
நடிகையாக இருக்கும் கஸ்தூரி, பழங்குடி இன மக்களின் வாழ்வுரிமைக்காக போராடுகிறார்.
இவரும் பத்திரிகையாளராக வரும் வரலட்சுமியும் நண்பர்கள். பழங்குடி மக்களின் உரிமைகளை பறித்து, அங்குள்ள 45 பேர்களை காட்டுத்தீயால் இறந்துவிட்டதாக தவறான செய்தியை பரப்புகின்றனர்.
இதனை அறிந்து சரியான ஆதாரங்களை திரட்டுகிறார் கஸ்தூரி. இதில், பல முக்கிய நபர்களும் சிக்குகிறார்கள். இதனால், கஸ்தூரியை தீர்த்துக் கட்ட அந்த விஐபி-க்கள் முயற்சிக்கின்றனர்.
திரட்டிய ஆதாரங்களை வரலட்சுமியிடம் கொடுக்க நினைக்கும் வேளையில், கஸ்தூரியை அந்த கும்பல் கொலை செய்து விடுகிறது.
வீட்டில் சிக்கிய ஆதாரங்களை எடுக்க தனது நண்பர்களோடு செல்லும் வரலட்சுமிக்கு, நடக்கும் நிகழ்வுகளே ‘வெல்வெட் நகரம்’ படத்தின் மீதிக் கதை.
இடைவேளை வரை படத்தின் நாயகி வரலட்சுமி தான் என்று தான் சொன்ன இயக்குனர், இடைவேளைக்குப் பிறகு வரலட்சுமிக்கு எங்கு தான் சென்றார் என்று தான் கேட்க தோன்றுகிறது.
வரலட்சுமி தனது கேரக்டரை தெளிவாக செய்து முடித்தாலும், படத்தில் முழுவதும் அதை செய்து முடிக்காமல், ஏதோ கேரக்டர் நடிகர் போல் வந்து சென்றது எரிச்சலடைய வைத்தது.
கஸ்தூரி, ரமேஷ் திலக், அர்ஜாய், சந்தோஷ் கிருஷ்ணா, மாளவிகா சுந்தர், பிரகாஷ் ராகவன், கண்ணன் பொன்னையா, குமார், மதன் குமார் என பலர் நடித்துள்ளனர்.
அனைவருக்குமே பெரிதாக ஸ்கோப் இல்லை. காட்சிகளுக்கு காட்சி அவ்வப்போது அனைவருமே எட்டிப் பார்த்து செல்கின்றனர்.
முதல் பாதி ஏதோ கடமைக்கு சென்றாலும், இரண்டாம் பாதியில் கதை வேகமெடுக்கிறது. பரபரப்பாக கதை நகர, ரசிகர்களை சீட்டின் நுனியில் அமர வைக்கிறார் இயக்குனர் மனோஜ் குமார் நடராஜன்.
கதையின் ஓட்டத்தில் கவனம் செலுத்திய இயக்குனர், கதையிலும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றியது.
சரண் ராகவனின் பின்னனி இசை கதையின் ஓட்டத்திற்கு உயிர் கொடுத்தது.
பகத் குமாரின் ஒளிப்பதிவு சிறப்பு…
வெல்வெட் நகரம்: நகரத்தை இன்னும் சற்று பளிச்சென்று செதுக்கியிருக்கலாம்.