
T. ராஜவேல் அவர்களின் எழுத்து மற்றும் இயக்கத்தில் தர்ஷன் , காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , தீனா , அப்துல் லீ , மாஸ்டர் ஹென்ரிக் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ஹவுஸ் மேட்ஸ்.
படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ராஜேஷ் முருகேசன் மேலும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் எம் எஸ் சதீஷ்.
சிவகார்த்திகேயன் – எஸ்.விஜய பிரகாஷ் இருவரும் இணைந்து இப்படத்தினை தயாரித்திருக்கிறார்கள்.
தயாரிப்பு நிறுவனம் : Sivakarthikeyan Productions, Play smith studios & South Studios.
தன்னுடைய காதலியான அர்ஷாவை திருமணம் செய்து கொள்வதற்காக, வீடு ஒன்றை சொந்தமாக வாங்குகிறார் நாயகன் தர்ஷன். காதலி அர்ஷாவை திருமணம் செய்து புதிதாக வாங்கிய வீட்டில் இருவரும் குடியேறுகின்றனர்.
வீட்டில் ஏதோஒன்று அமானுஷ்யமாக இருப்பதை உணர்கின்றனர் தர்ஷனும் அர்ஷாவும். இதனைத் தொடர்ந்து, அது என்ன என்பதை கண்டறிகின்றனர்.
காளி வெங்கட் மற்றும் அவரது மனைவி வினோதினி மற்றும் அவர்களது 5 வயது மதிக்கத்தக்க மகன் இவர்களது குடும்பமும் காட்டப்படுகிறது.
ஒரு கட்டத்திற்கு மேல், இரு குடும்பமும் அறிந்து கொள்கிறது. இரு குடும்பமும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள் என்று. ஒரு குடும்பம் 2012 ஆம் வருடத்திலும், தர்ஷனின் குடும்பம் 2022 ஆம் வருடத்திலும் வாழ்ந்து வருகின்றனர். அது எப்படி முடியும் என்பதற்கு அறிவியல் பூர்வமாக ஒரு காரணத்தை கொடுத்தாலும், அட என்ன தான்பா சொல்ல வர்ரீங்க என்று சொல்ல வைத்துவிட்டனர்..
இந்த செயல்பாட்டால் இரு குடும்பங்களும் என்ன மாதிரியான பிரச்சனையை சந்திக்கிறது என்பதே படத்தின் மீதிக் கதை.

தமிழ் சினிமாவில் வந்திராத ஒரு கதையை தான் படமாக்கியிருக்கிறார் இயக்குனர். இயக்குனர் எடுத்த முயற்சிக்காகவே அவரை பெரிதாக பாராட்டலாம். ஒரே வீடு, இரு குடும்பம், வேறு வேறு வருடங்கள், அந்த குடும்பங்களின் வாழ்க்கை என மிக நுணுக்கமான மூலக்கருவைக் கொண்டு படத்தினை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.
படத்தில் அனைத்துவிதமான உணர்வுகளையும் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார்கள். தான் ஒரு அனுபவ நடிகன் என்பதை காளி வெங்கட் மீண்டும் நிரூபித்திருக்கிறார். காளி வெங்கட்டின் நடிப்பு அனைவரின் கண்களிலும் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்து விடுகிறது.
ஒரு சில இடங்களில் நன்றாகவே ஸ்கோர் செய்தாலும், ஆங்காங்கே இன்னும் கத்துக்கனும் தர்ஷன் என்றும் சொல்ல வைத்துவிட்டார். கதையின் நாயகியான அர்ஷா காட்சிகளில் அழகாக காட்சியளித்திருக்கிறார். வினோதினியும் தனது பங்கினை அழகாகவே செய்து முடித்திருக்கிறார்.
இசையும் ஒளிப்பதிவும் படத்தில் மிகப்பெரும் பங்காற்றியிருக்கிறது.
திரைக்கதையில் சற்று தொய்வு எட்டிப் பார்த்தாலும், நடிகர்களின் நடிப்பு அவற்றை தவிடுபொடியாக்கி விடுகிறது.
ஹவுஸ் மேட்ஸ் – முயற்சி





