Spotlightவிமர்சனங்கள்

கடைசி விவசாயி – விமர்சனம் 3.5/5

விவசாயத்தை பற்றியும் விவசாயிகள் படும் இன்னல்கள் பற்றியும் அவர்களின் வாழ்வாதாரம் பற்றியும் பேசும் படங்கள் தமிழ் சினிமாவில் அவ்வப்போது வந்து செல்வது வழக்கமான ஒன்று தான். என்னதான் அவர்களின் இன்னல்களை நாம் மேடை மேடையாய் பேசிக் கொண்டிருந்தாலும், அவர்களின் வாழ்க்கை நிலை என்பது இன்னமும் கேள்விக்குறி தான்…

அந்த வகையில், ”கடைசி விவசாயி” மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துமா இல்லையா என்பதை படத்தின் விமர்சனம் மூலம் காணலாம்..

கதைப்படி,

மாயாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நல்லாண்டி. இவருக்கு கிட்டத்தட்ட 80 வயதிற்கும் மேல். இவர்தான் இந்த படத்தின் ஹீரோவாக வருகிறார். உசிலம்பட்டியில் ஒரு விவசாயியாக வருகிறார் நல்லாண்டி. சுத்துப்பட்டியெங்கும் வறட்சி தாண்டவமாட, நல்லாண்டியின் கேணியில் தண்ணீர் இருக்கிறது. அந்த தண்ணீரை வைத்து தனது நிலத்தில் தானே விவசாயம் செய்து வருகிறார். இயற்கை முறையிலேயே விவசாயம் செய்து வருபவர் இவர்.

விவசாயத்தை மட்டுமே தனது முழுமூச்சாகக் கொண்டு வாழ்பவர் நல்லாண்டி. எவ்வித செயற்கை உரத்தையும் நாடாமல் இயற்கை முறையிலேயே தனது விவசாயத்தை பார்த்துக் கொள்பவர்.

வறட்சியால் பல விவசாயிகள் தங்களது நிலங்களை ரியல் எஸ்டேட்காரர்களிடம் விற்று வரும் சூழலில், நல்லாண்டி நிலத்தையும் பல லட்சம் கொடுத்து வாங்க முயல்கின்றனர் ரியல் எஸ்டேட்காரர்கள். அங்கு இருக்கும் தனது நிலத்தை யாருக்கும் விற்க மாட்டேன் என்று கரராக கூறிவிடுகிறார் நல்லாண்டி.

ஊரில் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்கின்றனர் ஊரார்கள். உசிலம்பட்டியைச் சுற்றியிருக்கின்ற சிறு ஊர்களும், பல்வேறு சமூகத்தினரும் அந்த திருவிழாவில் கலந்து கொள்ளும்படியாக திருவிழாவிற்கு ஏற்பாடு நடைபெறுகிறது.

திருவிழாவிற்கு பல தானியங்களை படையலாக வைத்து வழிபடுவது பல கிராமங்களில் இன்னமும் புழக்கத்தில் உள்ள ஒரு வழக்கம். தாங்கள் விவசாயம் புரியும் தானியங்களை குல தெய்வ கோவிலுக்கு படைப்பார்கள். அங்கு படைப்பதற்காகவே தானியங்களை தனியாக பயிரிடுவார்கள். அப்படியாக நெல்மணியை நல்லாண்டி விவசாயம் செய்கிறார்.

பிராணிகள் மீதும் அன்பு செலுத்தி வரும் நல்லாண்டியின் விவசாய நிலம் அருகே மூன்று மயில்கள் இறந்து கிடக்கின்றன. இறந்த மயில்களை தனது நிலத்திலேயே புதைத்தும் விடுகிறார். இந்த செய்தி காவல்துறைக்குச் செல்ல நல்லாண்டி மீது வழக்கு பதியப்படுகிறது.

