
தொடர்ந்து வெற்றிப் படங்களை தயாரித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தனது 29வது திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகும் இப்படத்தில் ஜெய், பிரியங்கா மோகன் மற்றும் யோகி பாபு ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
‘ஏஜிஎஸ் 29’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படத்தை எம்.எஸ். ஆனந்தன் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு விஷால் நடிப்பில் வெளியான ‘சக்ரா’ திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ராஜீவ் மேனன், நாசர், ஜி.எம். சுந்தர், ரமேஷ் திலக் மற்றும் அருள் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படம் குறித்து இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் கூறுகையில், தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையில் விறுவிறுப்பான அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இப்படம் உருவாகும் என்றும், அதே நேரத்தில் நகைச்சுவை உள்ளிட்ட சுவாரஸ்யமான அம்சங்களும் சரியான அளவில் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஊட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 6ஆம் தேதி படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில், படப்பிடிப்பு செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.
படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசராக அர்ச்சனா கல்பாத்தியும், அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராக ஐஸ்வர்யா கல்பாத்தியும், நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம். வெங்கட் மாணிக்கமும் பணியாற்றுகின்றனர்.
‘கேஜிஎஃப்’ திரைப்படங்களின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியம் மேற்கொள்கிறார். படத்தொகுப்பை பிரதீப் இ. ராகவ் கவனிக்கிறார். கலை இயக்கத்தை எஸ். கண்ணன் மேற்கொள்கிறார்.
சண்டைக் காட்சிகளை ஃபீனிக்ஸ் பிரபு வடிவமைக்கிறார். தினேஷ் மனோகரன், பல்லவி சிங் மற்றும் செல்வி தங்கராஜ் ஆகியோர் ஆடை வடிவமைப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். டூனி ஜான் விளம்பர வடிவமைப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு என கவனம் பெற்ற நட்சத்திரங்களுடன், ஆக்ஷன் மற்றும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகும் இப்படத்தின் தலைப்பு மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் குறித்த எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.





