Spotlightசினிமாவிமர்சனங்கள்

தேவராட்டம் – விமர்சனம்

 

கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது ‘தேவராட்டம்’. இப்படத்தினை கொம்பன், மருது படங்களை இயக்கிய முத்தையா இயக்கியுள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே ஈ ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.

மதுரை மண்ணின் முக்கிய ரெளடியாக வலம் வருகிறார் பெப்சி விஜயன். பல வருட தவத்திற்கு பிறகு இவருக்கு ஒரு மகன் பிறக்கிறார். இதனால், பெப்சி விஜயன் தன் மகன் மீது அளவில்லா பாசம் வைத்திருக்கிறார்.

வேல ராமமூர்த்திக்கு ஆறு பெண் குழந்தைகள் ஒரு ஆண் மகன். ஆண் மகனாக பிறக்கிறார் கெளதம் கார்த்திக். ஒரு பிரச்சனையில் பெப்சி விஜயன் வேல ராமமூர்த்தியை கொலை செய்து விடுகிறார்.

இதனால் தாயாக இருந்து தம்பி கெளதம் கார்த்திக்கை வளர்க்கின்றனர் ஆறு அக்காள்களும். பாசத்தோடு சேர்ந்து வீரமானவனாகவும் வளர்கிறார் கெளதம் கார்த்திக். சட்டம் படிக்கிறார் நமது நாயகன்.

அதே சட்டம் படித்த நாயகியாக வரும் மஞ்சிமா மோகனை கெளதம் காதலிக்கிறார். கெளதமின் தப்பை தட்டி கேட்கும் குணத்தை பார்த்து, மஞ்சிமா மோகனும் கெளதமை காதலிக்கிறார்.

இந்நிலையில், இளம்பெண்ணின் பாலியல் தொடர்பான பிரச்சனையில் கட்டப் பஞ்சாயத்து செய்ய வரும் பெப்சி விஜயன் மகனை கெளதம் கார்த்திக்கை எதிர்க்கிறார். ஒரு கட்டத்தில் பெப்சி விஜயனின் மகனை கொலையும் செய்து விடுகிறார் கெளதம் கார்த்திக்.

இதனால், ஆத்திரம் அடைந்த பெப்சி விஜயன் கெளதம் கார்த்திக்கை பலி வாங்க வருகிறார். இறுதியாக என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை…

கெளதம் கார்த்திக்கின் ஆக்‌ஷன் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. டயலாக் டெலிவரி தான் இன்னும் கொஞ்சம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. கெளதம் கார்த்திக்கிற்கும் மஞ்சிமா மோகனுக்கும் கெமிஸ்ட்ரி சரியாக செட் ஆகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

கிராமத்து காதல் காட்சிகளுக்கு சற்று பொருத்தம் இல்லாதவர் போல் தான் வந்து செல்கிறார் மஞ்சிமா. படத்திற்கு சற்று ஆறுதல் தந்து மிரட்டுகிறார் வில்லனாக வரும் பெப்சி விஜயன் தான். ஆங்காங்கே தெறிக்கும் பஞ்ச் டயலாக்குகள் விசில் பறக்க வைக்கின்றன.

”மதுர தான் எங்க அடையாளம்
மதுரைக்கே நாங்க தான் அடையாளம்…”

”கத்தி காட்றவன் கிட்ட வேல் கம்ப காட்றது தப்பில்ல…”

”மண்ண தொட்டவன கூட விட்றலாம்
ஆனா, பொண்ண தொட்டவன விடக்கூடாது…”

”பொறந்தோம் வளர்ந்தோம்னு இருக்ககூடாது
பொறந்தோமா நல்லதுக்காக நாலு பேர பொழந்தோமான்னு இருக்கனும்..”

ஹலோ கந்தசாமியின் ஆக்சிடண்ட் காட்சிகளை மிகவும் தத்ரூபமாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன். ஆர்ட் டைரக்டரின் ஜி வீரமணியும் தனது பணியை மிகவும் கச்சிதமாக செய்திருக்கிறார்.

படத்தில் கெளதம் கார்த்திக்கின் அக்காவாக வரும் வினோதியின் நடிப்பை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். யதார்த்த நடிப்பை வெளிக்காட்டி அனைவரின் பாராட்டை பெறுகிறார்.

அடுத்ததாக, போஸ் வெங்கட்… ”கவண்” படத்தில் அனைவரையும் மலைக்க வைத்த நடிப்பை கொடுத்தது போல், இப்படத்திலும் அப்படியொரு நடிப்பை கொடுத்திருக்கிறார். மாமனுக்கும் மச்சானுக்கும் உள்ள பாசத்தை மிகவும் தத்ரூபமாக காட்டியிருக்கிறார் போஸ் வெங்கட்.

பாடல்கள் எடுபடவில்லை என்றாலும் நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னனி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக தான் அமைந்திருக்கிறது. அதிலும், பெப்சி விஜயனுக்கான பின்னனி இசை மிரட்டல் தான்.

முதல் பாதியில் இருந்து ஒரு ஓட்டம் இரண்டாம் பாதியில் இல்லாதது சற்று ஏமாற்றம் தான்.

திலீப் சுப்புராயனின் ஸ்டண்ட் – அதிரடி

தேவராட்டம் – 2.75/5 

Facebook Comments

Related Articles

Back to top button