Spotlightசினிமாவிமர்சனங்கள்

அநீதி – விமர்சனம் 3.25/5

சந்த பாலன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், துஷாரா விஜயன், காளி வெங்கட், வனிதா விஜயகுமார், அர்ஜூன் சிதம்பரம், பரணி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “அநீதி”.

அங்காடித்தெரு என்ற காவியத்தை கொடுத்த இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் இப்படம் உருவாகியிருப்பதால், வழக்கமான எதிர்பார்ப்பு இப்படத்திலும் நமக்கு எழுந்தது. …

கதைப்படி,

நாயகன் அர்ஜூன் தாஸ், ஒரு தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சிறு வயதில் ஏற்பட்ட ஒரு தாக்கத்தால், சின்னதொரு கோபம் வந்தாலும் உடனே கோபத்திற்கான காரணமானவர்களை கொலை செய்யும் அளவிற்கு வெறி வருகிறது அர்ஜூன் தாஸ்க்கு.. ஆனால், யாரையும் கொலை செய்யவில்லை… இருந்தாலும் அந்த எண்ணம் அவருக்குள் அடிக்கடி வந்துகொண்டே இருக்கிறது.

இதற்காக மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சையும் எடுத்து வருகிறார். இந்த சூழலில் தான் துஷாரா விஜயனை காண்கிறார் அர்ஜூன். பார்த்தது பிடித்துப் போக இருவரும் பழகுகின்றனர். ஒருகட்டத்தில், துஷாரா அர்ஜூனிடம் காதலை கூற, வேண்டாமென்று கோபமடைந்து சென்று விடுகிறார்.

அதன்பிறகு துஷாராவிடம் தனக்கு ஒரு மன நோய் இருப்பதை அவரிடம் கூறுகிறார் அர்ஜூன்..

இந்த சமயத்தில், துஷாரா வேலை செய்யும் வீட்டின் எஜமானி, இறந்துவிடுகிறார். இது கொலைப்பழியாக துஷாரா மற்றும் அர்ஜூன் மீது விழுகிறது.

இந்த கொலைப்பழியை இருவரும் எப்படி எதிர் கொண்டார்கள்.? அர்ஜூன் தாஸுக்குள் இருக்கும் அந்த மிருகம் எட்டிப் பார்த்ததா இல்லையா.?? என்பதே படத்தின் மீதிக் கதை…

நாயகன் அர்ஜூன் தாஸ், கதைக்கேற்ற நாயகனாக அசத்தியிருக்கிறார். சிறுவயதில் அவருக்குள் ஏற்பட்ட தாக்கத்தை உள்ளுக்குள்ளே கோபத்தை அடக்கி வைத்துக் கொண்டு திருமேணி என்ற கதாபாத்திரமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் அர்ஜூன். போலீஸில் அடி வாங்கும் காட்சியாக இருக்கட்டும், காதலுக்காக உடைந்து நிற்கும் காட்சியாக இருக்கட்டும் கண்களில் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்து விடுகிறார்.

படத்தின் மிகப்பெரும் தூணாக வந்து நிற்கிறது துஷாரா விஜயனின் கண்கள். கவிதைகள் ஆயிரம் பேசும் கண்களில், ஆனால் துஷாராவின் கண்களில் ஆயிரம் கதைகள் கொட்டிக் கிடக்கும் போல… தனது கண்களாலும் நடிப்பாலும் அனைவரையும் கட்டிப் போட்டியிருக்கிறார் துஷாரா.

அர்ஜூனுக்கும் துஷாராவிற்குமான காதல் காட்சிகள் படத்தில் நன்றாகவே வொர்க்-அவுட் ஆகியுள்ளது.

ப்ளாஷ் பேக் காட்சிகள் செல்லும் இடமானது மனதை கனமாக்கி விட்டது. காளி வெங்கட்டின் நடிப்பை நாம் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். எதுவுமில்லா உலகில், மகனே உலகம் என்று எண்ணி வாழ்ந்து வரும் ஒரு கதாபாத்திரமாக வாழ்ந்து சென்றிருக்கிறார் காளி வெங்கட்… ஒரு சில படங்களில் தனது நடிப்பின் முத்திரையை பதித்திருந்தாலும், இப்படம் அதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று கண்களை குளமாக்கி சென்று விட்டார் காளி வெங்கட்…

மகன்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் மகன் கேட்டு வாங்கிக் கொடுக்க முடியாமல் இருக்கும் மனவலி என்னவென்று… அந்த வலியை படம் பார்ப்பவர்களுக்கு கடத்திச் சென்றிருக்கிறார் காளிவெங்கட்…

வனிதாவின் ஓவர் பெர்பார்மன்ஸை கொஞ்சம் குறைத்திருக்கலாம். அர்ஜூன் சிதம்பரம் கொடுத்ததை செய்திருக்கிறார். போலீஸ் கதாபாத்திரத்தில் மிடுக்கென வந்து மிரள வைத்திருக்கிறார் ஜே எஸ் கே சதீஷ்.

க்ளைமாக்ஸ் காட்சியில் இன்னும் சற்றும் சமரசம் செய்திருக்கலாம்… இவ்வளவானா வெறி தேவைதானா என்று தோன்றியது.

ஜி வி பிரகாஷ்குமாரின் இசையில், பாடல்கள் ஓகே ரகம் என்றாலும் பின்னணி இசையில் மிரள வைத்திருக்கிறார்.

எட்வின் சகாய் ஒளிப்பதிவில் காட்சிகள் ”அநீதி” உலகுக்குள் இழுத்துச் சென்றிருக்கிறது.

ரவிக்குமாரின் எடிட்டிங் நறுக்…

சாதாரண மனிதனுக்குள் அநீதி எட்டிப் பார்த்தால், அவன் என்ன மாதிரியான கோபத்தை யாரிடத்தில் காட்டுவான் என்பதை தான் இப்படம் கூற வந்திருக்கிறது..

குறைகள் சில இருந்தாலும் நிறைகளை கொண்டு கைதட்டல் வாங்கியிருக்கிறது இந்த “அநீதி”…

அநீதி – சாதாரண மனிதனின் அசுர கோபம்…

Facebook Comments

Related Articles

Back to top button