பெங்களூரு: சின்னசாமி மைதானத்தில் பெங்களூருக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 68 ரன்களும், டி காக் 53 ரன்களும், மன்தீப் சிங் 32 ரன்களும் விளாசினர்.
இதனையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு துவக்கமே சோகமாக அமைந்தது. சென்னை அணி 74 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராயுடு-தோனி பெங்களூரு அணியின் பந்துவீச்சை சிதறடிதனர். இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினர். 82 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராயுடு ஆட்டமிழந்தார். இறுதியில் 19.4 ஓவர்களில் சென்னை அணி வெற்றி இலக்கை எட்டியது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் தோனி 70(34) ரன்கள் விளாசினார்.