
இயக்கம்: பிரபு ஸ்ரீநிவாஸ்
நடிகர்கள்: உதயா, அஜ்மல், யோகிபாபு, ஜான்விகா, ஷாந்திகா, பவன், தயா பன்னீர், ஸ்ரீதர், பிரபு ஸ்ரீநிவாஸ், பிரபு சாலமன்,
ஒளிப்பதிவு: மருதநாயகம்
இசை: நரேன் பாலகுமார்
படத்தொகுப்பு: கே எல் பிரவீன்
தயாரிப்பு: ஏ எல் உதயா, தயா என் பன்னீர் செல்வம், எம் தங்கவேல்
கதைப்படி,
கொலைக் குற்றவாளியான உதயாவை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, அவரை அழைத்துச் செல்கிறார் போலீஸான அஜ்மல். செல்லும் வழியில் ரெளடி கும்பல் ஒன்று உதயாவை கொலை செய்ய முயற்சி செய்கிறது.
ரெளடி கும்பலிடம் இருந்து உதயாவை காப்பாற்றி அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறார் அஜ்மல். தொடர்ந்து பதுங்கியிருக்கும் இருவரையும் கொலை கும்பல் வெறி கொண்டு தேடி வருகிறது.
அந்த கும்பல் எதற்காக உதயாவை கொலை செய்ய நினைக்கிறது.? அந்த கொலை கும்பலிடம் இருந்து உதயா எப்படி தப்பித்தார்.? உதயாவின் காதல் என்னவானது.?? என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தின் முதல் காட்சியே அதிரி புதிரியாக அரங்கேறுகிறது. தெறிக்க வைக்கும் ஸ்டண்ட் காட்சிகளோடு படம் எழுவதால், படத்திற்குள் நம்மை ஆச்சர்யத்தோடு பயணப்பட வைக்கிறார்கள்.
அடுத்து என்ன நடக்கும் என்று கேள்வி எழுப்பிக் கொண்டே படம் நகர்கிறது. யாராலும் யூகிக்க முடியாத வண்ணம் திரைக்கதை அமைத்தது படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம்.

இருந்தாலும் இரண்டாம் பாதியில் அப்படியான கொலைகளை அடுத்தடுத்து காட்டிக் கொண்டே சென்றது காட்சிகளில் சற்று சளிப்பை ஏற்படுத்தி விட்டது.
இதுவரை இல்லாத அளவிற்கு தனது நடிப்பின் திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் உதயா. கலகலவென வெடிக்கும் காமெடி, அதிரடி ஆக்ஷன், ரசிக்க வைக்கும் காதல் என அனைத்து இடங்களிலும் புகுந்து விளையாடியிருக்கிறார் உதயா.
நாயகி ஜான்விகா, தனக்கு இது முதல் படம் என்பது போல் இல்லாமல் கொடுக்கப்பட்ட காட்சிகளை நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார்.
படபடவென பட்டாசு போல் ஃபுல் எனர்ஜியோடு தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் அஜ்மல். செல்லும் வழியில் சில காமெடிகளை சிதற விட்டு ரசிக்க வைத்திருக்கிறார் யோகி பாபு.
நரேன் பாலகுமார் இசை மற்றும் மருதநாயகம் ஒளிப்பதிவு இரண்டும் படத்திற்கு மிகப்பெரும் பலம் தான்.
அக்யூஸ்ட் – பரபர…





