Spotlightசினிமா

“எந்த மேடையாக இருந்தாலும் முதலில் தனுஷுக்கே நன்றி” – பவிஷ் நெகிழ்ச்சி

மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ள “லவ் ஓ லவ்” திரைப்படத்தை தினேஷ் ராஜ் தயாரித்துள்ளார். Zinema Media & Entertainment நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பவிஷ், நாக துர்கா, செல்வராகவன், கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் திரையுலகின் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தயாரிப்பாளர் தினேஷ்

“இந்தப் படத்திற்காக கடந்த இரண்டரை ஆண்டுகளாக முழு அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறோம். சரியான கதாநாயகனை நீண்ட நாட்களாக தேடிய நிலையில் பவிஷ் கிடைத்தார். அனைவரும் ரசிக்கும் காதல் கதையுடன், கருத்தையும் சொல்லும் படமாக ‘லவ் ஓ லவ்’ உருவாகியுள்ளது” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன்

“ஒரு திரைப்படம் என்பது கூட்டு முயற்சி. இந்தப் படம் ஜூலை 10-ஆம் தேதி வெளியாக அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களின் ஒத்துழைப்பும் முக்கிய காரணமாக இருந்தது. பவிஷை பார்த்தவுடன் ஆரம்ப கால தனுஷ் நினைவுக்கு வந்தார். திறமை மட்டுமல்ல, பணிவும் அவரை பெரிய நடிகராக உயர்த்தும்” என்றார்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு

“காதல் எப்போதும் காலத்தால் மாறாது. அந்த உணர்வை அழகாகச் சொல்லும் படமாக ‘லவ் ஓ லவ்’ இருக்கும். படம் பெரிய வெற்றி பெற என் வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.

நடிகர் சித்ரா லட்சுமணன்

“கஸ்தூரி ராஜாவின் பேரன் பவிஷ், காதல் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். நாக துர்கா தனது இயல்பான திறமையால் இந்த வாய்ப்பைப் பெற்றவர்” என்று பாராட்டினார்.

இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்

“டிரைலரைப் பார்த்தவுடன் ‘யார் இந்த பையன்?’ என்று கேட்க வைத்தார் பவிஷ். கஸ்தூரி ராஜாவின் குடும்பத்திலிருந்து இன்னொரு திறமையான நடிகர் வருகிறார் என்பது மகிழ்ச்சி” என்றார்.

இசையமைப்பாளர் தீனா

“23 ஆண்டுகளுக்கு முன்பு ‘திருடா திருடி’யில் தனுஷை பார்த்த உணர்வு, இன்று பவிஷை பார்க்கும் போது ஏற்பட்டது. இந்தப் படம் அவருக்கு நல்ல அடித்தளமாக இருக்கும்” என்று கூறினார்.

இயக்குநர் கஸ்தூரி ராஜா

“தனுஷிடம் நான் சொன்னது ஒன்றுதான் – நேரம் தவறாமல் பணிக்கு செல். இன்று வரை அதை அவர் கடைபிடிக்கிறார். அதே ஒழுக்கத்துடன் பவிஷும் வளர வேண்டும். மூன்று பாடல்களிலேயே தனது திறமையை நிரூபித்துவிட்டார்” என்றார்.

இயக்குநர் ஆர்.கே. செல்வமணி

“கதையை ஒன்றரை மணி நேரம் கேட்டபோது நேரில் படம் பார்த்த உணர்வு கிடைத்தது. பவிஷிடம் மிகப்பெரிய நடிகராக உருவாகும் தன்னம்பிக்கை தெரிகிறது” என்றார்.

இயக்குநர் சசி

“‘பரிமளா & கோ’ படத்தில் இசையமைப்பாளர்களின் திறமையை பார்த்தேன். அதேபோல் இந்தப் படத்தின் இசையும் படத்திற்கு பெரிய பலமாக இருக்கும்” என்று கூறினார்.

சுப்பிரமணிய சிவா

“கஸ்தூரி ராஜா குடும்பத்தின் அடுத்த தலைமுறையாக பவிஷ் சிறப்பாக வருவார். அவரது நடிப்பில் நல்ல எதிர்காலம் தெரிகிறது” என்றார்.

நடிகை நாக துர்கா

“டீசருக்கு கொடுத்த ஆதரவைப் போலவே படத்திற்கும் ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

நடிகர் பவிஷ்

“எந்த மேடையாக இருந்தாலும், எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் முதலில் தனுஷ் சாருக்குத்தான் நன்றி சொல்வேன். இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள் தினேஷ், தனஞ்செயன் மற்றும் இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி. நாக துர்கா மிகவும் திறமையானவர். இசையமைப்பாளர்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன்

“இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றி. இந்தப் படத்தை நம்பி என்னுடன் பயணித்த தயாரிப்பாளர்களுக்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். ‘லவ் ஓ லவ்’ அனைவரின் மனதையும் தொடும் என நம்புகிறேன்” என்றார்.

நடிகை வனிதா விஜயகுமார்

“நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்னை மீண்டும் நடிக்க வைத்துள்ள இந்தக் குழுவுக்கு நன்றி. எனது கதாபாத்திரம் மிகவும் வலுவாக அமைந்துள்ளது என்று பலரும் கூறியுள்ளனர். இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து நேர்மையான விமர்சனங்களை வழங்குங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

இளைஞர்களை மையமாகக் கொண்ட காதல், உணர்வு மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படமாக உருவாகியுள்ள ‘லவ் ஓ லவ்’ திரைப்படம், வரும் ஜூலை 10-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button