
பிரிட்டோ அவர்களின் இயக்கத்தில் பாரதிராஜா, வடிவுக்கரசி, நட்டி, சாண்டி, ரியோ ராஜ், யோகிபாபு, துளசி, ஆதிரா, கனிகா, லவ்லின் சந்திரசேகர், ரிஷிகாந்த், லவ்லின் சந்திரசேகர், ரிஷிகாந்த், ஏகன், விக்னேஷ்காந்த், காவ்யா, ஆயிரா கிருஷ்ணன், முல்லை அரசி, மைம் கோபி, விஜி சந்திரசேகர், சுரேஷ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி இன்று திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் “நிறம் மாறும் உலகில்”.
மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா இருவரும் இணைந்து படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தேவ் பிரகாஷ் ரேகன் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். எல் கேத்ரின் ஷோபா & லெனின் இருவரும் படத்தினை தயாரித்திருக்கிறார்கள்.
படத்தின் ட்ரெய்லர் மக்கள் மத்தியில் வரவேற்புப் பெற்ற நிலையில், படத்தின் விமர்சனத்தை தற்போது பார்த்துவிடலாம்.
தாய் விஜி சந்திரசேகரிடம் எப்போதுமே ஒரு வேண்டா வெறுப்பைக் கக்கிக் கொண்டிருக்கிறார் மகள் லவ்லின். நல்லதுக்கென்று சொன்னாலும், அதை தவறாக நினைத்துக் கொள்கிறார் லவ்லின்.
தாயிடம் கோபித்துக் கொண்டு, இரயில் ஏறி தன் நண்பி வீட்டிற்கு பயணப்படுகிறார் லவ்லின். இரயிலில் டிடிஆர்’ஆக வரும் யோகிபாபுவை சந்திக்கிறார் லவ்லின். தாய் நம் வாழ்வில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதை நான்கு உண்மைச் சம்பவங்கள் மூலம் அவரிடம் விவரிக்கிறார் யோகிபாபு.
கதை ஆரம்பிக்கிறது.
முதல் கதையில் தமிழ்நாட்டில் இருந்து சென்று மும்பையில் மிகப்பெரும் தாதாவாக உருவெடுத்து நிற்கிறார் நட்டி. சிறுவயதில் தனது தாய் பாலியல் தொழில் செய்து தன்னை வளர்த்ததையும், தாயின் அன்பு இப்போது கிடைக்கவில்லையே என்றும் தினம் தினம் ஏங்குபவராக வருகிறார் நட்டி.
தனது மகனைக் கொன்ற நட்டியை எப்படியாவது கொல்லை வேண்டுமென்று வெறிகொண்டு அவரை தேடி வருகிறார் மற்றொரு ரெளடியான சுரேஷ் மேனன்.
கிராமத்திலிருந்து வாய் பேசமுடியாத தனது காதலியை இழுத்துக் கொண்டு மும்பைக்கு வந்துவிடுகிறார் ரிஷிகாந்த். இவர், எதேச்சையாக சுரேஷ் மேனன் கேங்’கில் சிக்கிக் கொள்கிறார். நட்டியைக் கொல்ல ரிஷிகாந்தை பயன்படுத்துகின்றனர்.
அதன்பிறகு என்ன நடந்தது என்பதே இக்கதையின் மீதிக் கதை.
இரண்டாம் கதையில் மீனவ குடும்பத்தைச் சேர்ந்த ரியோ, சிறுவயதிலேயே தனது தந்தையை இழந்துவிட்டதால், தாய் ஆதிரா தான் உலகமென வாழ்ந்து வருகிறார் ரியோ. மகனை கலெக்டராக பார்க்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார் ஆதிரா.
இவரது நண்பனாக வருகிறார் விக்னேஷ்காந்த். திடீரென ஆதிரா, மயக்கம் போட்டு கீழே விழ, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கேன்சர் இருப்பதாகவும், மருத்துவம் பார்க்க பல லட்சம் செலவாகும் எனவும் கூறிவிடுகின்றனர்.
என்னசெய்வதென்று தெரியாது அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் ரியோ, தனது தாயை காப்பாற்ற வேண்டும் என்று பணத்திற்காக ஓடுகிறார்.
ஏரியா ரெளடியாக இருக்கும் மைம் கோபியிடம் பணம் கேட்க, அவரும் இரண்டு நபர்களை கடத்தி தங்களிடம் தந்து விட்டால், கேட்கும் தொகையை தருவதாக கூறிவிடுகிறார் மைம் கோபி.
தாயின் லட்சியமா அல்லது தாயின் உயிரா இரண்டில் எதை ரியோ கையில் எடுத்தார் என்பதே இக்கதையின் மீதிக் கதை.
மூன்றாம் கதையில் கிராமத்தில் பாரதிராஜாவும் வடிவுக்கரசியும் கணவன் மனைவி. இரண்டு மகன்களை பெற்றெடுத்தவர்கள். மாதம் 1 ஆம் தேதி ஆனால், மகன்கள் அனுப்பும் காசுக்காக தபால் நிலையத்தில் காத்திருக்கும் எளிமையான பெற்றோர்கள்.
ஆனால், மகன்கள் இருவரோ பெற்றோர்கள் மீது பாசமில்லாமல் பேசுகின்றனர். அதுமட்டுமல்லாமல் அவர்களை துளியளவிற்கும் மரியாதை கொடுக்காமல் இருக்கின்றனர்.
