Spotlightசினிமாவிமர்சனங்கள்

ரங்கோலி – விமர்சனம் 3.5/5

நடிகர்கள்: ஹமரேஷ், ஆடுகளம் முருகதாஸ், சாய்ஸ்ரீ பிரபாகரன், அக்‌ஷயா, பிரார்த்தனா சந்தீப், அமீத் பார்கவ்

இயக்கம் & எழுத்து – வாலி மோகன் தாஸ்

இசை : சுந்தரமூர்த்தி

ஒளிப்பதிவு : மருதநாயகம்

பல படங்களில் சிறுவயது கதாபாத்திரத்தில் தோன்றி அசத்தியிருப்பார் இந்த ஹமரேஷ். உதாரணமாக, தெய்வத்திருமகள் படத்தில் விக்ரம் ஒரு சிறுவனை பார்த்து பயந்து செல்வார், அந்த சிறுவன் தான் இந்த ஹமரேஷ். இப்போது ஹீரோவாக களமிறங்கியிருக்கிறார்.

நாயகன் ஹமரேஷின் தந்தையாக வருகிறார் ஆடுகளம் முருகதாஸ். இவர், வட சென்னையில் சலவை தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவியாக சாய்ஸ்ரீ, மகளாக அக்‌ஷயா வருகிறார்கள்.

ஹமரேஷ் அங்குள்ள கார்ப்பரேஷன் பள்ளியில் படித்து வருகிறார். மகனை எப்படியாவது நல்லபடியாக படிக்க வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார் முருகதாஸ். படிப்பு ஒருபக்கம் நன்றாக இருந்தாலும், சேட்டை அதிகமாக செய்து வருகிறார் ஹமரேஷ்.

இதனால், கடன் வாங்கி தனது மகனை தனியார் பள்ளியில் சேர்த்து விடுகிறார். இதில் ஹமரேஷிற்கு உடன்பாடு இல்லை.

புது சூழல், புது மனிதர்கள் இது எதுவும் ஹமரேஷிற்கு பிடிக்கவில்லை. இருந்தாலும், தனக்கு பிடித்தமான பெண்ணான பிரார்த்தனா அந்த பள்ளியில் படிப்பதால், அந்த பள்ளியை ஏற்றுக் கொள்கிறான் ஹமரேஷ்.

கார்ப்பரேஷன் பள்ளியில் இருந்து வந்த ஹமரேஷை அப்பள்ளி மாணவர்கள் நண்பனாக ஏற்றுக் கொள்ள மறுத்து அவனை விரட்டுகிறார்கள். ஒருநாள், செய்யாத குற்றத்திற்காக ஹமரேஷ் மீது பழி வந்து விழுகிறது.

அந்த பழியால் ஹமரேஷை பிரார்த்தனா வெறுக்கிறாள்.. இதனால் உடைந்து போகிறான் ஹமரேஷ்.

தொடர்ந்து என்ன ஆனது.? பள்ளியை மாற்றினால் மாணவர்கள் ஒழுங்காக படித்து விடுவார்கள் என்ற முருகதாஸின் எண்ணம் சரிதானா.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக முதல் படம் என்பது போல் இல்லாமல், அழுத்தமான நடிப்பை அற்புதமாகவே கொடுத்திருக்கிறார் ஹமரேஷ். ஜி வி பிரகாஷ் போன்ற தோற்றத்தில் இருக்கும் ஹமரேஷ், விரைவில் அவரை போன்ற உச்சத்தை அடைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை… நடிப்பில் அப்படி ஒரு எனர்ஜி, கண் பார்வை, எமோஷன்ஸ், காதல் என அனைத்தையும் திரைக்குக் கொண்டு வந்து சேர்க்கிறார் ஹமரேஷ்..

கடந்த சில படங்களாக எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை மிக கவனமாகவும் தெளிவாகவும் செய்து வருகிறார் ஆடுகளம் முருகதாஸ். மிகவும் யதார்த்தமான நடிப்பைக் கொடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் முருகதாஸ்.

அதிலும், முருகதாஸின் மனைவியாக வரும் சாய்ஸ்ரீ, தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு வலம் வருவார். அப்படியொரு நடிப்பைக் கொடுத்து அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அக்காவாக நடித்த அக்‌ஷயா, ஒருபடி மேலே சென்று அசரடித்திருக்கிறார்.

பிரார்த்தனா தனது கண்களால் ரசிக்க வைத்திருக்கிறார். படத்தில் நடித்த ஏனைய கதாபாத்திரங்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்டத்தை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள்., நடிகர், நடிகைகளை கச்சிதமாக தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர்.

நில அரசியல், கல்வி அரசியல், உரிமை என சின்ன கதைக்குள் அவ்வளவு அழுத்தமான பதிவை பதித்து வைத்திருக்கிறார் இயக்குனர்.

எடுத்துக் கொண்ட மூலக்கதையில் சின்ன சின்ன தடைகள் ஆங்காங்கே ஏற்பட்டாலும், அடுத்தடுத்த நகர்வை கொடுத்து கதையின் சுவாரஸ்யத்தில் சமரசம் இல்லாமல் நகர வைத்திருக்கிறார் இயக்குனர்.

ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை பாடல்களால் நம்மை கதையோடு பயணிக்க வைத்துவிட்டார் இசையமைப்பாளர் சக்ரவர்த்தி. பாடல்கள் செல்கிறதா அல்லது கதை நகர்கிறதா என்ற எண்ணத்தில் பின்னணி இசையையும் பாடல்களையும் தெளிவாக கொடுத்து கரை சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர்.

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, முதல் காட்சியிலேயே தனது பதத்தை காண்பித்துவிடுகிறார் ஒளிப்பதிவாளர் மருதநாயகம். அவ்வளவு தெளிவான காட்சியை கொடுத்து நம்மை ரசிக்க வைத்திருப்பதில் ஒளிப்பதிவிற்கு மிகப்பெரும் பங்கு.

ரங்கோலி – ரத்தமில்லா சத்தமில்லா அழகு காவியமாக ஒரு வண்ணம்..

Facebook Comments

Related Articles

Back to top button