தமிழ்நாடு

பேனர் வைப்பதில் தகராறு; சென்னையில் ஒருவர் வெட்டிக் கொலை!

சென்னை: தேனாம்பேட்டை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த மதன் என்பவர் அப்பகுதியில் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிறார். இவர் தனது நண்பரின் திருமணத்துக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தனது இன்னொரு நண்பர் தீபக் என்பவருடன் சேர்ந்து அப்பகுதியில் கடந்த வாரம் பேனர் வைத்துள்ளார்.
அப்போது, பேனர் வைத்ததற்கு அந்த பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையொட்டி நேற்று முன்தினம் இரவு இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று பகலில் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் மதனையும், தீபக்கையும் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அப்போது திடீரென பேச்சுவார்த்தையில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் மதனை சிலர் ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டினார்கள். தடுக்க முயன்ற தீபக்கையும் வெட்டியுள்ளனர்.
பின்னர் பலத்த காயங்களுடன் இருவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மதன் உயிரிழந்தார். உயிருக்கு போராடிய நிலையில் தீபக் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் அறிந்த தேனாம்பேட்டை போலீஸ் உதவி கமிஷனர் முத்தழகு, இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது மதனின் ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்து எதிர்தரப்பினரின் வீடுகளுக்குள் புகுந்து தாக்க முயன்றனர்.இதை பார்த்த போலீசார் உடனே அவர்களை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் கொலையாளிகளை தேடி வந்த நிலையில், இதுவரை 6 பேரை கைது செய்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இச்சம்பவத்தினால் அப்பகுதி பதற்றமாக காணப்படுவதால்  அங்கு போலீஸ் பாதுகாப்பு பலபடுத்தபட்டுள்ளது.
Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close