
நடிகர்கள்: பாரதிராஜா, யோகிபாபு, கெளதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன்
இயக்கம்: தங்கர் பச்சான்
இசை : ஜி வி பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு: ஏகாம்பரம்
ஓய்வு பெற்ற நீதிபதியான பாரதிராஜாவிற்கு மூன்று பிள்ளைகள். இரண்டு பிள்ளைகள் தங்களது குடும்பத்தோடு வெளிநாடுகளில் செட்டில் ஆகிவிட, மூன்றாவது மகனான கெளதம் வாசுதேவ் மேனனோடு வாழ்ந்து வருகிறார் பாரதிராஜா.
அனைத்தும் இருந்தும் எதுவும் இல்லாதது போன்ற ஒரு வாழ்க்கையில் இருந்து வருகிறார் பாரதிராஜா. மனக்கசப்பில் பாரதிராஜாவுடன் பேசாமல் இருக்கிறார் கெளதம். இதனால் வெறுப்பில் இருக்கிறார் பாரதிராஜா.
அந்நேரம், அவரின் கைக்கு ஒரு கடிதம் சிக்குகிறது. அந்த கடிதத்தை முகவரியை தேடி ஒருவரிடமும் கூறிக் கொள்ளாமல் வீட்டை விட்டுச் செல்கிறார் பாரதிராஜா.
இது ஒருபுறம் இருக்க, பெற்றெடுக்காத குழந்தையை தான் குழந்தையாக நினைத்து ஒரு குழந்தை மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார் யோகிபாபு. அந்த குழந்தையும் யோகிபாபு மீது அப்படி ஒரு பாசத்தை வைத்துள்ளது. இவர்கள் இருவரையும் பிரிக்க நினைக்கிறார்கள்.
பாரதிராஜாவும் யோகிபாபுவும் ஒரு புள்ளியில் இணைகிறார்கள். அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
இயக்கத்தில் மிகப்பெரும் ஜாம்பவான தங்கர் பச்சானின் இயக்கமா இது என சோகத்துடன் கேட்கும்படியான ஒரு படத்தை இயக்கி வைத்திருக்கிறார் இயக்குனர் தங்கர் பச்சான்.
காட்சி எதுவும் படத்தின் கதையோடு ஒட்டிக் கொள்ளாமல் தனியாக நிற்கிறது. ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிக்கும் அப்படி ஒரு ஜம்ப்.
பாரதிராஜா மற்றும் கெளதம் இருவரும் நடிக்கிறார்கள் என்பது வெளிச்சமாக தெரிந்தது படத்திற்கு மிகப்பெரும் பலவீனம். அருவி என்ற அற்புதமான படைப்பில் தனது அருமையான நடிப்பைக் கொடுத்த அதிதி இப்படத்தில் மாறுபட்டு நிற்கிறார்.
இந்த படத்தில் நமக்கு கிடைத்த ஒரே ஆறுதல் அது யோகிபாபு மட்டும் தான். பெறாத பிள்ளைக்காகவும், அவள் மீது வைத்திருக்கும் பாசம் என காட்சிகளில் ஒரு நல்லதொரு உயிரோட்டத்தைக் கொடுத்திருக்கிறார் யோகிபாபு.
அந்த குழந்தையும் அப்படியொரு நடிப்பைக் கொடுத்திருக்கிறது. ஜி வி பிரகாஷிற்கு என்ன தான் ஆச்சு.? என கேட்க வைத்துவிட்டார்…
கருமேகங்கள் கலைகின்றன – செயற்கைத் தனமான நடிப்பால் படத்தோடு நாம் கனெக்ட் ஆக இயலவில்லை..