Spotlightசினிமா

80 ஏக்கரில் பிரம்மாண்ட கிராமம் அமைத்து உருவான ‘சிட்டுக்குறிஞ்சி’ – நவம்பர் 27-ல் ரிலீஸ்!

பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

ஃபேண்டஸி மற்றும் ரொமான்டிக் கதைக்களத்தில், 1983 மற்றும் 2025 ஆகிய இரண்டு காலக்கட்டங்களை இணைக்கும் வித்தியாசமான திரைக்கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது. கொடைக்கானல் அருகே 80 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான கிராமம் மற்றும் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

ராஜித் மேனன், ஸ்ரீராம் கார்த்திக், நக்ஷா சரண், ஜி.எம். குமார், எல்.வி. ஆதவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு மாரா இசையமைத்துள்ளார். ஹங்கேரியின் புகழ்பெற்ற புடாபெஸ்ட் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுவும் இப்படத்தின் இசையில் பங்களித்துள்ளது.

இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், படக்குழுவினரைப் பாராட்டி வாழ்த்தினார். நடிகர் ஜி.எம். குமார் பேசுகையில், சிறிய திரைப்படங்களுக்கும் திரையரங்குகளில் உரிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

தயாரிப்பாளர் டி. ஜூட் ஆனந்த் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ. பிரான்சிஸ் ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம் வரும் நவம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

 

Facebook Comments

Related Articles

Back to top button