
மலேசியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ். எம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் திரையரங்குகளில் வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். மேலும் பரிதாபங்கள் சுதாகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கு எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், இசையை யுவன் சங்கர் ராஜா அமைத்துள்ளார். இயக்குநர் ராஜேஷ். எம்-ன் தனித்துவமான நகைச்சுவை பாணியில் உருவாகும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வருகிறது.
மலேசியாவைச் சேர்ந்த தயாரிப்பாளர் டத்தோ அப்துல் மாலிக், மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் சார்பில் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் கைப்பற்றியுள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த அறிவிப்பை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் இந்தியா நிறுவனத்தின் CEO ராசிக் அஹ்மது தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
ஜீவா – ராஜேஷ். எம் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படம், நகைச்சுவை, குடும்ப பொழுதுபோக்கு மற்றும் வணிக அம்சங்கள் நிறைந்த திரைப்படமாக ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





