
மரகத நாணயம் படத்தினை இயக்கிய இயக்குனரான ஏ ஆர் கே சரவன் இயக்கத்தில் ஆதி, ஆதிரா, காளி வெங்கட், வினய், முனீஷ்காந்த், முருகானந்தம், சசி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் வீரன். தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. ஒரு சூப்பர் ஹீரோ கதையாக உருவாகியிருக்கும் இப்படத்தின் விமர்சனத்தை பார்த்துவிடலாம்.
கதைப்படி,
இடி விழுந்ததால் பித்து பிடித்தவன் போல் இருந்த ஆதி, பல வருடங்கள் சிங்கப்பூரில் தங்கி விடுகிறார். இடி விழுந்ததவன் விழைவு சூப்பர் மேன் போல் கையை நீட்டினால் மின்சாரம் பாய்ச்சும் சக்தி கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஒருநிமிடம் தன் எதிரில் நிற்பவரின் மனநிலையையும் கண்ட்ரோல் செய்யக்கூடிய சக்தியும் ஆதிக்கு கிடைத்து விடுகிறது.
தனது கிராமத்திற்கு ஏதோ தீங்கு நடக்கவிருப்பதாக ஆதியின் நினைவில் வந்து வந்து செல்ல, உடனே சிங்கப்பூரில் இருந்து தனது கிராமத்திற்கு வருகிறார்.
அங்கு தனது கிராமத்தை சுற்றியுள்ள சுமார் 24 கிராமத்திற்கும் பூமிக்கடியில் எரிவாயு செல்லும் குழாய் பதித்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார் ஆதி. தனது கிராமத்திற்கும் போட்டு விட்டால் எரிவாயு திட்டத்தை செயல்படுத்தி விடும் சூழல் இருப்பதால், அதன் பாதிப்புகளை தனது கிராமத்து மக்களிடம் எடுத்துச் சொல்கிறார்.
அந்த எரிவாயு வெடித்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படும் என்பதை கூறியும் ஆதியின் கிராம மக்கள் செவி கொடுக்காமல் சென்று விடுகின்றனர்.
எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தினை செயல்படுத்தித் தரும் நிறுவனத்தின் தலைவராக வருகிறார் வினய்.
இறுதியாக தனது சக்தியை பயன்படுத்தி இந்த திட்டத்தை முறியடித்து மக்களை வீரனாக வரும் ஆதி காப்பாற்றினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
வீரனாக சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கிறார் ஆதி. நடிகர் ஆதி, இந்த கதைக்கான ஹீரோவாக ஜொலித்திருக்கிறாரா என்றா நிச்சயம் இல்லை என்று தான் கூற வேண்டும். உடல் மொழி மட்டுமல்லாது உடல் மொழியும் சற்று நம்பும்படியாக இருந்தால் மட்டுமே சூப்பர் ஹீரோவாக உருவெடுக்க முடியும். அதை ஆதி உறுதியாக ஏற்றுக் கொள்வார் என்று நம்புவோமாக. ஆனாலும், ஒரு சில இடங்களில் தனக்கான முத்திரை நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அதற்காக நிச்சயம் ஆதியை பாராட்டலாம்.
நாயகியான ஆதிரா, சிரிப்பில் நம்மை அதிகமாகவே கவர்கிறார். பெரிதான காட்சிகள் இல்லையென்றாலும் தனக்கான காட்சியை அழகாகவே பூர்த்தி செய்து கொடுத்திருக்கிறார்.
வில்லனாக வினய்,உயரத்திலும் சரி நடிப்பிலும் சரி ஷார்ப் தான். என்ன வேண்டுமோ அதை மட்டுமே ஸ்டைலாக கொடுத்து பதற வைத்திருக்கிறார்.
முனீஷ் காந்த் மற்றும் காளி வெங்கட் இருவருக்குமான காமெடி காட்சிகள் முழுவதுமாக வொர்க்-அவுட் ஆகவில்லை என்றாலும் ஓரிரு இடங்களில் கைகொடுத்திருக்கின்றன.
படத்தில் அதிகமாக ஸ்கோர் செய்தது யார் என்றால், காமெடி நடிகராக வந்து கலகலப்பூட்டிய முருகாணந்தம் தான். நாயகியை பெண் பார்க்க வரும் காட்சிகளில் திரையரங்கை சிரிப்பு அரங்கமாக மாற்றி விடுகிறார். .வினய்யின் சகோதரர் கோவிலுக்கு வந்து செல்லும் காட்சியும் அரங்கம் அதிரும் சிரிப்பலை தான்.
ஆதியின் நண்பனாக நடித்த சசி, நக்கலைட்ஸ் டீம், வினய்யின் சகோதரராக நடித்தவர், பூசாரியாக நடித்தவர், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தவர் என படத்தில் நடித்த அனைவரும் படத்திற்கு பலமாகவே வந்து நிற்கின்றனர்.
மரகதநாணயம் என்ற மாபெரும் ஹிட் கொடுத்த இயக்குனரான ஏ ஆர் கே சரவன், வீரன் படத்தில் சற்று கதையின் ஓட்டத்தில் சுவாரஸ்யத்தை கூட்டியிருந்திருக்கலாமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமல் இல்லை. வழக்கமான சூப்பர் ஹீரோ சப்ஜெக்டையே கையில் எடுத்திருப்பதால் கதையில் ஈர்ப்பு ஏற்படாமல் போய்விட்டது.
படத்தில் ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் கருத்துகள் பல இருக்கின்றன. அதற்காக கைதட்டலும் கொடுக்கலாம். படத்தின் பாடல்கள் ஓகே என்றாலும் பின்னணி இசையில் சற்று அதிகமாகவே கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.,
ஒளிப்பதிவு படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. சூப்பர் பவரை யூஸ் பண்ணாமலே, ரெளடிகளை அடித்து பறக்க விடும் போது சற்று காமெடித்தனமாகவே இருந்தாலும் ரசிக்கும்படியாக இருந்தது.
மொத்தத்தில் மரகதநாணயம் எடுத்த இயக்குனரின் வீரன் திரைப்படம், எதிர்பார்ப்பை சற்று தவறவிட்டிருக்கிறது.
வீரன் – வீரனைக் காண குடும்பமாகவே செல்லலாம்…