
இயக்கம்: கென் கருணாஸ்
நடிகர்கள்: கென், அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், ப்ரியாஷ்னி யாதவ்,
ஒளிப்பதிவு: விக்கி
இசை: ஜி வி பிரகாஷ்குமார்
தயாரிப்பு: கருப்பையா சி ராம், சுலோட்சனா குமார்
கதைப்படி,
கணவன் மனைவியாக வரும் சுராஜ்- தேவதர்ஷினி இருவருக்கும் வருடங்கள் கழித்து பிறந்த மகனாக வருகிறார் கென். கென் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன்.
ஒரே மகன் என்பதால், அதீத பாசம் வைத்திருக்கிறார் தேவதர்ஷினி. தானும் படிக்காமல் இருப்பதால் தான் கஷ்டப்படுகிறோம், தனது மகனும் அப்படி ஆகிவிடக் கூடாது என்று மகனை பார்க்கும்போதெல்லாம் கண்டிக்கிறார் சுராஜ்.
ஆனால், கென் படிக்காமல், பள்ளியில் இருக்கும் தனது சக நண்பர்களுடன் அரட்டை அடிப்பதும், தனது பள்ளி பெண்களின் பின்னால் சுற்றுவதுமாய் இருந்து வருகிறார்.
பத்தாம் வகுப்பு தேர்வில் நூலிழையில் பாஸ் ஆகிவிடுகிறார் கென். ப்ளஸ் ஒன் வகுப்பிலும் சேர்கிறார். அங்கு, தனது பக்கத்து வகுப்பில் படிக்கும் மீனாட்சியுடன் நட்பு ஏற்பட, நட்பு காதலாக மாறி விடுகிறது.
இந்த காதலைப் பிரிக்க ஒரு சிலர் திட்டம் தீட்டுகின்றனர். அதேசமயம், அதே பள்ளியில் படிக்கும் ப்ரியாஷ்னி யாதவ், கென்னை சுற்றி சுற்றி காதலித்து வருகிறார். இதனால், கென்னுக்கும் மீனாட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட, அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
கதையின் சுவாரஸ்யத்தைக் கருத்தில் கொண்டு, படத்தின் கதையை பெரிதாக கூற முடியவில்லை.
ஹீரோவாக இது முதல் படம் என்பது போல் இல்லாமல், ஒரு அனுபவ நடிகரின் நடிப்பை இப்படத்தில் கொடுத்திருக்கிறார் கென். மேலும், பல இடங்களில் கைதட்டல் கொடுக்கும் நடிப்பைத்தான் கொடுத்திருக்கிறார். இத்தனை நாளா எங்கப்பா இருந்த என்று தான் கேட்கத் தோன்றியது.
அசுரன், சார் உள்ளிட்ட படங்களில் தனக்குக் கிடைத்த அனுபவத்தை இப்படத்தில் நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார் கென். படத்தில் ஒரு காட்சி வரும், பிரவீன் உன் சிரிப்பு நல்லா இருக்குடா என்று, உண்மையாகவே கென் சிரிப்பு அவ்வளவு அழகு… ஒவ்வொரு காட்சியையும் நல்லதொரு எண்டர்டெயின்மெண்ட் ஆக கொண்டு சென்றிருக்கிறார்.
கடைசி அரை மணி நேர காட்சிகள் படத்தின் உயிர் நாடி என்றே கூறலாம். இந்த படத்தின் மையக்கரு எது என்பதை நன்றாக புரிந்து கொண்டு, அதை அழகாக செய்து முடித்திருக்கிறார்.
ஜி வி பிரகாஷ்குமாரின் இசை படத்திற்கு பெரிதாக கைகொடுத்திருக்கிறது. பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கிறது.
படத்தில் நடித்த மூன்று நாயகிகளும் காட்சிக்கு காட்சி அழகாக தெரிந்து கொண்டே இருந்தார்கள். மேலும், தாய் – தந்தையாக நடித்திருந்த சுராஜ் மற்றும் தேவதர்ஷினி இருவருமே அப்படியொரு அழகான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்..
கென்னிடம் சுராஜ் பேசும் கடைசி காட்சி படம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துவிட்டது. விக்கியின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக காட்டியிருக்கிறது.
முழுக்க முழுக்க ஜென் ஜி தலைமுறைகளை டார்கெட் செய்து எடுக்கப்பட்ட இப்படம், அனைவரும் நிச்சயமாக கவரும்..
தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு பெரிய இடத்திற்கு வரும் அனைத்து தகுதிகளை தன்னகத்தே வைத்து கென் எடுத்து வைத்திருக்கும் முதல் படி வெற்றிப்படியாக அமைந்திருக்கிறது.





