
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ (The Paradise) திரைப்படம் வரும் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் நானி கதையின் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் கயாடு லோஹர், ராகவ் ஜூயால், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு, ஈஸ்வரி ராவ், சம்பூர்ணேஷ் பாபு, தணிகல பரணி, ராஜா ரவீந்திரா, ராம் ஜெகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் தோன்றி, ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
சி.ஹெச். சாய் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படத்தை ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் சுதாகர் செருகுரி தயாரித்துள்ளார். ஐவிஒய் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் இஷான் சக்சேனா இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
தமிழகத்தில் ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ள ‘தி பாரடைஸ்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் நானி, இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் ஸ்வரூப் ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திங்க் ஸ்டுடியோஸ் ஸ்வரூப் ரெட்டி, நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நானியின் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வெளியாகவுள்ளதாக தெரிவித்தார்.
நானி நடித்திருப்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதாகவும், அவரது படங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும் தெரிவித்த அவர், ‘தி பாரடைஸ்’ படத்திற்கும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா பேசுகையில், ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் கதைக்களம் குறித்து சில முக்கியமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
“இந்த திரைப்படம் தாயைப் பற்றியும், புரட்சியைப் பற்றியும் பேசும் திரைப்படம். இந்த வகையிலான கதை ரசிகர்களுடன் எளிதாக தொடர்பை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்,” என்றார்.
மேலும் தனக்கு தற்போது தமிழ் பேசத் தெரியாது என்றும், அடுத்த படத்தின் புரமோஷனுக்காக வரும்போது தமிழைக் கற்றுக்கொண்டு பேச முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய நானி, ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் மீது தனக்கு இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
“நான் நல்ல நடிகரா, இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் உங்களைப் போன்ற ஒரு நல்ல பார்வையாளன் என்பது மட்டும் எனக்குத் தெரியும்.
ஒரு பார்வையாளராக திரையரங்கில் பிரம்மாண்டமான மாஸ் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கிறது. அப்படிப்பட்ட திரைப்படங்கள் குறைவாகவே வருகின்றன. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படமாக ‘தி பாரடைஸ்’ இருக்கும்,” என்றார்.
ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடும் வகையிலான மாஸ் அம்சங்களுடன் அழுத்தமான உணர்வுகளுக்கும் படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக நானி தெரிவித்தார்.
தமிழ் சினிமா மீதான தனது காதல் குறித்தும் நானி நெகிழ்ச்சியுடன் பேசினார்.
“தமிழ் திரைப்படங்கள் எனக்கு ஒரு பைபிள் மாதிரி. என்னுடைய சினிமா அறிவு, சினிமா மீதான ஆர்வம் மற்றும் காதல் என அனைத்திற்கும் தமிழ் சினிமாவின் கலைஞர்கள் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்,” என்று கூறினார்.
கமல்ஹாசன், மணிரத்னம், கே. பாக்யராஜ், பாரதிராஜா உள்ளிட்ட தமிழ் சினிமாவின் பல்வேறு சாதனையாளர்கள் தனக்கு உத்வேகம் அளித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு முறையும் சென்னைக்கு வரும்போது தனது திரைக்குடும்பத்திடம் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதாக கூறிய நானி, சென்னை மற்றும் தமிழ்நாட்டுடன் தனக்கு நீண்டகால தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து தனக்கு அளித்து வரும் அன்பை பல்வேறு தருணங்களில் உணர்ந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
தனது திரைப்படங்களுக்கு தமிழில் சொந்த குரலில் டப்பிங் பேசுவது குறித்தும் நானி பேசினார்.
தமிழ் ரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் அன்பே, தமிழில் தனது கதாபாத்திரங்களுக்கு சொந்தமாக பின்னணி குரல் கொடுக்க முக்கிய காரணம் என்று அவர் தெரிவித்தார்.
இதனால் ‘தி பாரடைஸ்’ படத்தின் தமிழ் பதிப்பிலும் நானியின் பங்களிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘தி பாரடைஸ்’ திரைப்படத்திற்காக தான் மிகவும் கடினமாக உழைத்திருப்பதாகவும் நானி தெரிவித்தார்.
“என்னுடைய திரையுலக பயணத்தில் மிகவும் கடினமாக உழைத்த திரைப்படம் ‘தி பாரடைஸ்’. அதேபோல் நான் அதிக நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படமும் இதுதான்,” என்றார்.
மேலும், “24ஆம் தேதி திரையரங்குகளில் உங்களுக்காக தரமான சம்பவம் காத்திருக்கிறது,” என்று ரசிகர்களுக்கு உற்சாகமாக உறுதியளித்தார்.
‘தி பாரடைஸ்’ படத்தில் தான் ஏற்றுள்ள கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நானி நம்பிக்கை தெரிவித்தார்.
அடுத்த முறை தனது திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக சென்னைக்கு வரும்போது ரசிகர்கள் தன்னை நானி என்று அழைக்காமல், ‘தி பாரடைஸ்’ படத்தில் நடித்திருக்கும் தனது கதாபாத்திரமான ‘ஜடல்’ என்ற பெயரை சொல்லியே அழைப்பார்கள் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா பதிலளித்தனர்.
நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சமாக சென்னையில் உள்ள நானி ரசிகர்களுக்காக ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் பிரத்யேக காட்சிக்கான முதல் டிக்கெட்டையும் நானி அறிமுகப்படுத்தினார்.
மாஸ் ஆக்ஷன், அழுத்தமான எமோஷன், அனிருத்தின் இசை என பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நானியின் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.





