சென்னை: காவேரி மேலாண்மை அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம், ஆர்ப்பாட்டம் என நடைபெற்று வரும் நிலையில் இன்று சென்னையில் ஐபிஎல் போட்டியை கிரிக்கெட் வாரியம் நடத்த இருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினர், கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதன் விளைவாக சேப்பாக்கம் மைதானத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும்போது மைதானத்துக்கு வெளியேயும், உள்ளேயும் 100 ஆய்வாளர்கள், 200 உதவி ஆய்வாளர்கள் உள்பட சுமார் 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு கூடுதல் ஆணையர்கள், 3 இணை ஆணையர்கள், 13 துணை ஆணையர்கள், 29 உதவி ஆணையர்கள் ஆகியோர் பாதுகாப்பைக் கண்காணிக்கின்றனர். மேலும் கமாண்டோ படையின் ஒரு அணியும் அதி தீவிரப் படையின் 4 குழுக்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
மைதானத்துக்கு வரும் ரசிகர்கள் பேக், செல்லிடப்பேசி, ரேடியோ, டிஜிட்டல் டைரி, மடிக்கணினி, டேப் ரிகார்டர், பைனாகுலர், ரிமோட் கன்ட்ரோல், ரிமோட் கண்ட்ரோலுடன் கூடிய கார் சாவி, இசைக் கருவிகள், விடியோ கேமரா, பட்டாசு, தண்ணீர் பாட்டில்கள், சிகரெட், பீடி, பேட்டரி, கருப்புத் துணிகள், பதாகைகள், கொடிகள், உணவுப் பொருள்கள், குளிர்பானங்கள் ஆகியவை கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி கொண்டு செல்ல முற்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும்.
மைதானத்துக்குள் பொருள்களை வீசுபவர்கள், ரசிகர்களுக்குத் தொந்தரவு செய்பவர்கள், தவறான வகையில் பேசுபவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள்.” என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
என்னதான் நடக்கப்போகிறது என்று பொருத்திருந்து பார்க்கலாம்…