
இயக்கம்: சந்தோஷ் கோபிநாத்
நடிகர்கள்: பிரஜின், ஷானா, போஸ் வெங்கட், நரேன்
இசை: ஆர் டி மோகன்
ஒளிப்பதிவு: ப்ரதீப்
தயாரிப்பு: ராஜன் ஜோசப் தாமஸ்
கதைப்படி,
தென்காசி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் நாயகன் பிரஜின், நண்பர்களுடன் சேர்ந்து பொதுமக்களுக்கு தேவையான நல்ல விஷயங்களை செய்து வருகிறார். இதனால் அந்த ஊர் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சருக்கு பகையாளியாக மாறுகிறார். அமைச்சர் ஆடுகளம் நரேன், போலீஸ் மற்றும் ரவுடிகள் மூலம் பிரஜினுக்கு தொந்தரவு கொடுக்கிறார்.
ஒரு கட்டத்தில் போலீஸ், பிரஜின் தந்தையை காவல் நிலையத்தில் வைத்து அடிக்கிறார்கள். இதை பார்த்து கோபப்படும் பிரஜின், போலீஸ் இன்ஸ்பெக்டரை காவல் நிலையத்திலேயே அடித்து கொல்கிறார். இந்த விஷயம் பெரிய அளவில் பேசப்படுகிறது. போஸ் வெங்கட் தலைமையில் தனிப்படை அமைத்து பிரஜின் மற்றும் நண்பர்களை பிடிக்க போலீஸ் திட்டம் போடுகிறது.
இறுதியில் பிரஜின் போலீசிடம் சிக்கினாரா? தனது குடும்பத்தின் மீது கைவைத்த அமைச்சர் ஆடுகளம் நரேனை பிரஜின் பழிவாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் பிரஜின், பொதுமக்களுக்கு நல்லது செய்பவராகவும், அநியாயத்தை தட்டி கேட்கும் வீரனாகவும் நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஷானா ஒரு சில காட்சிகளே படத்தில் வருகிறார். அதிலும் பெரிதாக மனதில் ஒட்டவில்லை.
போலீஸ் அதிகாரியாக வரும் போஸ் வெங்கட் மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அமைச்சராக வரும் ஆடுகளம் நரேன் வில்லத்தனத்தில் மிரட்ட முயற்சி செய்து இருக்கிறார்.
மக்களுக்கு நலல்து செய்தால், அது ஆட்சியார்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும்… அவர்களால் நமக்கு இன்னல்கள் ஏற்படும் என்பதை கூற முயற்சித்திருக்கிறார் இயக்குனர்.
ஒவ்வொரு அமைச்சரும் நம் நாட்டின் சேவகர்கள் என்று சொல்ல முயற்சி செய்து இருக்கிறார். திரைக்கதையில் பெரிதாகவே கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர். இன்னும் நன்றாகவே தனது திரைக்கதையில் பயணம் செய்திருக்கலாம்..
பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரும் சறுக்கல் தான். பின்னணி இசை என்ற பெயரில் படம் முழுவதும் காதுகளுக்கு இரைச்சலைத் தான் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்.
ஒளிப்பதிவு ஓகே ரகமாக கடந்து போகலாம்..
மொத்தத்தில்,
சேவகர் – மனதில் ஒட்டவில்லை.





