
நடிகர் அர்ஜுன் தாஸ் முதன்முறையாக காவல் அதிகாரியாக நடித்துள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘ஜான் டோ’ (John Doe). இப்படம் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டரில், சிவப்பு மற்றும் கருப்பு நிறப் பின்னணியில் அர்ஜுன் தாஸ் காவலர் சீருடையில் தோன்றியுள்ளார். அவரைச் சுற்றி பல்வேறு கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் இடம்பெற்று, படத்தின் மர்மமான கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
‘ஜான் டோ யார்? பாதிக்கப்பட்டவரா, கொலைகாரனா அல்லது காணாமல் போன குழந்தையா?’ என்ற மர்மத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
‘பாகுபலி’ படத்தைத் தயாரித்த அர்கா மீடியாஒர்க்ஸ் சார்பில் ஷோபு யார்லகட்டா, பிரசாத் தேவினேனி தயாரித்துள்ள இப்படத்தை மதுமிதா இயக்கியுள்ளார்.
அர்ஜுன் தாஸுடன் சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார்.
மர்மம், குற்ற விசாரணை மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உருவாகியுள்ள ‘ஜான் டோ’ நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.





