Spotlightவிமர்சனங்கள்

கட்டா குஸ்தி 2 – விமர்சனம் 4/5

நடிகர்கள்:

விஷ்ணு விஷால்
ஐஸ்வர்யா லட்சுமி
ரம்யா கிருஷ்ணன்
யோகி பாபு
கருணாஸ்
முனீஸ்காந்த்
காளி வெங்கட்
கருணாகரன்
ஜாரா
மோக்ஷா
மற்றும் பலர்

தொழில்நுட்பக் குழு:

கதை, திரைக்கதை, இயக்கம்: செல்லா அய்யாவு
தயாரிப்பு: வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்
தயாரிப்பாளர்கள்: டாக்டர் ஐசரி கே. கணேஷ், விஷ்ணு விஷால்
இணை தயாரிப்பாளர்கள்: ஷுப்ரா, ஆர்யன் ரமேஷ், இஷான் சக்சேனா
இசை: ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு: கே. எம். பாஸ்கரன்
படத்தொகுப்பு: பரத் விக்ரமன்
கலை இயக்கம்: ஜெயச்சந்திரன்
ஆடை வடிவமைப்பு: ருச்சி முனோத்
சப்டைட்டில்ஸ்: சஜித் அலி
பப்ளிசிட்டி டிசைன்: வியாகி
மார்க்கெட்டிங் & புரமோஷன்: சித்தார்த் ஸ்ரீனிவாஸ்
நிர்வாக தயாரிப்பாளர்: சீதாராம்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: ஸ்ராவந்தி சைநாத்
மக்கள் தொடர்பு (PRO): சதீஷ் (AIM)

கதைப்படி,

கட்டா குஸ்தி முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தின் கதை ஆரம்பமாகிறது. குஸ்தியில் நேஷ்னல் சாம்பியனாக இருக்கும் விஷ்ணு விஷாலின் மனைவியான ஐஸ்வர்யா லக்‌ஷ்மிக்கு ரெயில்வே துறையில் வேலை கிடைக்க, வீட்டு வேலை பார்த்து “ஹவுஸ் ஹஸ்பண்ட்”ஆக இருந்து வருகிறார் விஷ்ணு விஷால்.

இவர்களுக்கு நான்கு வயது மதிக்கத்தக்க மகளாக வருகிறார் ஷாரா. தனது மகளை மிகவும் அளவுகடந்த பாசத்தை ஊட்டி வளர்த்து வருகிறார் விஷ்ணு விஷால். தொடர்ச்சியாக, குஸ்தியில் தனது வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மியை பழிவாங்க, விஷ்ணு விஷாலை பகடைக்காயாக பயன்படுத்திக் கொள்கிறார் அவரது பயிற்சியாளர்.

நேஷ்னல் போட்டிக்கு செல்லும் லீக் ஆட்டத்தில், ஐஸ்வர்யா தோற்று விட, தோல்விக்குக் காரணம் விஷ்ணு விஷால் தான் என்று புரிந்து கொண்டு, மகளை அழைத்துக் கொண்டு விஷ்ணு விஷாலை பிரிய முடிவெடுக்கிறார் ஐஸ்வர்யா.

நடந்த உண்மை என்ன என்பது ஐஸ்வர்யா புரிந்து கொண்டு, விஷ்ணு விஷாலிடம் மீண்டும் சேர்ந்து கொண்டாரா.? இல்லையா ?? என்பதே படத்தின் மீதிக் கதை.

விஷ்ணு விஷால், முதல் பாகத்தை விட இந்த முறை மிகவும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வீட்டைப் பார்த்துக்கொள்ளும் கணவன், மகளின் மீது உயிரையே வைத்திருக்கும் தந்தை என இரண்டு பரிமாணங்களிலும் இயல்பாக ஜொலிக்கிறார்.

விஷ்ணு விஷாலுக்கு வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படம் எப்படி ஒரு பிரேக் கொடுத்ததோ, அதை விட பலமடங்கான ஒரு பிரேக் இந்த படத்தின் மூலமாகவும் அவருக்கு நிச்சயம் கிடைக்கும்.

ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் குஸ்தி வீராங்கனையாக தனது கதாபாத்திரத்திற்கு முழு நியாயம் செய்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளிலும், உணர்ச்சிப்பூர்வமான தருணங்களிலும் சிறப்பாக கவனம் ஈர்க்கிறார்.

ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாஸ், முனீஸ்காந்த், காளி வெங்கட், கருணாகரன் ஆகியோர் கதைக்கு தேவையான இடங்களில் நகைச்சுவையையும், வலுவையும் சேர்த்துள்ளனர். அதிலும், கருணாஸின் காமெடி காட்சிகள் படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கின்றனர். சின்ன சின்ன இடங்களில் அவரின் ரியாக்‌ஷன்கள் படத்திற்கு பெரிதாக கைகொடுத்திருக்கின்றன. இவரின் மனைவியாக நடித்த லிஸி, தனது கதாபாத்திரத்தை மிகவும் அழகாக செய்திருக்கிறார். டீச்சராக வரும் நடிகை மோக்‌ஷா, படத்திற்கு நன்றாகவே உயிர் கொடுத்திருக்கிறார். படம் பார்க்கும் போது, அது என்னமாதிரியான உயிர் என்பதை புரிந்து கொள்வீர்கள்.

விஷ்ணு விஷாலோடு மோக்‌ஷா மற்றும் காளி வெங்கட், கருணாஸ் , ஷாரா உள்ளீட்டோர் நடனமாடும் காட்சி படத்தில் பெரிய ப்ளஸ்.க்ளைமாக்ஸ் காட்சி அடிபோலி தான். ரம்யா கிருஷ்ணனும் அழகு சேர்த்திருக்கிறார்.

தொழில்நுட்பம்:

ஷான் ரோல்டனின் இசை கதைக்கு பலம் சேர்க்கிறது. பின்னணி இசை உணர்ச்சிகரமான காட்சிகளை மேலும் உயர்த்துகிறது.

கே.எம். பாஸ்கரனின் ஒளிப்பதிவு குஸ்தி போட்டிகளையும் குடும்பக் காட்சிகளையும் அழகாக பதிவு செய்துள்ளது.

பரத் விக்ரமனின் படத்தொகுப்பு கச்சிதமாக அமைந்துள்ளது. இரண்டாம் பாதியில் திரைக்கதை வேகம் அதிகரிப்பது படத்திற்கு கூடுதல் பலம்.

இயக்கம்:

செல்லா அய்யாவு, முதல் பாகத்தின் வெற்றியை மட்டும் நம்பாமல், அதற்கு அடுத்த கட்டமாக கதையை நகர்த்தியிருக்கிறார். குடும்ப உறவுகள், ஆண்களின் வீட்டுப் பொறுப்பு, பெண்களின் தொழில் முன்னேற்றம், விளையாட்டுத் துறையில் நடக்கும் அரசியல் போன்ற பல விஷயங்களை வணிக ரீதியில் சொல்ல முயற்சித்துள்ளார்.

சில இடங்களில் திரைக்கதை யூகிக்கக்கூடியதாக இருந்தாலும், உணர்ச்சிகரமான காட்சிகளும், குடும்ப சென்டிமென்டும் அதை ஈடுகட்டுகின்றன. மிகவும் யதார்த்தமான கதாபாத்திரத்தைக் கொண்டு, மிகவும் நேர்த்தியாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார் செல்லா அய்யாவு. திரைக்கதையை அழகாக செதுக்கியிருக்கிறார். சின்ன சின்னதாக சற்று தொய்வு எட்டிப் பார்த்தாலும், அது படத்திற்கு எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் படத்தை நன்றாக நகர்த்திக் கொண்டு சென்றிருக்கிறார்.

முதல் பாதியில் ஆங்காங்கே சற்று சலிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், இரண்டாம் பாதியில் மொத்த படமும் டாப் கியர் போட்டு தூக்கிக் கொண்டு சென்று விட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு விழுந்து விழுந்து சிரித்த ஒரு படம் என்றால் அது இதுதான் என்று படம் பார்க்கும் அனைவரும் கூறுவார்கள் அப்படியொரு படமாக வந்துவிட்டது இந்த “கட்டா குஸ்தி 2”.

பலங்கள்

* விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி கூட்டணி
* குடும்ப உணர்வுகள் மற்றும் தந்தை – மகள் பாசம்
* குஸ்தி போட்டி காட்சிகள்
* நகைச்சுவை காட்சிகள்
* ஷான் ரோல்டனின் இசை

மொத்தத்தில், ‘கட்டா குஸ்தி 2’ முதல் பாகத்தின் கலகலப்பை தக்க வைத்துக்கொண்டு, குடும்ப உறவுகளையும் விளையாட்டு பின்னணியையும் உணர்ச்சிகரமாக சொல்லும் நல்ல கமர்ஷியல் எண்டர்டெய்னர். குடும்பத்துடன் திரையரங்கில் ரசிக்கக்கூடிய படமாக இது அமைந்துள்ளது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் குடும்பமாக சென்று பார்க்கும்படியான ஒரு காவியத்தைக் கொடுத்த இயக்குனர் செல்லா அய்யாவுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்…

Facebook Comments

Related Articles

Back to top button