
நடிகர்கள் : தர்ஷன், லால், சுஜித், முனீஷ்காந்த், பாடினி குமார், ஆரோல், ரம்யா ராமகிருஷ்ணன், சுந்தரேஸ்வரன், கெளஷிக்
Production House: Upbeat Pictures
Producer: VRV Kumar
எழுத்து இயக்கம் – கெளதம் கணபதி
ஒளிப்பதிவு : மெய்யேந்திரன்
இசை: விகாஷ் படிசா
படத்தொகுப்பு: ரேனு கோபால்
ட்ரெய்ணிங் எஸ் ஐ’ஆக வருகிறார் தர்ஷன். இவர் இருக்கும் அதே காவல்நிலையத்தில் பல வருடங்களாக ஏட்டாக இருக்கிறார் லால். நேர்மையாக செயல்படுவதால், அந்த காவல்நிலையத்தில் அவரை யாரும் மதிப்பதில்லை.
இந்நிலையில், காவல்நிலையத்தில் இருக்கும் கைத்துப்பாக்கி ஒன்றை கவனக்குறைவால் தொலைத்து விடுகிறார் லால். இதனால், காவல்நிலையமே பரபரப்பாகி விடுகிறது. மூன்று நாட்களில் துப்பாக்கியை தான் கண்டுபிடிப்பதாக இன்ஸ்பெக்டரிடம் கூறுகிறார் தர்ஷன்.
இந்த தேடுதல் வேட்டை ஒருபுறம் நடக்க, மற்றொரு புறம் பெரும் ரெளடியாக இருக்கிறார் சுஜித். தேர்தல் நெருங்கும் சமயத்தில், கட்சிப் பணத்தை பட்டுவாடா செய்ய பத்து கோடியை ஒருவரிடம் கொடுத்தனுப்பகிறார் சுஜித்.
செல்லும் வழியில் பணம் கொண்டு சென்ற நபர் விபத்தில் சிக்க, பணம் தொலைந்து விடுகிறது. பணத்தைத் தேடி அலைகிறது சுஜித் & டீம்.
அதேசமயம், சுஜித்தின் தம்பியாக வரும் கெளஷிக்கை எதிர்த்து விடுகிறார் லால். இதனால், சுஜித்தின் பகையை சம்பாதித்துக் கொள்கிறார் லால்.
இந்த, முடிச்சுகளை எல்லாம் நாயகன் தர்ஷன் எப்படி கையாண்டு அதை முடித்தார் என்பதே படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகனான தர்ஷன், சிறப்பான ஒரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எந்த இடத்திலும் தனது மீட்டரை தாண்டி ஒரு நடிப்பைக் கொடுக்கவில்லை தர்ஷன். படத்தின் பெரிய பில்லராக வந்து நிற்கிறார் லால். எப்படி இந்த மனுசன் இப்படியெல்லாம் நடிக்கிறார் என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
லாஜிக் ஓட்டைகள் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் எட்டிப் பார்த்தாலும், அவற்றையெல்லாம் ஒரங்கட்டும் அளவிற்கு திரைக்கதையின் வேகம் இருப்பதால் படம் டாப் கியர் போட்டு செல்கிறது.

மருத்துவமனை சண்டைக் காட்சி, பேருந்துக்குள் நடக்கும் சண்டைக் காட்சி என இரண்டையும் படமாக்கிய விதம் பாராட்டுதலுக்குறியது. எந்த இடத்திலும் படம் தொய்வடையாமல் சென்றது படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம்.
அடுத்தடுத்து நடக்கும் ட்விஸ்ட் காட்சிகள் படம் பார்ப்பவர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு சென்று விடுகிறது. இவற்றையெல்லாம் எப்படி க்ளைமாக்ஸில் இயக்குனர் முடித்து வைப்பார் என்று கேள்வி எழுந்து கொண்டே இருந்த நேரத்தில், சரியான திரைக்கதைக் கொண்டு மிகச்சரியாக தனது இயக்கத்திறனை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
வில்லனாக நடித்த சுஜித் படத்திற்கு ஒரு தூணாகவே நிற்கிறார். சுஜித்தின் தம்பியாக நடித்த கெளஷிக்கும் தனது பங்களிப்பை சரியாக கொடுத்திருக்கிறார்.
நடிகை அன்னம் அரசு தனது நடிப்பால் அனைவரின் கண்களிலும் ஈரத்தை வரவைத்துவிடுகிறார்.
இசை மற்றும் ஒளிப்பதிவு இரண்டுமே படத்திற்கு பக்கபலமாக நின்றது.
மொத்தத்தில்,
சரண்டர் – அதிவேகம்.





