Spotlightவிமர்சனங்கள்

நல்ல படம் – திரைப்பட விமர்சனம் 2.75/5

மது பிரியர்கள் சிலர் ஒன்றாக இணைந்து ஒரு சங்கத்தை நடத்தி வருகிறார்கள். அந்த சங்கத்தின் தலைவராக இருக்கிறார் ஹரிஷ். பெயருக்கு சங்கம் என்றாலும், இவர்களது பிரதான வேலையே மது அருந்துவதும், நண்பர்களுடன் சேர்ந்து குடியும் கும்மாளமுமாக இருப்பதும்தான்.

குடிப்பதையே வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக்கொண்டு எந்தவித பொறுப்பும் இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு திடீரென ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி வருகிறது.

இந்தியா முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

எப்போது வேண்டுமானாலும் மது கிடைக்கும் என்ற எண்ணத்தில் வாழ்ந்த இவர்களுக்கு அந்த அறிவிப்பு பேரிடியாக விழுகிறது. குடிப்பதற்கு மது கிடைக்காமல் ஹரிஷும் அவரது நண்பர்களும் திண்டாட ஆரம்பிக்கிறார்கள்.

மது இல்லாமல் இவர்களால் இயல்பான வாழ்க்கையை வாழ முடிந்ததா? குடிப்பழக்கத்தில் இருந்து அவர்கள் எப்படி வெளியே வருகிறார்கள்? மதுவுக்கு அடிமையாக இருந்த இவர்களது வாழ்க்கையில் மதுவிலக்கு என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்துகிறது? என்பதே ‘நல்ல படம்’ படத்தின் மீதிக் கதை.

ஒரு சமூக கருத்தை கையில் எடுத்துக்கொண்டு அதை முழுக்க முழுக்க சீரியஸாக சொல்லாமல், காமெடி கலந்து ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் பிரபு ராம் சி.

மது பழக்கத்தால் ஒரு தனி மனிதனின் வாழ்க்கை மட்டுமல்லாமல் அவனைச் சுற்றியிருக்கும் குடும்பமும் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை பேசுவதுதான் படத்தின் முக்கிய நோக்கம்.

அதை சொல்லுவதற்காக ஹரிஷ் தலைமையில் ஒரு மது பிரியர்கள் கூட்டத்தை உருவாக்கி, அவர்கள் மூலமாக குடிப்பழக்கத்தின் இன்னொரு பக்கத்தை காட்டியிருக்கிறார் இயக்குநர்.

ஆனால், படத்தின் ஆரம்பத்தில் இருந்து இடைவேளை வரை தொடர்ந்து குடிப்பது, கும்மாளம் அடிப்பது என ஒரே மாதிரியான காட்சிகள் வருவது ஒரு கட்டத்தில் சற்று அலுப்பை ஏற்படுத்துகிறது.

‘படம் முழுவதுமே இப்படித்தான் செல்லப் போகிறதா?’ என்ற கேள்வி எழும் நேரத்தில் தான் இந்தியா முழுவதும் மதுவிலக்கு என்ற முக்கியமான விஷயத்தை கதைக்குள் கொண்டு வருகிறார் இயக்குநர்.

அங்கிருந்து படம் வேறு பாதைக்கு மாறுகிறது.

மதுவுக்கு அடிமையான ஒருவர் திடீரென மது கிடைக்காத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டால் அவருடைய மனநிலை எப்படி இருக்கும்? அந்தப் பழக்கத்தில் இருந்து வெளியே வருவதற்கு என்ன மாதிரியான வழிகள் இருக்கின்றன? மீண்டும் ஒரு இயல்பான வாழ்க்கையை எப்படி தொடங்கலாம்? போன்ற விஷயங்களை முடிந்தவரை எளிமையாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள்.

குறிப்பாக குடிப்பழக்கத்தை விட்டுவிட்டு ஹரிஷ் புதிய தொழில் ஒன்றில் இறங்கும் பகுதி படத்தின் முக்கியமான இடமாக அமைந்திருக்கிறது.

ஒரு பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டோம் என்பதற்காக வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று நினைக்காமல், அதிலிருந்து வெளியே வந்து இன்னொரு வாழ்க்கையை தொடங்க முடியும் என்ற நம்பிக்கையை அந்த காட்சிகள் கொடுக்கின்றன.

ஹரிஷ் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார். குடியும் கும்மாளமுமாக சுற்றும் இளைஞராக முதல் பாதியிலும், அதன் பிறகு வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முயற்சி செய்யும் மனிதராக இரண்டாம் பாதியிலும் வித்தியாசத்தை காட்ட முயற்சி செய்திருக்கிறார்.