ஆனால், பாரதிராஜாவும் வடிவுக்கரசியும் ஒருவருக்கொருவர் அளவு கடந்த காதலில் இருக்கின்றனர். இவர்களின் வாழ்க்கையில் அடுத்து என்ன நடந்தது என்பதே இக்கதையின் மீதிக் கதை.
நான்காம் கதையில் கணவனை இழந்து ஒரு வருடம் ஆன நிலையில், மகன் மற்றும் மருமகள் இருவரால் முதியோர் இல்லத்திற்கு அனுப்பப்படுகிறார் துளசி. ஒருநாள், முதியோர் இல்லத்திலிருந்து வெளியே வந்த துளசி, பெற்றோர் யாருமில்லாத துணைக்கு யாரும் இல்லாத தனி ஒருவனாய் தனது வாழ்க்கையை ஆட்டோ ஓட்டி பார்த்துக் கொள்ளும் சாண்டியின் ஆட்டோவில் ஏறுகிறார் துளசி.
யாரும் இல்லாதவர்களாய் இருக்கும் இவர்கள், ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் போது இவர்களின் வாழ்க்கையில் அடுத்து என்ன நடந்தது என்பதே இக்கதையின் மீதிக் கதை.
நான்கு கதைகளிலும் பெற்றோர்கள், அதிலும் தாய்மார்கள் நம் வாழ்க்கையில் எந்த அளவிற்கு முக்கியமானவர்கள் என்பதை மிகவும் உயிரோட்டமாக கூறியிருக்கிறார் இயக்குனர்.
ஒவ்வொரு கேரக்டர்களுமே தங்களின் கதாபாத்திரத்தின் பலத்தை உணர்ந்து நன்றாகவே அக்கதாபாத்திரத்தை பூர்த்தி செய்து நடித்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக கோடிட்டு சொல்ல வேண்டுமென்றால், பாரதிராஜா & வடிவுக்கரசியின் காதலென்பது ஒரு அழகிய காவியம் போல நம்மை பெரிதும் வருடும் வண்ணம் அக்கதாபாத்திரத்திரத்தை மிக அழகாக காட்டியிருக்கிறார் இயக்குனர். இவர்களின் இளமை கதாபாத்திரமாக நடித்த இருவருமே அழகு தான்.
இவர்களுக்கு அடுத்தப்படியாக, சாண்டி மற்றும் துளசியின் உறவு பாசம். தாய்க்காக ஏங்கி நின்ற சாண்டி, மகனின் பாசத்திற்காக ஏங்கி நின்ற துளசி என இருவரும் கண்களில் ஈரம் எட்டிப் பார்க்க வைக்கும் அளவிற்கு மிகவும் நேர்த்தியான நடிப்பைக் கொடுத்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்கள்.
தனது தாயின் பாசத்திற்காக ஏங்கி அப்பெண்ணின் மடியில் அழும் காட்சியில் நட்டி, தனது நடிப்பின் உச்சத்தைக் கொடுத்துவிட்டார். அப்படியொரு நடிப்பை வேறு எந்த படத்திலும் கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.
நடிகர் ரியோ மற்றும் ஆதிரா இருவரும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். இவர்களின் நடிப்பு படத்தில் பெரிதாக பேசப்படும் அளவிற்கு இருக்கிறது. அதிலும், ரியோ தனது தாய் மீது வைத்திருக்கும் பாசத்தை கண்ணீர் துளிகள் வழியாக வெளிப்படுத்தும் போது நம்மையும் கலங்க வைத்துவிடுகிறார்.
படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்கள் படத்திற்கு பெரிதாகவே வலு சேர்த்திருக்கின்றன.
படத்திற்கு பெலும் வலு சேர்த்தது யார் என்றால் அது இசையமைப்பாளர் தான். முதல் கதையான நட்டி பயணத்திலேயே இசையமைப்பாளரின் திறமை நன்றாகவே வெளிப்பட்டது. பின்னணி இசையில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.
மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா இருவரின் ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. வெளிச்சத்தை அளவாக கொடுத்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்கள் இருவரும்.
சரியான இடங்களில் தனது கத்தியை (எடிட்) பயன்படுத்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர்.
தாய் மீது வைத்திருக்கும் பாசத்திற்கு எல்லை என்பது கிடையாது என்ற கருத்தை மிகவும் அழுத்தமாகவும் ஆழமாகவும் நான்கு கதை மூலம் வெளிப்படுத்தியிருக்கும் இயக்குனர் பிரிட்டோவிற்கு ஆகப்பெரும் வாழ்த்துகள்.
தாயின் பெருமையையும் மகிமையையும் பற்றி பேசுவதற்கும் போற்றுவதற்கும் ஆயிரம் படங்கள் வந்தாலும் அதையும் நாம் போற்றிக் கொண்டாட தான் வேண்டும்.
ஒவ்வொரு கதையிலும் தனது உயிரோட்டத்தைக் கொடுத்து படம் பார்ப்பவர்களின் கண்களில் வந்த கண்ணீரை தனது வெற்றியாக்கிக் கொண்டார் இயக்குனர் பிரிட்டோ..
நிறம் மாறும் உலகில் – தாய்ப்பாசம்





