
இயக்கம்: மோகன் ஜீ
ஒளிப்பதிவாளர்: பிலிப் கே. சுந்தர்
இசை: ஜிப்ரான்
தயாரிப்பு: நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்கரவர்த்தி
கலை இயக்குநர்: எஸ். கமல்,
சண்டைப் பயிற்சி: ஆக்ஷன் சந்தோஷ்,
படத்தொகுப்பு: எடிட்டர் தேவராஜ்
சண்டைப் பயிற்சி : ஆக்ஷன் சந்தோஷ்
நடிகர்கள்: ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ்
வக்பு வாரியம் நிலத்தை அபகரித்துக் கொண்டதாக பிரச்சனை எழும்ப, அதனை விசாரிக்க ஊர் மக்களில் ஒருவராக வருகிறார் ரிச்சர்ட் ரிஷி. அந்த சமயத்தில், ஊரில் பல வருடங்களாக பாழடைந்து கிடக்கும் ஒரு கோயிலை புரணமைத்து தருவதாக வெளிநாட்டில் இருந்து வருகிறார் நாயகி ரக்ஷனா இந்துசூடன்.
அந்த கோவிலுக்குள் சென்றதும், ரக்ஷனா தூய தமிழில் பேசி தான் திரெளபதி வந்திருப்பதாக கூறி, தனது கடந்தகாலம் இதுதான் என்று கூறி ப்ளாஷ்பேக் ஒன்றை கூறுகிறார்.
அதில், பதினான்காம் நூற்றாண்டு பகுதிகளில் கதை நகர ஆரம்பிக்கிறது. திருவண்ணாமலை பகுதியை ஆண்ட மன்னர் தான் வீர வல்லாளர் (நட்டி), இவரின் போர் படைத் தளபதியாக வீரமிக்கவராக திகழ்ந்தவர் வீரசிம்ம காடவராயர் (ரிச்சர்ட் ரிஷி).
தில்லியை தலைநகரமாகக் கொண்டு இந்திய நாட்டின் பெரும்பகுதியை ஆண்ட துக்ளக்கின் காலம் அது. செல்வங்களை சுரண்டுதல், மக்கள் அனைவரையும் மதமாற்றம் செய்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என பல நடந்து கொண்டிருந்த காலம் அது.
தென்பகுதியில் வீர வல்லாளர் துக்ளக்கின் போக்கினை எதிர்த்து நின்றார். இந்த சமயத்தில் வீர வல்லாளரை கொடூரமாக கொன்றனர். இதில், வீர வல்லாளரை காக்கத் தவறியதாக வீர சிம்ம காடவராயரை வெறுத்து அவரை ஒதுக்குகிறார் அவரது மனைவி திரெளபதி.
தொடர்ந்து வீர வல்லாளர் கொடுத்த ஒரு வாக்கிற்காக அதனை நிறைவேற்ற சென்று விடுகிறார் வீரசிம்ம காடவராயர்.
அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் ரிச்சர்ட் ரிஷி. வீர சிம்ம காடவராயர் கதாபாத்திரத்திற்கென்று கடுமையான உடல் உழைப்பையும் தாண்டி மன வலிமையுடன் அக்கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கிறார் ரிச்சர்ட் ரிஷி. படம் முழுவதிலுமே வீர சிம்ம காடவராயராகத் தான் நம் கண்ணில் அவர் தென்பட்டார். முந்தைய படங்களை காட்டிலும், இப்படத்தில் அவரின் நடிப்பு நன்றாகவே தேறியிருக்கிறது என்றே கூறலாம்.
வீர வல்லாளராக தோன்றிய நட்டி, அக்கதாபாத்திரத்தில் தன்னை முழுமையாகவே அர்ப்பணித்திருக்கிறார். நடை, உடை, பாவணை, பேச்சு என அனைத்துமே வீர வல்லாளராகவே தெரிகிறார் நட்டி.
மேலும், படத்தில் திரெளபதியாக தோன்றிய ரக்ஷனா இந்துசூடன், படத்திற்கு ஒரு பெரும்பலம் என்றே கூறலாம். தமிழ் உச்சரிப்பு, வசனத்தை கோர்வையாக பேசியது, கண்களாலே பல காட்சிகளை கடத்தியது, அழகு ஓவியமாக காட்சியளித்தது என பெரும் பங்களிப்பை இப்படத்தில் கொடுத்திருக்கிறார் ரக்ஷனா.
ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. பிலிப் கே. சுந்தர் அவர்களின் ஒளிப்பதிவும் பிரம்மாண்டத்தை கொடுக்கத் தவறினாலும், தேவையானவற்றை நன்றாகவே காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ஒரு பெரும் பழங்கால வரலாறை கூற வரும்போது, மற்ற மதத்தினரின் மனதும் புண்படாமல் பொதுவான ஒரு கண்ணோட்டத்தோடு இன்னும் இழகுவாக தனது படைப்பை இயக்குனர் மோகன் ஜீ கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அதனை இயக்குனர் செய்யத் தவறியிருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.
கொடுத்த உழைப்பிற்காக நிச்சயம் திரெளபதி 2 திரைப்படத்தை நிச்சயம் ஒருமுறை காணலாம்..