ஹரிஷின் குடிப்பழக்கத்தை அறிந்திருந்தும் அவரை வெறுத்து ஒதுக்காமல் காதலிக்கும் தனலட்சுமியின் கதாபாத்திரமும் கதையில் முக்கியமானதாக இருக்கிறது. அவர் ஹரிஷின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றமும் படத்திற்கு தேவையான காதல் மற்றும் சென்டிமென்ட் பகுதிகளை கொடுக்கிறது.

ஆனால், ஹரிஷ் மாதிரி குடிப்பழக்கத்தில் மூழ்கிய ஒருவருக்கு தனலட்சுமி மாதிரி புரிந்துகொண்டு கூடவே நின்று வாழ்க்கையை மாற்றும் காதலி எல்லோருக்கும் கிடைத்துவிட்டால் பல பிரச்சினைகள் எளிதாக தீர்ந்துவிடும். அப்படிப்பட்ட காதலியை எங்கே தேடிக் கண்டுபிடிப்பது என்பதுதான் பெரிய கேள்வி!

மொட்டை ராஜேந்திரன் வரும் காட்சிகள் படத்தின் காமெடி பகுதிக்கு பலம் சேர்த்திருக்கின்றன.

கவுன்சிலராக வரும் அவர், ஒரு கட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி தருவதாக சொல்லிவிட்டு பூண்டு ரசம் வைத்து கொடுக்கும் காட்சிகள் அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்துகின்றன. தனது வழக்கமான உடல்மொழி மற்றும் டைமிங்கால் கிடைக்கும் இடங்களில் சிரிக்க வைக்கிறார் மொட்டை ராஜேந்திரன்.

சகிஷ்னா சேவியரின் இசையில் பாடல்கள் கதைக்கு தேவையான அளவில் அமைந்திருக்கின்றன. பின்னணி இசையும் காமெடி மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு கைகொடுத்திருக்கிறது.

இனியன் ஜே ஹரிஷின் ஒளிப்பதிவில் குறிப்பாக மது பிரியர்களின் கலாட்டா காட்சிகள் கலகலப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

படத்தை தயாரித்திருக்கும் ஏ. அழகு பாண்டியன், ஒரு சமூக கருத்தை காமெடி கலந்து சொல்லும் படைப்புக்கு ஆதரவளித்திருக்கிறார்.

இயக்குநர் பிரபு ராம் சி எடுத்துக்கொண்ட விஷயம் பாராட்டுக்குரியது.

முதல் பாதியில் மது, குடி, கும்மாளம் என தொடர்ந்து ஒரே விஷயத்தை சுற்றி கதை பயணிப்பதால் சில இடங்களில் சலிப்பு ஏற்படுகிறது. அந்தப் பகுதிகளின் நீளத்தை குறைத்து, கதையின் முக்கியமான விஷயமான மதுவிலக்கு மற்றும் மறுவாழ்வு பகுதிகளுக்கு இன்னும் அதிகமான முக்கியத்துவம் கொடுத்திருந்தால் படம் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும்.

ஆனால் இரண்டாம் பாதியில் மதுவிலக்கு அமலுக்கு வந்த பிறகு படம் தனது நோக்கத்தை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கிறது.

குறிப்பாக மது பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு எப்படி இருக்க வேண்டும், அந்த பழக்கத்தில் இருந்து வெளியே வந்த பிறகு வாழ்க்கையை எப்படி மாற்றிக்கொள்ள முடியும் போன்ற விஷயங்களை காமெடியோடு சேர்த்து சொல்லியிருப்பது படத்திற்கு பலம்.

முதல் பாதியில் ‘என்னடா படம் இது?’ என்று கேட்க வைக்கும் இயக்குநர், இரண்டாம் பாதியிலும் கிளைமாக்ஸிலும் தான் சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லி ‘நல்ல படம்’ என்று சொல்ல வைக்கிறார்.

மொத்தத்தில், குடிப்பழக்கத்தை வெறும் காமெடிக்காக மட்டும் பயன்படுத்தாமல், அதன் பாதிப்பையும் அதிலிருந்து மீண்டு வருவதற்கான நம்பிக்கையையும் சொல்ல முயற்சி செய்திருக்கிறது ‘நல்ல படம்’.

சில இடங்களில் திரைக்கதை இன்னும் ஷார்ப்பாக இருந்திருக்கலாம் என்றாலும், படத்தின் இறுதியில் சொல்லப்படும் கருத்து அந்தக் குறைகளை ஓரளவுக்கு மறக்க வைக்கிறது.

மது பழக்கத்திற்கு அடிமையானவர்களை மட்டுமல்ல… அவர்களைச் சுற்றி இருப்பவர்களையும் ஒரு நிமிடம் யோசிக்க வைக்கும் படமாக வந்திருக்கிறது ‘நல்ல படம்’.

‘நல்ல படம்’ – குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை யோசிக்க வைக்கும் படம்!

Facebook Comments

Related Articles

Back to top button