
தமிழக சட்டசபை தேர்தலில் பரபரப்பான கட்டத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் எட்டி விட்டது.
திமுக தலைவர் ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டால் வி.ஐ.பி. தொகுதியாக அனைவராலும் கவனிக்கப்படும் தொகுதி அரக்கோணம்.
திமுக கோட்டையாக இருந்த அரக்கோணம் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக கைவசம் உள்ளது.
அதிமுக சார்பில் வக்கீல் ரவி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
இந்த முறை ஹாட்ரிக் வெற்றி அடிக்க திட்டமிடுகிறார்.
ஆனால், கடந்த இரு முறை போல இல்லாமல் இந்த முறை திமுகவும் பலம் வாய்ந்த வேட்பாளரை களம் இறக்க திட்டமிட்டுள்ளது.
இதை முறியடிக்க எம்.எல்.ஏ.ரவியும் பல முயற்சிகள் எடுத்து வருகிறாராம்.
அதன் ஒரு பகுதியாக மாற்றுக் கட்சியினரை திடீர் திடீரென சந்தித்து பேசி வருகிறாராம்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு காங்கிரஸ் பிரமுகரை நள்ளிரவு நேரத்தில் திடீரென எம்.எல் ஏ. ரவி சந்தித்து பேசி இருக்கிறாராம்.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் பிரமுகரை சந்தித்ததன் நோக்கமே “திமுக கூட்டணியில் அரக்கோணம் தொகுதியை கேட்டு வாங்கச் சொல்லி, அதன் மூலம் தன் வெற்றியை உறுதி படுத்திக் கொள்ள இந்த சந்திப்பு என்ற தகவல் அரக்கோணம் முழுதும் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.
அப்படியே கூட்டணிக்கு இல்லாமல் போனாலும் கடந்த தேர்தல் போலவே ” தனி கவனிப்பு ” செய்தாவது எதிர்க் கட்சியின் முக்கியஸ்தர்களை வேலை செய்ய விடாமல் தடுத்து தனது வெற்றியை தக்க வைத்து கொள்ள முடியுமா என்றும் யோசிக்கிறாராம் சிட்டிங் எம்.எல்.ஏ.
எது எப்படியோ அரக்கோணத்தை கைப்பற்ற திமுகவும், தக்க வைத்து கொள்ள அதிமுகவும் பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும் தொகுதி அதிமுகவினரின் கடும் அதிருப்தியும், அடிப்படை வசதிகள் சரியாக நிறைவேற்றாததால் தொகுதி மக்களின் சலிப்பும் திமுக வெற்றிக்கு சாதகமாக அமையும் என்கிறது அரக்கோணம் பொதுஜனம்…
களத்திலிருந்து நமது செய்தியாளர்.




