‘நீரின்றி அமையாது உலகு’ என்றார் வள்ளுவர். இந்தக் காலத்தில் ‘மொபைல் போன் இன்றி அமையாது உலகு’ என்ற நிலை உள்ளது .அந்த அளவிற்கு மொபைல் போன் நம்முடைய வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்டது.இன்றைய வாழ்க்கையில் மொபைல் போன் நமது இன்ப துன்பங்களில், கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்து வருகிறது.மனித உறவில் பல்வேறு சிக்கல்களுக்கும் பிரச்சினைகளுக்கும் காரணமாகவும் அது உள்ளது.மொபைல் போன் என்பது இன்று மனிதர்களின் மூன்றாவது கையாக மாறிவிட்டது.
அப்படி மொபைல் போனை மையமாக வைத்து ‘போனின்றி அமையாது உலகு’ என்கிற டேக் லைனுடன்
‘ரிங் ரிங்’ என்கிற பெயரில் ஒரு படம் உருவாகி உள்ளது. இப்படத்தை இயக்குநர் சக்திவேல் இயக்கி உள்ளார். இதற்கு முன்பு கந்தகோட்டை, ஈகோ, 4 சாரி படங்களை இயக்கிய இவருக்கு இது நான்காவது படம்.
இப்படத்தை தியா ஸ்ரீ கிரியேஷன்ஸ் மற்றும் ரூல் பிரேக்கர்ஸ் புரொடக்சன் சார்பில் ஜெகன் நாராயணன் , சக்திவேல் தயாரித்துள்ளனர்.
திருமணத்திற்கு முன்பு காதலர்கள் போனை மாற்றிக் கொண்ட கதை ‘லவ் டுடே’ என்றால் திருமணத்திற்குப் பிறகு தம்பதிகள் போனை மாற்றிக் கொண்ட கதை ‘ரிங் ரிங் ‘. இப்படத்தில் விவேக் பிரசன்னா,சாக்ஷி அகர்வால், டேனியல் அன்னி போப், பிரவீன், அர்ஜுனன், ஸ்வயம், சஹானா, ஜமுனா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்குப் பாடல்கள் பா. ஹரிஹரன், கலை இயக்கம் தினேஷ் , எடிட்டிங் பி. கே , ஒளிப்பதிவு பிரசாத் டிஎப்டி , இசை வசந்த் இசைப்பேட்டை,
திருமணத்துக்குப் பிறகு நான்கு தம்பதிகள் போனை மாற்றிக் கொள்கிறார்கள். அதற்குப் பிறகு அவர்கள் வாழ்க்கையில் நிகழும் நகைச்சுவையான, சுவாரஸ்யமான, மர்மங்கள் நிறைந்த , விறுவிறுப்பான சம்பவங்களைக் கொண்டு இந்தப் படம் உருவாகி இருக்கிறது.
நான்கு தம்பதிகளுக்கான பின்புலம் நான்கும் தனித்தனியாக இருக்கும்.
சென்னை, கிழக்கு கடற்கரைச் சாலை போன்ற இடங்களில் பெரிய வீடுகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.இதற்காக பெரிய அளவில் வீடு செட் போட்டும் படமாக்கி உள்ளனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு வாழ்த்தினார்.
2025 ஜனவரி 3ஆம் தேதி வெளியிடும் திட்டத்தோடு பணிகள் நடைபெற்று வருகின்றன.