
“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?” என்ற சுவாரஸ்யமான கேள்வியுடன் திருமண வாழ்க்கையை புதிய கோணத்தில் அணுகும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக ‘பியார் பிரேமா கல்யாணம்’ உருவாகியுள்ளது. உலகம் முழுவதும் ரசிகர்களை கவரும் வகையில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் Netflix தளத்தில் வெளியாகிறது.
இயக்குநர் இளன், இந்தப் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகிறார். அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சான்வீ மேக்னா கதாநாயகியாக நடித்துள்ளார். காதல், குடும்பம், உறவுகள் மற்றும் நவீன திருமண வாழ்க்கையை நகைச்சுவை மற்றும் உணர்வுகளுடன் சொல்லும் வித்தியாசமான குடும்ப திரைப்படமாக இது உருவாகியுள்ளது.
மாப்பிள்ளை மணமகள் வீட்டிற்கு குடிபெயர்ந்தால்?
சமூக வலைதளங்களில் பிரபலமான இன்ஃப்ளூயன்சரான பவி (சான்வீ மேக்னா), திருமணத்திற்குப் பிறகும் தனது பெற்றோர் வீட்டை விட்டு செல்ல மறுக்கிறார். இதனால் வழக்கத்திற்கு மாறாக, அவரது கணவராக நடித்துள்ள இளன், மனைவியின் வீட்டிற்கே குடிபெயர்கிறார்.
அதன்பிறகு தொடங்கும் குடும்ப கலாட்டா, தலைமுறை இடையேயான கருத்து வேறுபாடுகள், கலாச்சார மோதல்கள், உறவுகளின் சிக்கல்கள் மற்றும் மனதை வருடும் தருணங்கள் ஆகியவற்றை சிரிப்பும் உணர்வுகளும் கலந்த திரைக்கதையில் படம் சொல்லுகிறது. “சந்தோஷமான வாழ்க்கைக்கான விதிகளை சமூகம் அல்ல, நாமே தீர்மானிக்க வேண்டும்” என்ற கருத்தை அழகாக எடுத்துரைக்கிறது.
நட்சத்திர பட்டாளம்
படத்தில் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன், டீப்ஸ் சைரஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களின் இயல்பான நடிப்பு குடும்ப ரசிகர்களை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Netflix-ன் நம்பிக்கை
Netflix இந்தியாவின் உள்ளடக்கப் பிரிவு துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில், “விதிகளை பின்பற்றும் காதல் கதைகளை விட, விதிகளை மாற்றி எழுதும் கதைகள்தான் மனதில் நிற்கும். திருமணத்திற்குப் பிறகு மணமகன், மணமகள் வீட்டில் வாழ்ந்தால் என்ன நடக்கும் என்ற புதுமையான கருத்தை மையமாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம், நகைச்சுவை, குடும்பம் மற்றும் நவீன உறவுகளை அழகாக கொண்டாடுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர்
‘Made in Korea’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, உலகளாவிய ரசிகர்களை கவரக்கூடிய மற்றொரு தமிழ் கதையாக ‘பியார் பிரேமா கல்யாணம்’ உருவாகியுள்ளதாக தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் தெரிவித்துள்ளார். தமிழ் குடும்ப மதிப்புகளையும், இன்றைய தலைமுறையின் உறவுகளையும் ஒன்றாக இணைக்கும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இது இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
யுவன் இசையில் காதலும் குடும்பமும்
படத்திற்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா, காதல், குடும்பம், தனித்துவம் மற்றும் வாழ்க்கையின் மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் மனதை வருடும் பாடல்களால் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளார்.
காதல், குடும்பம், சிரிப்பு மற்றும் உணர்வுகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் கொண்டாடும் ‘பியார் பிரேமா கல்யாணம்’, ஆகஸ்ட் 21 முதல் Netflix-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது.





