
டெல்டா டாக்கீஸ் நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகா தேவி இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படமான ‘ஆகாயம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். வெளியான சில நிமிடங்களிலேயே இந்த போஸ்டர் ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்து, சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
‘தினந்தோறும்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தினந்தோறும் நாகராஜ், அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு ரசிகர்களிடையே தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார். மேலும், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘மின்னலே’, ‘காக்க காக்க’ உள்ளிட்ட வெற்றிப் படங்களில் கதாசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர், தற்போது ‘ஆகாயம்’ திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
‘கன்னி மாடம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற ஸ்ரீராம் கார்த்திக், இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆலிஷா மிராணி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயபிரகாஷ், கிரி துவாரகிஷ், ஸ்ரீ தேவகிருஷ்ணன், இந்துமதி மணிகண்டன், தீபா, தேசிய விருது பெற்ற சஞ்சனா நமீதாஸ், ரோசாரி, ரைட்டர் ஹரிஹரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழுவில், ‘சென்னை டு சிங்கப்பூர்’, ‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
‘நீர்ப்பறவை’, ‘அயோத்தி’ போன்ற படங்களுக்கு இசையமைத்த ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்களை ஏக்நாத், சாரதி, ரமணிகாந்தன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
படத்தொகுப்பை ‘ஒரு நொடி’, ‘ஜென்ம நட்சத்திரம்’ படங்களின் எடிட்டரான சூர்யா மேற்கொண்டுள்ள நிலையில், பையர் கார்த்திக் சண்டைக் காட்சிகளையும், மணிகண்டன் நடன அமைப்பையும் கவனித்துள்ளனர்.
புவன் செல்வராஜ் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும், பிரசாந்த் தயாரிப்பு மேற்பார்வையாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
பர்ஸ்ட் லுக் வெளியீட்டின் மூலம் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ள நிலையில், ‘ஆகாயம்’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. திரைப்படமும் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.





