
நடிப்பு: விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், அஜய் கோஷ், அர்ஜுன் சிதம்பரம், சாந்தி பாலச்சந்திரன்
இயக்கம்: பாலாஜி தரணிதரன்
இசை: சாய் அப்யங்கர்
ஒளிப்பதிவு: செல்வகுமார் எஸ்.கே
படத்தொகுப்பு: ஆர். கலைவாணன்
1980களின் பின்னணியில் கதை தொடங்குகிறது. அந்தப் பகுதியில் செல்வாக்குமிக்க ரவுடியாக வலம் வருபவர் பத்தா (விஜய் சேதுபதி). சாராயக் கடை நடத்தி வரும் அவருக்கு மனைவி மற்றும் மகள் என ஒரு குடும்பமும் இருக்கிறது.
அதே பகுதியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சபரி என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வாழ்ந்து வருகிறான். ஒருநாள் தனக்குப் பிடித்த விளையாட்டுப் பொருளை பள்ளிக்கு எடுத்துச் செல்ல, அதை ஆசிரியர் பறிமுதல் செய்து பீரோவில் வைத்துவிடுகிறார்.

தேர்வு முடிந்து பள்ளிக்கு நீண்ட விடுமுறை விடப்பட்ட பிறகு, தனது விளையாட்டுப் பொருளை மீண்டும் எடுப்பதற்காக சபரி பள்ளிக்குள் ரகசியமாக நுழைகிறான். அப்போது பள்ளியின் கழிவறை ஒன்றுக்குள் இருந்து கதவைத் தட்டும் சத்தம் கேட்கிறது.
அந்த அறைக்குள் சிக்கியிருப்பது அந்த ஏரியாவே பயப்படும் பத்தா.
பத்தாவைப் பார்த்தாலே பயப்படும் சபரி அவரை வெளியே விடுகிறானா? பள்ளிக்குள் பத்தா எப்படி சிக்கினார்? அதன் பின்னால் யார் இருக்கிறார்கள்? பத்தாவுக்கும் அந்த சிறுவனுக்கும் இடையே என்ன நடக்கிறது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
ஒரு ரவுடிக்கும் சிறுவனுக்கும் இடையே உருவாகும் எதிர்பாராத சூழலை மையமாக வைத்து, அதற்குள் குடும்பம், பயம், பாசம், குற்றவுணர்வு மற்றும் மனித உணர்வுகள் என பல விஷயங்களை கலந்து அழகான திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன்.

ஆரம்பத்தில் சாதாரணமாக நகர்வது போன்ற உணர்வை கொடுத்தாலும், பத்தாவும் சபரியும் ஒரே கதைக்குள் இணைந்த பிறகு படம் வேறு பாதைக்கு செல்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் வெளிப்படும் விஷயங்களும், கதாபாத்திரங்களுக்கு இடையேயான உணர்வுப்பூர்வமான தருணங்களும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளன.
பத்தாவாக விஜய் சேதுபதி படத்தின் மிகப்பெரிய பலம்.
ஒரு ஏரியா ரவுடிக்கான மிரட்டல், கோபம், உடல்மொழி என ஆரம்பித்து, கதையின் போக்கில் அந்த மனிதனுக்குள் ஏற்படும் மாற்றங்களையும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
சில காட்சிகளில் வசனங்களைவிட அவரது பார்வையும் உடல்மொழியுமே அதிகம் பேசுகிறது. பத்தா என்ற கதாபாத்திரத்துக்குள் முழுமையாக தன்னைப் பொருத்திக் கொண்டு நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதிக்கு அடுத்தபடியாக படத்தை தாங்கிச் செல்லும் முக்கியமான கதாபாத்திரம் சபரி.

பயம், வெகுளித்தனம், குற்றவுணர்வு, பாசம் என ஒரு சிறுவனின் பல்வேறு உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் விஜய் சேதுபதியுடனான முக்கியமான உணர்ச்சிகரமான காட்சி படத்தின் குறிப்பிடத்தக்க தருணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
லிஜோமோல் ஜோஸ் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான அழுத்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். அஜய் கோஷ், அர்ஜுன் சிதம்பரம், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் கதையின் உலகத்திற்குள் இயல்பாக பொருந்தியிருக்கிறார்கள்.
கதாபாத்திரங்கள் தனித்தனியாக நடிகர்களாக தெரியாமல், அந்தக் காலகட்டத்தில் வாழும் மனிதர்களாகத் தெரிவது படத்திற்கு கூடுதல் பலம்.
சாய் அப்யங்கரின் இசை உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு தேவையான தாக்கத்தை கொடுக்கிறது. பின்னணி இசையும் கதையின் தன்மையை மீறாமல் பயணிக்கிறது.

செல்வகுமார் எஸ்.கே.வின் ஒளிப்பதிவு 1980களின் சூழலை திரையில் கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காட்சியமைப்பு, லைட்டிங் மற்றும் அந்தக் காலகட்டத்தின் தோற்றம் ஆகியவை படத்தின் கதையுடன் நன்றாக ஒன்றிணைகின்றன.
தயாரிப்பு வடிவமைப்பும் 80களின் உலகத்தை நம்பும்படியாக உருவாக்க உதவியுள்ளது.
படத்தின் முக்கிய பலம் விஜய் சேதுபதியின் நடிப்பு, சிறுவனின் performance, பாலாஜி தரணிதரனின் திரைக்கதை மற்றும் இரண்டாம் பாதியின் emotional portions.
சில இடங்களில் படத்தின் நீளம் சற்று அதிகமாக உணரப்படலாம். குறிப்பாக ஆரம்பப் பகுதியில் கதை நிதானமாக நகர்கிறது. ஆனால் கதையின் முக்கிய முடிச்சுகள் அவிழ ஆரம்பித்த பிறகு படம் பார்வையாளரை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்கிறது.
குறிப்பாக கடைசி 20 நிமிடங்கள் படத்தின் உணர்வுப்பூர்வமான தாக்கத்தை உயர்த்துகின்றன.
ஒரு ரவுடியின் கதையாக ஆரம்பித்து, எதிர்பாராத விதமாக ஒரு சிறுவனுடனான உறவின் வழியாக மனித உணர்வுகளை பேசும் குடும்ப டிராமாவாக மாறுகிறது ‘பத்தா’.
விஜய் சேதுபதியின் வித்தியாசமான நடிப்பு, சிறுவனின் இயல்பான performance, 80களின் பின்னணி மற்றும் உணர்வுப்பூர்வமான இரண்டாம் பாதி ஆகியவை படத்தின் முக்கிய அம்சங்கள்.
ஆக்ஷனை மட்டும் நம்பாமல் கதை மற்றும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை விரும்புபவர்களுக்கு ‘பத்தா’ ஒரு சுவாரஸ்யமான திரையரங்க அனுபவமாக அமையலாம்.
பத்தா – பக்கா எமோஷனல் டிராமா!





