
கிஷோர் முத்துராமலிங்கம் அவர்களின் எழுத்து மற்றும் இயக்கத்தில் முனீஷ்காந்த், விஜயலக்ஷமி, காளி வெங்கட், ராதாரவி, வேலா ராமமூர்த்தி, குரேஷி, மாளவிகா அவினேஷ், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் இந்த “மிடில் கிளாஸ்”.
படத்தினை தேவ் மற்று கே வி துரை தயாரித்திருக்கிறார்கள். சுதர்ஷன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்ய, பிரணவ் முனிராஜ் இசையமைத்திருக்கிறார்.
சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். எம் எஸ் பி மாதவன் கலை இயக்கத்தை பார்த்திருக்கிறார்.
தனியார் நிறுவனத்தில் அசிஸ்டெண்டாக பணிபுரிந்து வருகிறார் முனீஷ்காந்த். இவரது மனைவியாக வருகிறார் விஜயலக்ஷ்மி. இவர்களுக்கு 2 குழந்தைகள். மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது இவர்களது குடும்பம்.
குடும்ப செலவிற்காக சின்ன சின்ன வேலைகளை அவ்வப்போது செய்து வருகிறார் விஜயலக்ஷ்மி. இருந்தாலும் தன்னால் மிகப்பெரிய வசதி படைத்த வாழ்க்கையை வாழ முடியவில்லை என்று கூறி, அவ்வப்போது முனிஷ்காந்தை வறுத்தெடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் விஜயலக்ஷ்மி.
இந்நிலையில், முனிஷ்காந்தின் இறந்து போன தந்தை முன்னொரு காலத்தில் ஒரு சிறிய கடை ஒன்றை சேட் ஒருவரிடம் கொடுக்க, அது தற்போது கோடி கணக்கில் விலை மதிப்புமிக்க ஒன்றாக இருக்கிறது.
முனீஷ்காந்த், சேட்’டிடம் சென்று தான் இன்னார் மகன் என்று கூறியதும், அவருக்கு ஒரு கோடி ரூபாயை செக் எழுதி கொடுக்கிறார் அந்த சேட்.
இதனால், செய்வதறியாது திகைத்து நிற்கையில், செக்’கை தவற விடுகிறார். அதே சமயம், செக் கொடுத்த சேட்’டும் இறந்து விடுகிறார். இதற்கு பிறகு முனிஷ்காந்த் & விஜயலக்ஷ்மியின் மிடில் கிளாஸ் வாழ்க்கையானது என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.

சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி வந்த நடிகர் முனீஷ்காந்த், முதல் முறையாக கதையின் நாயகனாக நடித்து அசத்தியிருக்கிறார். மிடில் கிளாஸ் வாழ்க்கையில் வாழும் ஒரு நபர் எப்படியான சூழலை சந்திப்பான் என்பதை வெளிச்சமாக காட்டியிருக்கிறார் முனீஷ்காந்த். மிகவும் யதார்த்தமான நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார். தனது குடும்பத்திற்காக ஓடும் ஓட்டம், செக்கை தொலைத்துவிட்டு படும் தவிப்பு என கார்ல் மார்க்ஸ் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் முனீஷ்காந்த்.
படத்தின் ஆரம்பத்திலிருந்தே தனது கதாபாத்திரத்தை மிகவும் கனமானதாகவே கொண்டு சென்றிருக்கிறார் விஜயலக்ஷமி. ஒருமனைவி கணவனிடம் இப்படியெல்லாம் நடந்து கொள்வாரா என்று அனைவரையும் வியக்க வைக்கும் அளவிற்கான ஒரு கோபக்கார மனைவியாக படத்தில் வாழ்ந்திருக்கிறார் விஜயலக்ஷ்மி. அதற்காக, செக்’கை தொலைத்ததற்காக கணவனை யூ டியூபில் இப்படியெல்லாம் ஒரு பெண் பேசுவாரா என்பது யோசிக்க வேண்டிய ஒன்று தான்.
படத்தில் இவர்களது இரண்டு பேர் மட்டும் ஒட்டுமொத்த படத்தையும் தாங்கிச் சென்றிருக்கின்றனர். கோடாங்கி வடிவேலு மற்றும் குரேஷி இருவரின் காமெடி படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.
இரண்டாம் பாதியில் எட்டிப் பார்த்த ராதாரவி மற்றும் மாளவிகா அவினாஷ் இருவருமே தங்களது இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
படத்தில் முதல் பாதி லாஜிக் இல்லா ஓட்டமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆங்காங்கே சின்ன சின்ன காமெடி, க்ளைமாக்ஸில் செண்டிமெண்ட் என படம் தன்னை தப்ப வைத்துக் கொண்டதே தவிர, பெரிதான ஒரு தாக்கத்தை ஏற்படுத்த படம் தவறியிருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
பாடல்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை என்றாலும் பின்னணி இசை படத்தினை தாங்கிச் செல்கிறது. ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது.
குழந்தைகளுக்காக கஷ்டப்படும் விஜயலக்ஷ்மி, அக்காவின் முன்னால் தனது கெளரவம் இழந்து விடும் என்பதற்காக மீட்டர் வட்டி வாங்கி தனது தம்பிக்கு நகை வாங்கி போட்டதெல்லாம் எப்படி ஏற்றுக் கொள்வது.? படம் முழுவதும் அதீத கோபத்தை காட்டிக் கொண்டே இருந்த விஜயலக்ஷ்மி, கடைசி பத்து நிமிடம் மட்டும் சாந்தமாக மாறுவதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மிடில் கிளாஸ் – ஓகே ரகம் தான்.





