தார்.

பீட்டர் ஹெய்னின் ஆக்‌ஷன் காட்சிகளையும் பாராட்டிய அவர், கதையையும் அதன் பின்னணியையும் புரிந்துகொண்டு சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருப்பதாகக் கூறினார்.

நடிகை மஹிமா நம்பியார் பேசுகையில், முதலில் இந்த கதாபாத்திரத்தை தன்னால் செய்ய முடியுமா என்ற பயம் இருந்ததாக தெரிவித்தார்.

கதாபாத்திரத்திற்காக சிரமப்பட தயாராக இருக்க வேண்டும் என்று இயக்குநர் கூறியதாகவும், அந்த சவாலை ஏற்றுக்கொண்ட பிறகு தற்போது தனது திரைப்பயணத்தில் மறக்க முடியாத கதாபாத்திரமாக அது மாறியிருப்பதாகவும் கூறினார்.

சூரியின் வெற்றியை ரசிகர்கள் தங்களது வெற்றியாகவே கொண்டாடுவதை திரையரங்குகளுக்குச் சென்றபோது நேரடியாக பார்த்ததாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, ‘மண்டாடி’ படத்தின் வெற்றியை பாய்மரப்படகு சொந்தக்காரர்கள் மற்றும் தலைமுறை தலைமுறையாக கடலோடு போராடி தங்கள் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டிருக்கும் மீனவ குடும்பங்களுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.

தனக்கு ‘மண்டாடி’ உலகத்தை அறிமுகப்படுத்தியவர்களுக்கும், அந்த மக்களின் கதைகளை பகிர்ந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

ஆரம்பத்தில் சராசரி பட்ஜெட்டில் தமிழ் மொழியில் மட்டுமே உருவாக்க திட்டமிடப்பட்ட படம், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கொடுத்த நம்பிக்கையால் பெரிய பட்ஜெட்டில் ஐந்து மொழிகளில் உருவாகி, IMAX வெளியீடு வரை சென்றதாகவும் அவர் கூறினார்.

முத்துக்காளி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த சூரிக்கும், சுஹாஸ், மஹிமா நம்பியார், பீட்டர் ஹெய்ன், ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிர், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

விழாவில் பேசிய நடிகர் சூரி, ‘மண்டாடி’ படத்தை தங்களுடைய படைப்பாக ஏற்றுக்கொண்டு கொண்டாடி வரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மற்றும் இயக்குநர் மதிமாறன் புகழேந்திக்கு தனது நன்றியை தெரிவித்த சூரி, “நீங்க ஜெயிச்சிட்டீங்க மதிமாறா” என்று இயக்குநரை பாராட்டினார்.

முத்துக்காளி கதாபாத்திரத்தை உருவாக்குவதற்காக இயக்குநருடன் பல்வேறு விவாதங்களை மேற்கொண்டதாகவும், 20 ஆண்டுகள் வாழ்க்கையில் பலவற்றை இழந்த ஒருவரின் மனநிலை, நடை, உடல் மொழி, கோபம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்காக அதிகமாக உழைத்ததாகவும் சூரி தெரிவித்தார்.

படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை உருவாக்கிய பீட்டர் ஹெய்னுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

மேலும் ‘மண்டாடி’ படத்தை பார்த்து ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்ததாக சூரி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

படம் தொடர்பாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஏராளமான ரீல்ஸ்களை உருவாக்கி கொண்டாடி வருவதாகக் கூறிய சூரி, மக்களின் இந்த அன்பு மிகுந்த மனநிறைவை கொடுத்திருப்பதாக தெரிவித்தார்.

சூரியின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்துள்ள ‘மண்டாடி’யின் வெற்றியை படக்குழுவினர் ஒன்றாக இணைந்து கொண்டாடிய இந்த நிகழ்வு, சென்னை வர்த்தக மையத்தில் உற்சாகமாக நடைபெற்றது.

Facebook Comments

Related Articles

Back to top button