
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் தான் வாரிசு. சரத்குமார், ஷ்யாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், பிரகாஷ்ராஜ், ராஷ்மிகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் மிக முக்கிய நட்சத்திரமாக இருக்கும் விஜய் நடித்திருக்கும் இந்த படம் தாக்குபிடித்திருக்கிறதா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.
கதைப்படி,
பல ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள மிகப்பெரும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் சரத்குமார். இவருக்கு ஸ்ரீ காந்த், ஷ்யாம், விஜய் மூவரும் மகன்கள். இதில் சரத்குமாருக்கும் விஜய்க்கும் தகராறு ஏற்பட, குடும்பத்தை விட்டு தனியாக வாழ்ந்து வருகிறார் விஜய்.
இந்நிலையில், சரத்குமாருக்கு ஒரு நோய் வர, தனது இருக்கையில் அமரப்போகும் அடுத்த வாரிசை தேர்ந்தெடுக்கும் முனைப்பில் இருக்கிறார்.. அப்போது வீட்டில் பிரச்சனைகள் ஏற்பட, அப்போது அங்கு வரும் விஜய்யை வாரிசாக அறிவிக்கிறார்.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் இரண்டையும் விஜய் சரிசெய்தாரா இல்லையா என்பதே வாரிசு படத்தின் மீதி கதை.
படத்தின் ஆரம்பத்தில் இருந்தே, கதைக்குள் நம்மை இழுத்துச் செல்லும் அந்த நுணுக்கத்தை இயக்குனர் சரிவர கையாளவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அம்மா – மகன் மற்றும் அப்பா – மகன் இவர்களுக்குள் இருக்கும் பாசப்பிணைப்பு நம்மை ஒட்டாமல் சென்றது படத்தின் பலவீனத்தைக் காட்டியிருக்கிறது.
படத்தில் நடித்திருந்த கதாபாத்திரங்கள் அனைவரும் மிகவும் யதார்த்தமாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர்களை மிகவும் நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார்கள், இந்த கேரக்டர்கள் அனைத்தும் கதையோடு ஒன்றிணையவில்லை என்பது தான் நிதர்சனம்.
படத்தின் நாயகனாக விஜய் அழகிலும் நடனத்திலும் ஜொலித்திருக்கிறார். இந்த வயதிலும் இப்படி ஒரு எனர்ஜி கொண்டு மிரட்டலான நடனத்தைக் கொடுக்கிறாரே என்று படம் பார்ப்பவர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்.
ராஷ்மிகாவிற்கு பெரிதான வேலை ஏதும் படத்தில் கொடுக்கப்படவில்லை. ராஷ்மிகா வந்தால் பாட்டு வருகிறது என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ரஞ்சிதமே பாடல் அனைவரையும் எழுந்து நின்று ஆட்டம் போட வைத்துள்ளது.
தமனின் இசையில் தீ தளபதி மற்றும் ரஞ்சிதமே பாடல் இரண்டும் மிரட்டலாக கொடுத்திருக்கிறார். பின்னணி இசையிலும் அதிரடியை கொடுத்திருக்கிறார்.
படத்தின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக கொடுத்து காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். யோகிபாபுவின் காமெடி மட்டுமே முதல் பாதியை தாங்கி நிற்கிறது.,
பல வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிற, கேட்டுக் கொண்டிருக்கிற குடும்பக்கதையையே இயக்குனர் கையில் எடுத்து தெலுங்கு மசாலாவை சற்று தூவி வாரிசு என்ற படத்தை நமக்கு கொடுத்திருக்கிறார் இயக்குனர் வம்சி.
இரண்டாம் பாதியில் இரண்டு சண்டைக் காட்சிகள் அதிரடி கொடுத்து படத்தின் வேகத்தை சற்று ஏற்றியிருக்கிறது. நீளத்தைக் குறைத்து காட்சிகளை கச்சிதமாக கொடுத்திருந்தால் வாரிசு நிச்சயம் பொங்கலுக்கு ஜொலித்திருக்கும்.
இருந்தாலும்,
பொங்கலுக்கு குடும்பமாக சென்று பார்க்கும் படியாக வாரிசு இருக்கிறதா என்று கேட்டால் ஒரு முறை பார்த்துவிட்டு வரலாம் என்ற தோணியில் தான் இப்படம் இருக்கிறது.