
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘மண்டாடி’ திரைப்படத்தை பாராட்டி நடிகர் சூர்யா, படத்தின் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி மற்றும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோருக்கு தனிப்பட்ட வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளார்.
தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு அனுப்பிய வாழ்த்தில், ‘மண்டாடி’ போன்ற படத்தின் மீது நம்பிக்கை வைத்து தயாரித்த அவரது துணிச்சலையும் தொலைநோக்குப் பார்வையையும் சூர்யா பாராட்டியுள்ளார். படத்தின் வெற்றி முழுமையாக தகுதியானது என்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மதிமாறனுக்கு அனுப்பிய செய்தியில், ‘மண்டாடி’ ஒரு சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் என பாராட்டியுள்ள சூர்யா, படத்தின் 23-வது நாளில் ரசிகர்களின் விசில் மற்றும் கைதட்டல்களுக்கு மத்தியில் திரையரங்கில் படத்தை ரசித்ததாக தெரிவித்துள்ளார். படத்தின் எழுத்து மற்றும் தொழில்நுட்ப அம்சங்களையும் அவர் பாராட்டியுள்ளார்.
23-வது நாளிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் ‘மண்டாடி’ தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது. RS Infotainment சார்பில் எல்ரெட் குமார் தயாரிப்பில், மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இப்படத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சத்யராஜ், சுஹாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.





