Spotlightசினிமா

20 நாட்களில் 2 கோடி காணிக்கை; பழனி மலைக்கோயிலில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். இங்கு அவர்கள் அளித்த காணிக்கையின் மூலம் கடந்த 20 நாள்களில் உண்டியல்கள் நிரம்பின.

இதையடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி கார்த்திகை மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவியர், ஆசிரியர்கள், திருக்கோயில் அலுவலர்கள் பங்கேற்றனர்.

முதல் நாள் எண்ணிக்கையில் வருவாயாக ரூ.2 கோடியே7 லட்சத்து 10 ஆயிரத்து 60 கிடைத்தது.

உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், பட்டை, தாலி, மோதிரம், தங்கச் சங்கிலி, தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன பிஸ்கட், காசுகள், சிறிய வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கம் 804 கிராமும், வெள்ளி 10 ஆயிரத்து 060 கிராமும் இருந்தது.

மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் கரன்சிகள் 477 -ம் கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

உண்டியல் எண்ணும் பணியில் பழனிக் கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொறுப்பு) செந்தில்குமார், திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம், மேலாளர் உமா உள்ளிட்டோர் பங்கேற்றனர். உண்டியல் எண்ணும் பணி வியாழக்கிழமையும்(இன்றும்) நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Facebook Comments

Related Articles

Back to top button