Spotlightவிமர்சனங்கள்

கலகத் தலைவன் – விமர்சனம் 3.5/5

யக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் கலகத் தலைவன்.

டீசர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருந்த நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை எந்த அளவிற்கு கலகத்தலைவன் பூர்த்தி செய்திருக்கிறார் என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.

கதைப்படி,

ஒரு மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனத்தில் நடக்கும் சில மோசடி தரவுகளை அந்நிறுவனத்தில் பணிபுரியும் நபர் ஒருவர் வேறு ஒரு நபரிடம் விற்று காசு பார்ப்பதாக அந்நிறுவனத்தின் நிறுவனருக்கு தெரிய வருகிறது. அதே நிறுவனத்தில் ஒரு உயர் பதவியில் இருந்து வருபவர் உதயநிதி ஸ்டாலின்.

சில வாரங்களில் அமெரிக்கா செல்லவிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில், நிறுவனத்தில் பணிபுரியும் மோசடியை வெளியே சொல்லும் அந்த நபரை கண்டுபிடிக்க, ஆரவ்வை நியமணம் அந்நிறுவனத்தின் நிறுவனர்.

அந்த நபரை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்துகிறார் ஆரவ். அந்த வேட்டையில், வரிசையாக பலர் சிக்கிவிட இதற்கு தலையாக வரும் உதயநிதி ஆரவ்விடம் சிக்கினாரா இல்லையா.? எதற்காக உதயநிதி இதை செய்கிறார்.? என்பதற்கான பதிலை இயக்குனர் இரண்டாம் பாதியில் வைத்து முடித்திருக்கிறார்.

நாயகன் உதயநிதி ஸ்டாலின், கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வு. மிரள வைக்கும் பார்வையிலும் வசன உச்சரிப்பிலும் நன்றாகவே தேர்ச்சியாகியிருக்கிறார். பெரிதாக இவருக்கான ஆக்‌ஷன் காட்சிகள் இல்லையென்றாலும், கொடுக்கப்பட்ட காட்சியை நெத்தி பொட்டில் அடித்தாற்போல் செய்து முடித்திருக்கிறார்.

அழகு தேவதையாக காட்சியளித்து காட்சிக்கு காட்சி புத்துணர்ச்சி ஊட்டிருக்கிறார். உதயநிதி உடனான காதல் காட்சியாக இருக்கட்டும், க்ளைமாக்ஸ் காட்சியில் உதயநிதி உடனான பிரிவு காட்சியாக இருக்கட்டும் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.

படத்தின் தூணாக வந்து நிற்கிறார் வில்லனாக வரும் ஆரவ். அக்கதாபாத்திரத்தின் வலுவை மிகவும் தெளிவாக புரிந்து கொண்டு, அதற்கு உயிர் கொடுத்திருக்கிறார் ஆரவ். மிடுக்கான தோற்றத்தையும், எனர்ஜியையும் படத்தில் நன்றாகவே கொடுத்திருக்கிறார். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் கனக்கச்சிதமாக தனது கேரக்டரை செய்து முடித்திருக்கிறார் கலையரசன்.

காலங்கள் கடந்து கடந்து படங்களை இயக்கினாலும் ஒவ்வொரு படத்திற்கும் ஒரு முத்திரையை கச்சிதமாக பதித்து வருகிறார் இயக்குனர் மகிழ்திருமேனி. அதேபோல் தான் இந்த படத்திலும் ஒரு முத்திரையை பதித்திருக்கிறார். தினசரி செய்திதாள்களையும், தொலைக்காட்சி செய்திகளையும் பார்த்து படித்து கடந்து போகும் செய்திக்குப் பின்னால் எவ்வளவு பெரிய பாதிப்புகள் இருக்கிறது என்பதை கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் இயக்குனர்.

அரசிடம் இருந்து ஒரு நிறுவனம் தனியாருக்குச் செல்லும் போது அதற்கு பின்னால் என்ன மாதிரியான இழப்பு, யார் யாருக்கெல்லாம் இழப்பு என்பதை வெளிச்சம் போட்டு காட்டி கைதட்டல் வாங்கியிருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி.

அதிலும், படத்தில் இடம்பெறும் காதல் காட்சிகள், இரயில் நிலைய காட்சி, க்ளைமாக்ஸ் காட்சி மூன்றும் இப்படத்தில் தனித்துவமாக நிலைநிற்கிறது.

படத்தின் பாடல்கள் அருமையாக இருந்தாலும், ஆங்காங்கே தென்படும் “ஸ்பீடு ப்ரேக்கர்” போல படத்தின் வேகத்தைக் குறைத்து விட்டுச் செல்கிறது.

படத்திற்கு ஒரு பெரும் பலம் என்றே கூறலாம் ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை. காட்சி ஒவ்வொன்றிற்கும் ஒருவிதமான பின்னணி இசையை கொடுத்து காட்சியை ரசிக்க வைத்ததில் ஸ்ரீகாந்த் தேவாவின் பங்கு அலப்பறியது.

தில் ராஜ்ஜின் ஒளிப்பதிவும் படத்தில் கூடுதல் கவனம் பெற்றிருக்கிறது.. படம் முழுவதும் ஒருவகையான ’யுனிக்’ முத்திரயை பயன்படுத்தியது ஒளிப்பதிவிற்கு கூடுதல் பலம்.

க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியை இன்னும் சற்று வேகம் கூட்டியிருந்தால் கலகத்தின் கலம் இன்னும் சூடு பிடித்திருக்கும்…

இருந்தாலும்,

கலகத் தலைவன் – ஆட்ட நாயகன் 

Facebook Comments

Related Articles

Back to top button