பயிரிடப்பட்ட நாற்று பாதியில் நிற்க, சிறையில் அடைக்கப்பட்டார் நல்லாண்டி…

நல்லாண்டி வழக்கில் இருந்து மீண்டாரா ? பயிர்கள் என்னவானது. ??
திருவிழா நடந்ததா என்பதே படத்தின் மீதிக் கதை

நாயகனாக தோன்றியுள்ள நல்லாண்டி இப்படத்தில் நடித்திருக்கிறார் என்று எந்த இடத்திலும் கூற முடியாது. வாழ்ந்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.. இவர் வாழ்ந்ததைத் தான் இயக்குனர் மணிகண்டன் கேமரா கொண்டு படமாக்கியிருக்கிறார் என்பது போல் மிகத் தேர்ந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார். ஓர் நெற்பயிரும் ஒன்று தான், ஓர் உயிரும் ஒன்று தான் என்று அவர் கூறும் போது ஒரு விவசாயியின் வேதனை உச்சம் தொடுகிறது.

பயிர்களைக் கண்டு துவண்டு நிற்கும் காட்சியாக இருக்கட்டும், விவசாயம் செய்யும் போது இருக்கும் மன மகிழ்வாக இருக்கட்டும் இரண்டையும் கண்முன்னே கொண்டு வந்து கதாபாத்திரத்தை நிலை நிறுத்தியிருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் மற்றும் ரிச்சர்ட் இருவர்களின் கூட்டணியில் உருவான பின்னனி இசை மற்றும் பாடல்களில் இன்னும் சற்று உயிர் கொடுத்திருந்திருக்கலாம்.. இந்த வகையான படங்களில் இசைஞானியின் இசை தனிக் கவனம் பெறும் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

முருகன் பக்தனாக, இறந்து போன தனது முறைப் பெண்ணை நினைத்துக் கொண்டு ஒரு நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வரும் கதாபாத்திரம் தான் விஜய் சேதுபதியோடது..

கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்தாலும் ஓடிக் கொண்டிருக்கும் கதையை எந்த விதத்திலும் எதிலும் பாதிக்கவில்லை என்பதால் பெரிதான ஈர்ப்பை விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் கொடுக்க முடியவில்லை.

அதேபோல் யோகிபாபுவின் கதாபாத்திரமும் பெரிதான ஈர்ப்பை கொடுக்கவில்லை என்பதே நிதர்சனம்.

மற்றபடி, நீதிபதியாக வந்த ரெய்ச்சல் ரெபேகா, போலீஸ் ஏட்டாக வந்த காளைப் பாண்டியன் ,கிராமத்து வாசிகளாக வந்த முனீஸ்வரன், காளிமுத்து உள்ளிட்ட கதாபாத்திரங்கள் மிகவும் நேர்த்தியான ஒரு தேர்வு.

படத்திற்கு மிகப்பெரும் ஒரு பலமாக இருந்தது ஒளிப்பதிவு… போகிற போக்கில் மயில், மாடு, கோழி, யானை என் ஜீவ ராசிகள் அனைத்தையும் தனது கேமராவில் நடிக்க வைத்த மணிகண்டனை பாராட்டியே ஆக வேண்டும்.

படத்தின் டைட்டில் கார்டில் ஆரம்பித்த ஒளிப்பதிவின் ஆச்சர்யம், தொடர்ந்து படம் முழுக்க பிரதிபலித்தது….

ஒரு கிராமம், கிராம மக்களின் வாழ்வியல், கைபேசி, ரேஷன் கார்டு, மின்சாரம், ஆதார் கார்டு என எதுவும் இல்லாமல் வாழும் நல்லாண்டி என ஒரு கிராமத்திற்குள் நம்மை இழுத்துச் சென்று நல்லாண்டியோடு நம்மையும் பயணிக்க வைத்த இயக்குனருக்கு ஆகப்பெரும் நன்றிகள்…

இந்த பாராட்டுகளை செவிகளில் பெற நல்லாண்டி தற்போது நம்மோடு இல்லை என்பதே வருத்தம்…

கடைசி விவசாயி – கடைக் கோடி விவசாயியின் கள்ளமில்லா உள்ளத்தின் கதை…

Facebook Comments

Related Articles

Back to top button