![](https://tamilveedhi.com/wp-content/uploads/2018/06/Tik-Tik-Tik-posters-2.jpg)
தனக்கான ஒரு பாதையை வகுத்து அதில் பயணித்து நடப்பவர் ஜெயம் ரவி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் கொள்பவர். வனமகன், மிருதன் போன்ற வித்தியாசமான படங்கள் இதற்கு சான்று. இந்தியாவில் முதல் முறையாக விண்வெளி சார்ந்த கதையையும் அவர் தேர்ந்தெடுத்து இப்படத்தில் நடித்துள்ளார்.
படம் ஆரம்பிக்கும்போதே அனலை கக்கிக் கொண்டு சுமார் 8 டன் எரிகல் ஒன்று சென்னையில் வந்து விழுகின்றது. இதனால் ஒரு சில உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றது.
அதை தொடர்ந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அதை விட பெரியளவில் ஒரு எரிகல் மோதவருவதாக தகவல் கிடைக்கின்றது.
அது வந்து மோதினால் தமிழகம், இலங்கை, ஆந்திரா ஆகிய இடங்கள் அழியும் என்றும் தெரியவருகிறது. இதை தடுக்க மெஜிசிஷியன் மற்றும் திருடனான ஜெயம் ரவியின் உதவியை நாடுகின்றனர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி குழுவினர்.
தனது நண்பர்கள் அர்ஜூன், திலக்குடன் சேர்ந்து விண்வெளி ஆராய்ச்சியாளர்களான நிவேதா பெத்துராஜ் மற்றும் விண்செண்ட்டுடன் விண்வெளி பயணம் கொள்கிறார் ஜெயம் ரவி.
இந்த குழுவினர் விண்வெளிக்கு சென்று அந்த எரிகல்லை உடைத்து கல்லை திசை திருப்பினார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஷக்தி செளந்தர்ராஜன்.
வித்தியாசமாக கதையை தேர்ந்தெடுத்ததற்காகவே ஜெயம் ரவிக்கு தனி பாராட்டுக்கள். மெஜிசிஷியனாக வருவதிலும் சரி, தனது மகனுக்கு நல்ல ஒரு பாசம் காட்டும் தந்தையாக வருவதிலும் சரி தனது நடிப்பை செவ்வெனவே செய்து முடித்திருக்கிறார். வழக்கம் போல் தனது நடிப்பில் எந்த வித குறைகளையும் வைக்காமல் நடித்திருக்கிறார்.
நிவேதா பெத்துராஜ் முதல் படத்திற்கு அடுத்ததாக அதிகமாக ரசித்தது என்றால் இந்த படத்தில்தான். கதைக்கு ஏற்ற கதாபாத்திரமாகவே மாறியுள்ளார். ரமேஷ் திலக் மற்றும் அர்ஜூன் வழக்கம்போல் கதைக்கு செட் ஆகவில்லை.
படத்தில் பல இடங்களில் லாஜிக் ஓட்டைகள். பெரிய பெரிய ஜாம்பவான்கள் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், ஒரு திருடன் வந்து அந்த வேலையை செய்து முடிப்பது ஏற்க முடியாத ஒன்றாக உள்ளது.
சீனா வீரர்களிடம் இருந்து ஜெயம் ரவி விண்வெளியில் தப்பிக்கும் காட்சிகள் ஹாலிவுட் தரம்.
படத்தின் லாஜிக் எதையும் பார்க்காமல் நிம்மதியாக, ஒரு புது முயற்சியோடு இந்த குழு எடுத்துள்ள இந்த டிக் டிக் டிக் படத்தை குழந்தைகளுடன் ஒரு முறை நிச்சயம் பார்த்துவிட்டு வரலாம்.
வெங்கடேஷின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். இமானின் இசையில் பின்னனி நம்மை மிரள வைத்துள்ளது. சிஜி, ஆர்ட் அனைத்தும் படத்திற்கு பலம்தான்.
டிக் டிக் டிக் – லாஜிக் பார்க்காதீர்கள்… மேஜிக்கை பாருங்கள்!