விமர்சனங்கள்

பெருசு – விமர்சனம் 3.25/5

அறிமுக இயக்குனர் இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில், நிஹாரிகா, சாந்தினி, கார்த்திகேயன், பால சரவணன், முனீஸ் காந்த், ரெடி கிங்ஸ்லி, வி டி வி கணேஷ், கருணாகரன், சுவாமிநாதன், தனம், தீபா ஷங்கர், கஜராஜ் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “பெருசு”.

படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அருண் ராஜ். தயாரித்திருக்கிறார் கார்த்திகேயன்.

கதைக்குள் பயணித்துவிடலாம்..

கிராமத்தில் நல்லதொரு பெயர் எடுத்து வைத்திருப்பவர் ஹாலாசியம் என்பவர். இவரின் மனைவியாக வருபவர் தனம். இவருக்கு சுனில் மற்றும் வைபவ் இரு மகன்கள்.

சுனிலின் மனைவியாக சாந்தினியும் வைபவின் மனைவியாக நிஹாரிகாவும் வருகிறார்கள்.

ஒருநாள், வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது இறந்து விடுகிறார் ஹாலாசியம். உயிர் மூச்சு நின்ற பிறகும் உயிர்நாடி அடங்காமல் ”நிற்கிறது”.

இதனைக் கண்ட வீட்டில் இருப்பவர்களுக்கு அதிர்ச்சி. இப்படியொரு சம்பவம் வெளியே தெரிந்தால், யாரும் மதிக்க மாட்டார்கள் என்றறிந்து, அதனை மறைக்க முற்படுகின்றனர்.

எடுத்த பல முயற்சியும் தோல்வியடைய, சொந்த பந்தங்கள் துக்கம் விசாரிக்க வீட்டிற்கு படையெடுக்கிறது.

இறுதியில் உயிர்நாடி அடங்கியதா இல்லையா.?? என்பதை அடால்ட் காமெடியோடு கூறியிருக்கும் படம் தான் இந்த “பெருசு” படத்தின் மீதிக் கதை.

குடிகாரன் கதாபாத்திரமாக வைபவ், தனது கேரக்டரை அசால்டாக செய்து முடித்திருக்கிறார். கிடைக்கும் இடங்களிலெல்லாம் சின்ன சின்னதாக குட்டையை குழப்பிக் கொண்டே காட்சிகளை நகர்த்தியிருப்பது வைபவிற்கு கைதேர்ந்ததாக இருக்கிறது.

இதற்கு முன் நடித்த படங்களில் தான் கொடுத்த நடிப்பையே இப்படத்திலும் கொடுத்து அசத்தியிருக்கிறார் சுனில். தனது தந்தையை பற்றி புரிந்து கொள்ளும் இடத்தில் சுனில் தனது செண்டிமெண்ட் டச்சை கொடுத்திருக்கிறார்.

தான்வந்த இடங்களிலெல்லாம் காட்சிகளை கலகலப்பாக வைத்து நன்றாகவே ஸ்கோர் செய்துவிட்டார் பாலசரவணன்.

தமிழுக்கு அறிமுகமாகியிருக்கும் நிஹாரிகா, பார்ப்பதற்கு அழகாகவும் நடிப்பினை அளவாகவும் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். மேலும், படத்தில் நடித்த சாந்தினி, தனம், தீபா, கஜராஜ், சாமிநாதன், கருணாகரன், முனீஸ்காந்த், கஜராஜ் உள்ளிட்ட நடிகர்களும் தங்களது பங்களிப்பினை அளவாக கொடுத்து காட்சிகளை ரசிக்கும்படியாக கொடுத்திருந்தனர்.

குறும்பட கதையை கையில் எடுத்து அதை திரைப்படமாக்கியிருக்கிறார். முதல் பாதி கதை நகராமல் அதெ இடத்தில் நின்றது சற்று சலிப்பை ஏற்படுத்தினாலும், இரண்டாம் பாதியில் டாப் கியர் போட்டு படம் வேகமெடுத்ததால், பெருசு பெரிதாகவே தப்பித்து விட்டது.

க்ளைமாக்ஸ் காட்சியில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.

இசை மற்றும் ஒளிப்பதிவு இரண்டுமே படத்திற்கு பெரிதாக கைகொடுத்திருக்கிறது. வீடு மட்டுமே கதைக்களம் என்பதால் காட்சிகளை ரசிக்கும்படியாக கொடுத்து அசத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

நண்பர்களோடு சேர்ந்து வீக்-எண்ட்’ஐ கொண்டாட ஒரு தரமான படமாக இந்த பெருசு இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம். ஆபாசமில்லாத அடால்ட் காமெடி கொண்டு படத்தினை நகர்த்திய இயக்குனருக்கு பெரும் பாராட்டுகள்.

Facebook Comments

Related Articles

Back to top button