Spotlightவிமர்சனங்கள்

கடைசி தோட்டா – விமர்சனம் 3/5

இயக்கம்: நவீன் குமார்

நடிகர்கள்: ராதாரவி, கிருஷ்ணா, ஸ்ரீ குமார், வனிதா விஜயகுமார், வையாபுரி, அபிராமி நமஹா, குஷி, யாசர், கொட்டாச்சி,

ஒளிப்பதிவு: மோகன் குமார்

இசை: வி ஆர் சுவாமிநாதன் ராஜேஷ்

தயாரிப்பு: ஆர் சுவாமிநாதன்

கதைப்படி,

எம் எல் ஏ ஒருவரின் வீட்டில் ஐடி ரெய்டு நடக்கப்போவதாக அந்த எம் எல் ஏ-வுக்கு தகவல் கிடைக்க, வீட்டில் இருந்த கருப்பு பணம் அனைத்தையும் மூட்டை மூட்டையாக கட்டி கொண்டு, அவரது ரெசார்ட் ஒன்றில் வைத்து விடுகிறார்.

இந்நிலையில், அதே நாளில் ரெசார்டிற்கு சிலர் ரூம் எடுத்து தங்க வருகின்றனர்.

ஸ்ரீ குமார் தனது மனைவியுடன் ஹனிமூன் கொண்டாட அந்த ரெசார்டில் ரூம் எடுத்து தங்குகிறார்.

ரிட்டய்ர்ட் ஆர்மியாக இருக்கும் ராதாரவி அங்கு ஒரு ரூம் எடுத்து தங்குகிறார்.

கொட்டாச்சி தனது மகனின் மருத்துவத்திற்காக மனைவியுடன் வந்து அங்கு ரூம் எடுத்து தங்குகிறார்.

வையாபுரி ஒரு பெண்ணோடு தனிமையில் இருப்பதற்காக அங்கு வந்து தங்குகிறார்.

ஓட்டேரி சிவா தனது நண்பர்கள் சிலரோடு வந்து ரூம் எடுத்து தங்குகிறார்.

இவர்கள் அனைவரும் அங்கு இருக்கும் நேரத்தில், அங்கு ஒரு பெண் மர்மமான முறையில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்படுகிறார்.

அந்த பெண்ணை கொன்ற கொலையாளி யார் என்பதை ஸ்ரீகுமார் பார்த்தும் விடுகிறார். இந்த வழக்கை விசாரிக்க போலீஸ் அதிகாரியாக வனிதா வருகிறார்.

கொலையாளி யார்.?? கொலையாளியை வனிதா கண்டுபிடித்தாரா இல்லையா.?? எதற்காக இந்த கொலை நடந்தது.?? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் விடை வைத்திருக்கிறார் இயக்குனர்.

கதையின் நாயகனாக ராதாரவி சிறப்பான ஒரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பார்க்கும் பார்வையிலேயே ஆயிரம் மர்மங்கள் தன்னுள் ஒளிந்திருக்கிறது என்பதை ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுத்திக் கொண்டேச் செல்கிறார்.

ராதாரவிக்கும் அவரது மனைவிக்குமிடையேயான காதலை இருவரும் வெளிப்படுத்தும் பாடலில் இருவரின் நடிப்பும் உருக வைத்திருக்கிறது. ஒவ்வொரு ஃப்ரேமும் ஒரு உயிரோட்டமாக இருந்தது படத்தின் மூலக் கதைக்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. ஒரு தனி காதல் காவியத்தை அப்படத்திற்குள் ஒளித்து வைத்தது போன்ற ஒரு அருமையான காட்சியமைப்பைக் கொடுத்து அப்பாடலை படமாக்கியிருக்கிறார்கள்.

வனிதாவின் நடிப்பு இந்த படத்திற்கு துளியளவும் கைகொடுக்கவில்லை. போலீஸ் அதிகாரியாக இருந்தாலும், ஒரு எல்லை வேண்டாமா.?? எரிச்சலூட்டும் மாதிரியான கேரக்டராக வந்து செல்கிறார் வனிதா.

இன்வஸ்டிகேஷனை இன்னும் சற்று சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்த்திச் சென்றிருக்கலாம்.

வையாபுரியின் காமெடி, ஓட்டேரி சிவா காமெடி என படத்தில் எந்த இடத்திலும் எந்த காமெடியும் வொர்க்-அவுட் ஆகாமல் போனது சற்று ஏமாற்றம் தான்.

வி ஆர் சுவாமிநாதன் ராஜேஷின் இசையில் ராதாரவியின் காதல் பாடல் முனுமுனுக்க வைத்தது. பின்னணி இசையும் பரபரப்பை ஏற்றுகிறது.

மோகன் குமாரின் ஒளிப்பதிவு கதையை மிகவும் சுவாரஸ்யமாகக் கொண்டு செல்ல பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. இருக்கும் இடத்திற்குள் எப்படியெல்லாம் தனது ஒளிப்பதிவின் மூலம் காட்சிகளை அழகுப்படுத்த முடியுமோ அதை அழகாக கொடுக்கவும் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

லோகேஷ்வரின் படத்தொகுப்பு ஷார்ப்பாக தனது வேலையை செய்திருறது. கதைக்கு என்ன தேவையோ, திரைக்கதையின் வேகத்திற்கு என்ன தேவையோ அதை அளவாக ”கட்” செய்து அளவாக கொடுத்திருக்கிறார் லோகேஷ்வர்.

ஒரு நல்ல கதையை மிகவும் அழகாக திரைக்கதை அமைத்து படத்தினை இயக்கியிருக்கிறார் இயக்குனர் நவீன். ராதாரவிக்கும் அவரது மனைவிக்குமிடையேயான காதல் எங்கு முளைத்தது என்பதை 2டி தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்திய விதமாக இருக்கட்டும், வயதானாலும் இருவருக்குமிடையேயான காதலை வெளிப்படுத்திய விதமாக இருக்கட்டும் என பல இடங்களில் தனது இயக்கத் திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் நவீன்.

தமிழ் சினிமாவில் இனி அடுத்தடுத்த படங்களில் இவரின் இயக்கத்திறமையை நிச்சயம் பார்க்கலாம் என்பதற்கு ஒரு சான்றாக இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் நவீன்.

மொத்தத்தில்,

கடைசி தோட்டா – காதலுக்காக தெறித்த தோட்டா…

Facebook Comments

Related Articles

Back to top button