விமர்சனங்கள்

மெய்யழகன் – விமர்சனம் 3.5/5

96 பட இயக்குனர் சி பிரேம்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி, கார்த்தி, ராஜ்கிரண், இளவரசு, ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், கருணாகரன், ஸ்வாதி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் மெய்யழகன்.

இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் கோவிந்த் வசந்தா. மேலும், ஒளிப்பதிவு செய்திருக்கிறார் மகேந்திரன் ஜெயராஜு.

2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா படத்தினை தயாரித்திருக்கிறார்கள்.

96 படத்திற்குப் பிறகு மிக நீண்ட காலமாக எந்த படத்தையும் இயக்காமல் இருந்திருந்த பிரேம்குமார், தற்போது இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

96 திரைப்படம் மிகப்பெரும் வெற்றிபெற்ற காரணத்தால், இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. எழுந்த எதிர்பார்ப்பை இயக்குனர் பூர்த்தி செய்தாரா இல்லையா என்பதை படத்தின் விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.

கதைக்குள் பயணித்துவிடலாம்,

96ம் ஆண்டு காலகட்டத்தில் கதை தஞ்சாவூரில் நகர்கிறது. சிறுவயது அரவிந்த்சாமியாக வருகிறார் சரண் சக்தி( அருள் மொழி). இவரது தந்தையாக வருபவர் ஜெயபிரகாஷ். அங்குள்ள பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார்.

ஜெயபிரகாஷிற்கு ஊரில் நல்லதொரு மரியாதை இருக்கிறது. ஒரு சில சொந்த பந்தங்களின் சூழ்ச்சியால் தனது வீட்டை இழக்கிறார் ஜெயபிரகாஷ்.

தான் வாழ்ந்த, வளர்ந்த வீட்டை விட்டும், ஊரை விட்டும் வெளியேறுகின்றனர் ஜெயபிரகாஷும் அவரது குடும்பமும்.

சென்னையில் வாழ்ந்து வருகின்றனர் ஜெயபிரகாஷின் குடும்பம். வருடங்கள் உருண்டோட, நிகழ்காலத்திற்கு கதை பயணிக்கிறது.

தனது சித்தி மகளின் திருமணத்திற்கு மீண்டும் தான் வாழ்ந்த தஞ்சைக்கு செல்ல வேண்டியதாகிறது அரவிந்த்சாமிக்கு.

திருமண நிகழ்விற்கு வரும் அரவிந்த்சாமியை சொந்த பந்தங்கள் வரவேற்க, அவர்களுடன் பேசி மகிழ்கிறார். அப்போது, அத்தான் என்று உரிமையோடு அழைத்து அரவிந்த்சாமியிடம் பேசுகிறார் கார்த்தி. கார்த்தியை யார் என்று அரவிந்த்சாமிற்கு தெரியவில்லை.

ஆனால், அத்தான் என்று மிகவும் உரிமையோடு அழைத்து தன்னிடம் பேசுபவரிடம் எப்படி பெயர் கேட்பது என்று கேட்காமல் அவருடன் பழகுகிறார் அரவிந்த்சாமி.

தொடர்ந்து, இரவு முழுவதும் கார்த்தியோடு பயணித்து அவரது குணங்களை கண்டு வியந்து போகிறார் அரவிந்த்சாமி. தன்னை அத்தான் அத்தான் என்று உரிமையோடு அழைத்து அப்படி கவனித்துக் கவனித்துக் கொண்டு கார்த்தியின் பெயர் என்ன என கேட்க கூட முடியாமல் தவிக்கிறார் அரவிந்த் சாமி.

அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி இருவரும் இரு தூண்களாக படத்தைத் தாங்கி நிற்கின்றனர். படத்தின் கதையை ஆரம்பித்து வைக்கிறார். பின் கார்த்தியும் இணைந்து கதையை தூக்கிக் கொண்டு செல்கின்றனர்.

இருவருக்குமான கெமிஸ்ட்ரி படத்தின் கதைக்கு நன்றாகவே துணை நிற்கிறது. கதையின் ஆரம்பத்தில் திருமண மண்டபத்தில் நடக்கும் ஒவ்வொரு காட்சியும் நாம் பார்த்த காட்சிகளாக நம் கண்முன்னே வந்து செல்லும் ஒன்று தான்.

தங்கைக்காக கொண்டு வந்த பரிசை தங்கைக்கு அரவிந்தசாமி அணிவிக்கும் இடத்தில் பலரும் கண்களில் ஈரத்தை வைத்துக் கொள்கின்றனர். அதற்கு கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை பெரும் துணையாக நின்றது.

யார் என்று தெரியாத ஒரு சொந்தம் நம் மீது இப்படியான பாசத்தை வைத்திருக்கிறதே என்று எண்ணி கண்கலங்கும் இடத்தில் அரவிந்த்சாமியின் நடிப்பு உச்சம்.

பல கதைகளை, பல நினைவுகளை தோண்டி எடுத்து கூறும் இடத்தில் ரசிக்க வைத்திருக்கிறார் கார்த்தி. இந்த அமைதியான ஒரு நடிப்பை எங்கு தான் வைத்திருந்தாரோ என்று கேட்கும் அளவிற்கான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

ட்விஸ்ட் காட்சிகள் இல்லை, குத்து பாடல் இல்லை, சண்டைக் காட்சிகள் இல்லை இவை இல்லாமல் ஒரு படத்தை கொடுத்து அதில் வெற்றி பெற முடியுமா என்ற பலரின் கேள்விக்கு முடியும் என்று மெய்யழகன் என்ற காவியத்தை படைத்துக் கொடுத்து வென்றிருக்கிறார் இயக்குனர் பிரேம் குமார்.

இரண்டாம் பாதியில் கதை சற்று தொய்வடைந்தாலும், பெரிதான பாதிப்பை கொடுக்கவில்லை., ஊர் விட்டு ஊர் வந்து பிழைக்கும் பலரும் ஏதாவது ஒரு இடத்தில் கண்கலங்க வைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

கோவிந்த் வசந்தாவின் அமைதியான இசை படத்திற்கு மிகப்பெரும் பலம். ஒளிப்பதிவு அழகை கூட்டியுள்ளது.

மெய்யழகன் – அழகன்

Facebook Comments

Related Articles

Back to top button