
நடிகர்கள்: ஆரி அர்ஜுனன், தீப்ஷிகா,பவித்ரா, சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய்
இயக்குநர்: L R சுந்தரபாண்டி
தயாரிப்பாளர்: A. ராஜா
ஒளிப்பதிவு: J லக்ஷ்மன்
இசையமைப்பாளர்: தரண் குமார்
எடிட்டர்: ராம் சுதர்ஷன்
கதைப்படி,
மும்பையில் இருந்து சென்னைக்கு பணி மாறுதலாக வருகிறார் ஆரி. அதுமட்டுமல்லாமல், தொலைந்து போன தனது காதலியை கண்டுபிடிப்பதற்காகவும் சென்னை வருகிறார்.
கம்பெனி சார்பில் கொடுக்கப்பட்ட பில்டிங் ஒன்றில் 4 வது மாடியில் ப்ளாட் ஒன்றில் தங்குகிறார் ஆரி.
4வது மாடியில் யாரையும் தங்க வைக்க வேண்டாம் என்று சொல்லிய பின்பும், செக்யூரிட்டி ஒருவர் ஆரியை தங்க வைக்கிறார்.
4 வது மாடியில் தங்கியிருந்த ஆரிக்கு இரவு நேரத்தில், பல கெட்ட கனவுகள் வருகின்றன. அந்த இடத்தில் அமானுஷ்யம் இருப்பதை உணர்கிறார் ஆரி. அதுமட்டுமல்லாமல், அவர் தங்கிய வீட்டில் தொலைந்து போன அவரது காதலியான பவித்ராவின் புகைப்படம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்.
தொலைந்து போன காதலி, அதே வீட்டில் தான் தங்கியிருக்கிறார் என்பதை கண்டுபிடித்த ஆரி, பலரிடமும் விசாரிக்கிறார்.

அதன்பிறகு தான் பல திடுக்கிடும் சம்பவங்கள் நடக்கின்றன. அது என்ன என்பதே படத்தின் மீதிக் கதை.
கதைக்கு என்ன தேவையோ அதை அளவாககொடுத்திருக்கிறார் நாயகன் ஆரி. ஆரம்பத்தில் கதைக்குள் கதாபாத்திரத்திற்குள் நுழைய சற்று சிரமப்பட்டாலும், அதன்பிறகு நடந்த சம்பவங்கள் ஆரியை கதைக்குள் இழுத்துச் சென்று விட்டது.
நாயகியான பவித்ரா கதைக்கு தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். மேலும், மற்றொரு நாயகியான தீப்ஷிகா காட்சிகளுக்கு அழகாக வந்து செல்கிறார். சின்ன சின்ன இடங்களில் எட்டிப் பார்த்தாலும், வந்த இடங்களில் படம் பார்ப்பவர்களை தன் பக்கம் இழுத்து வைத்துக் கொள்கிறார்.
மேலும், படத்தில் மெயின் வில்லனாக நடித்த சுப்ரமணியம் சிவா மிரட்டலான ஒரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அவ்வளவு பெரிய ரெளடி கதாபாத்திரத்தை க்ளைமாக்ஸில் காமெடி பீஸ் ஆக்கியது படத்தை சற்று சறுக்கிவிட்டது.
மற்றபடி, படத்தில் நடித்த மற்ற அனைவருமே கதைக்கு தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர்.
நல்லதொரு மூலக் கதையை கையில் எடுத்த இயக்குனர் அதை கொடுப்பதில் சற்று தடுமாறியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் படுவேகமாக சென்ற திரைக்கதையானது இரண்டாம் பாதியில் நன்றாகவே தடுமாறியிருப்பதை பார்க்க முடிந்தது.
க்ளைமாக்ஸ் காட்சியில் பயங்கர குளறுபடிகள் நடந்திருப்பதை கண்ணார பார்க்க முடிகிறது. ஒரு சில நொடிகள் மட்டுமே எட்டிப் பார்த்துச் செல்லும் அமானுஷ்யம், என்ன சொல்ல வருகிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. அதுமட்டுமல்லாமல், க்ளைமாக்ஸில் விளைக்கை அணைத்து அணைத்து காட்சிகளை ஒளிப்பதிவு செய்து நமக்கு தலைவலியை ஏற்படுத்தி விட்டார்கள்.
பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது.
நிலம் சார்ந்து நடக்கும் நிகழ்கால அரசியல்வாதிகளின் திட்டத்தை தோலுரித்து காட்டியதற்காக இயக்குனரை பெரிதாக பாராட்டலாம்.
மொத்தத்தில்,
4த் ப்ளோர் – நன்றாக எடுக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு படைப்பு..





