இயக்குனர் சாச்சி இயக்கத்தில் சதீஷ், பவல் நவகீதன், அஜய்ராஜ், ரித்திகா, மைம் கோபி, பாவா செல்லதுரை, ராமதாஸ் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி வரும் வெள்ளியன்று திரைக்கு வரும் திரைப்படம் தான் சட்டம் என் கையில்.
பி ஜி முத்தையாவின் ஒளிப்பதிவில் ஜோன்ஸ் ராபர்ட் அவர்களின் இசையில் இப்படம் உருவாகியிருக்கிறது.
சண்முக கிரியேஷன்ஸ் சார்பில், பரத்வாஜ் முரளிகிருஷ்ணன், ஆனந்த கிருஷ்ணன் சண்முகம் மற்றும் ஸ்ரீ ராம் சத்யநாராயணன் இப்படத்தினை தயாரித்திருக்கிறார்கள்.
கதைக்குள் பயணித்து விடலாம்…
ஏற்காடு பகுதியில் கதையானது நகர்கிறது. ஏற்காடு காவல் நிலையத்தில், ஈகோ பிடித்த போலீஸாக வருகிறார் பவல் நவகீதன். புகார் கொடுக்க வரும் நபர்களிடம் ரெளடியாக நடந்து கொள்கிறார் பவல்.
இது ஒருபுறம் இருக்க, தனது காரில் இரவு நேரத்தில் அதிவேகமாக பயணித்து ஏற்காடு சென்று கொண்டிருக்கிறார் சதிஷ். அடந்த வனப்பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, பைக்கில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவரை சதிஷ், இடித்து விடுகிறார்.
இதில் நிலை தடுமாறி கீழே விழும் அந்த நபர் இறந்தும் விடுகிறார். செய்வதறியாது திகைத்து நிற்கும் சதீஷ், அந்த பிணத்தை எடுத்து தனது காரின் பின்பகுதியில் வைத்து விடுகிறார்.
பின், அங்கிருந்து செல்லும் வழியில் போலீஸாக வரும் பவலிடம் சிக்கிக் கொள்கிறார் சதீஷ். குடித்து விட்டு வாகனம் ஓட்டியதற்காகவும், காவலரை தாக்கியதற்காகவும் சதீஷை காவல்நிலையத்திற்கு பிடித்துச் செல்கின்றனர்.
காரையும் காவல்நிலையத்திற்கு எடுத்து வருகின்றனர். தன்னை தாக்கிய சதீஷை பழி வாங்க துடிக்கிறார் பவல். அதே சமயம், பவல் செய்யும் காரியம் பிடிக்காததால், அவருக்கு எதிராக நிற்கிறார் எஸ் ஐ அஜய் ராஜ்.
அதனால், சதீஷை காப்பாற்ற துடிக்கிறார் அஜ்ய் ராஜ். இந்த சமயத்தில், ஏற்காடு ஜங்கஷனில் ஒரு பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். அந்த வழக்கை போலீஸ் விசாரிக்கிறது.
கொலை செய்யப்பட்ட அந்த பெண் யார்.,? காரோடு காவல் நிலையத்தில் சிக்கிக் கொண்ட சதீஷின் நிலை என்ன.?? சதிஷின் மெளனத்திற்கு பின்னால் இருப்பது என்ன.?? என்பதே படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகன் சதீஷ் தான் என்று சொன்னாலும், அவருக்கான முக்கியத்துவம் பெரிதளவில் கொடுக்கப்படவில்லை. ஆங்காங்கே சற்று ஓவர் ஆக்டிங்கை கொடுத்து காட்சிகளை நசுக்கியிருக்கிறார் சதீஷ்.
மிகவும் யதார்த்தமாகவும், கதாபாத்திரத்தோடு நச்சென்று கச்சிதமாக பொருந்தியவர் பவல் நவகீதன்.
இவருக்கு அடுத்தபடியாக அஜய் ராஜ், தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிக கவனமாக கையாண்டு நடித்து அசத்தியிருக்கிறார் அஜய் ராஜ்.
படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளும் அவரவர்களுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து அழகாக நடித்திருக்கிறார்கள்.
படத்தின் திரைக்கதையை மிகவும் விறுவிறுப்பாக நகர்த்திச் சென்று சீட்டின் நுனியில் நம்மை அமர வைத்திருக்கிறார் இயக்குனர் சாச்சி.
அடுத்தடுத்து நடக்கும் ட்விஸ்ட் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரும் பலம். க்ளைமாக்ஸ் காட்சியில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.
பி ஜி முத்தையாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம். அதுமட்டுமல்லாலம், பின்னணி இசையும் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது.
மொத்தத்தில்,
சட்டம் என் கையில் – வேகம்