
கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் இளம் தலைமுறையின் கவனம் பெற்ற நடிகர் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘பிக்காசோ’ (PICASSO) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி, ‘பிக்காசோ’ படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார். டிராமா கம்பெனி சார்பில் உருவாகும் இப்படத்தின் மூலம் கவுதம் சிவராமன் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இரண்டு வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த சிவராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிப்பது இப்படத்தின் முக்கியமான எதிர்பார்ப்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது. அனுபவம் வாய்ந்த நட்சத்திரத்தின் திரை ஆளுமையும், இளம் தலைமுறை நடிகரின் நடிப்பும் இணையும் இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வித்தியாசமான காட்சியமைப்புடன் வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக்கில், சிவராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந்த் இருவரும் பாரம்பரிய வெள்ளை உடையில் அமர்ந்திருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அவர்களைச் சுற்றிலும் வெடித்த பட்டாசுகள் காணப்படுவதுடன், இருவரின் இயல்பான மற்றும் குறும்புத்தனமான தோற்றமும் இந்த போஸ்டருக்கு தனித்துவமான தோற்றத்தை வழங்கியுள்ளது.
மேலும், ‘PICASSO’ என்ற தலைப்பு கையால் வரையப்பட்ட மஞ்சள் நிற எழுத்துக்களில் இடம்பெற்றிருப்பது போஸ்டரின் கலைநயத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்த வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக், படத்தின் கதையும் வழக்கமான பாணியில் இல்லாமல் புதுமையான அணுகுமுறையில் உருவாகியிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்திற்கு கவுதம் சிவராமன் கதை எழுதி இயக்குகிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். சுரேஷ் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஸ்வாதி ராமகிருஷ்ணன் ஆடை வடிவமைப்பையும், விஜு விஜயன் கலை இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர்.
‘பிக்காசோ’ படத்தில் ஷிவானி நாகரம் கதாநாயகியாக நடிக்கிறார். யோகலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபல பாடகர் கானா வினோத் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.
டிராமா கம்பெனி சார்பில் ஏ. பாலமுருகன் இப்படத்தை தயாரிக்கிறார். ஆர். கார்த்திகேயன், தினேஷ் பாலச்சந்திரன் மற்றும் ஆர்.ஆர். தீபன் ராஜ் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர். கிரீன் காட் மற்றும் டி பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில் இணைந்துள்ளன.
‘பிக்காசோ’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. வித்தியாசமான கதை மற்றும் காட்சியமைப்புடன் உருவாகியுள்ள இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் மற்றும் வெளியீடு குறித்த தகவல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.





